[X] Close

உச்சத்தில் தோனியின் கேப்டன்சி - இந்திய அணியின் கைகளில் சாம்பியன்ஸ் டிராபி தவழ்ந்த நாள்!

விளையாட்டு,சிறப்புக் களம்

On-this-day-the-Indian-cricket-team-won-the-Champions-Trophy-cricket-in-2013-because-of-Dhoni-s-captaincy-and-his-team

கால சக்கரத்தை இதே நாளில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பின்னோக்கி சுழற்றினால் இந்திய கிரிக்கெட்  அணி வரலாறு படைத்த நாளை அடையலாம். இங்கிலாந்து அணிக்கு எதிரான அன்றைய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. தோனியின் தலைமையின் கீழ் இந்தியா வென்ற மூன்றாவது ஐசிசி டைட்டில் அது. 


Advertisement

மேட்ச் ரி-கேப்! 

மழை காரணமாக இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டி 20 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தது. இந்தியா 20 ஓவர்களில் 129 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 130 ரன்களை எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த அணி தனது சொந்த மண்ணில் வெறும் 124 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தின் வெற்றி தோனி மற்றும் அணியினரையே சாரும். 


Advertisement

image

கேப்டன்சியில் கெத்து காட்டிய தோனி! 

நெருக்கடி மிக்க இந்த போட்டியில் மிகவும் கூலாக சூழலை ஹேண்டில் செய்தார் தோனி. அதற்கு முன்னதாக தோனி தலைமையில் இந்திய அணி வென்ற டி20 உலக கோப்பை (2007) மற்றும் 50 ஓவர் உலக கோப்பை (2011) அணியில் சீனியர் வீரர்களும் இருந்தனர். ஆனால் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் முழுவதும் இளம் வீரர்கள் நிறைந்திருந்தனர். அதில் சிலர் தோனி கேப்டனான பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர்கள். இந்த அணி கிட்டத்தட்ட தோனி அமைத்த அணி எனவும் சொல்லலாம். பின்வரிசையில் ஆடிய ரோகித் ஷர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கியது தொடங்கி அனைத்தும் தோனியின் யோசனை. இப்படி பல விஷயங்களை சொல்லலாம் இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் உள்ள தோனியின் யோசனைகள் உள்ளன. 


Advertisement

சுலப இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிய போதும் அடுத்து யார் பந்து வீசுவார் என கணிக்க முடியாத அளவுக்கு பவுலர்களை ரொட்டேட் செய்தார் தோனி. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் 11 ஓவர்களை வீசியது சுழற்பந்து வீச்சாளர்கள். ஆட்டம் நடந்த அன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுத்தது. அஷ்வின், ஜடேஜாவை தவிர பார்ட் டைம் ஸ்பின்னரான ரெய்னாவையும் பந்து வீச செய்திருந்தார் தோனி. இஷாந்த் ஷர்மா பந்துவீச்சை செமையாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பொளந்து கட்டிய போதும் தொடர்ந்து அவரை பந்து வீச சொன்னார். 4 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளி இருப்பார் இஷாந்த். இந்த இரண்டு விக்கெட்டுகளும் தனது கடைசி ஓவரில் இஷாந்த் எடுத்திருப்பார். மோர்கன் மற்றும் ரவி பொப்பாரா என இரண்டு செட் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் இஷாந்த் காலி செய்திருப்பார். 

இதைவிட கடைசி இரண்டு ஓவர்களை முறையே ஜடேஜா மற்றும் அஷ்வினை வீச செய்து மாஸ் காட்டியிருப்பார் தோனி. 

“நாங்கள் பேட் செய்த போது 130 ரன்களை நெருங்கினால் போதும் என எண்ணினோம். நாங்கள் ‘நெம்பர் 1’ டீம் என்பதை போல எங்கள் ஆட்டம் இருக்க வேண்டுமென விரும்பினோம். இந்த ஆட்டத்தில் பவர்பிளேதான் மிகவும் முக்கியமான ஓவர்களாகும். அதில் எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நெருக்கடியை எங்கள் வீரர்கள் சிறப்பாக கையாண்டனர்” என தோனி வெற்றிக்கு பிறகு சொல்லி இருந்தார். 

image

இஷாந்த் ஷர்மா - “நான் கொஞ்சம் அச்சத்துடனே இருந்தேன். ஏனோ எதுவும் எனக்கு செட்டாகவில்லை. இருந்தாலும் என் மீது தோனி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை” என ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார் இஷாந்த். 

அஷ்வின் கூட காட்சி ஊடகம் உடனான பேட்டியில் ‘கடைசி ஓவரை நான்தான் வீசுவேன் என்பது எனக்கு 19வது ஓவரில்தான் தெரியும்’ என சொல்லி இருந்தார். 

கோலி, ஜடேஜா, தவான், அஷ்வின் என இந்திய அணி வீரர்களின் உதவியுடன் தோனி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த நாள் இன்று. 


Advertisement

Advertisement
[X] Close