Published : 02,Aug 2017 02:44 PM
நாட்டின் முதல் புல்லெட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

நாட்டின் முதல் புல்லெட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் செப்டம்பரில் நடைபெற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த தகவலைத் தெரிவித்தார். மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லெட் ரயில் சேவைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகவும் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் 2023ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும் ரயில்வேத் துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்காக இந்திய ரயில்வேத் துறையைச் சேர்ந்த 4,000 பொறியாளர்கள் ஜப்பான் ரயில்வேத் துறையால் பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும், அதில் 137 பேர் ஏற்கனவே பயிற்சி பெற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2016 நவம்பரில் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து டோக்கியோ – கோப் நகரங்கள் இடையிலான புல்லெட் ரயிலில் பயணித்தார். அவ்விரு நகரங்கள் இடையிலான புல்லெட் ரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமே மும்பை-அகமதாபாத் புல்லெட் ரயில் திட்டத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-ஜப்பான் இடையே கடந்த 2015ல் கையெழுத்தானது.