[X] Close

'அரசின் தரவு சரியானதல்ல' - மனிதக் கழிவை மனிதரே அள்ளும் அவலம்... தீர்வு காண்பாரா முதல்வர்?

இந்தியா,சிறப்புக் களம்,சுற்றுச்சூழல்

There-are-425-manual-scavengers-in-Tamilnadu----Will-the-CM-M-K-Stalin-find-a-solution-

தமிழ்நாட்டில் 425 பேர் மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிநிலையில் தள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், இந்த புள்ளிவிவரமே சரியானது அல்ல என்றக் குரலும் ஓங்கியிருக்கிறது. இந்தப் பேரவலத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்றிலும் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


Advertisement

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது. இது மனித சமூகத்தின் மாபெரும் அவமானமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பாக தொடர்ச்சியான கண்டனங்களும் விமர்சனங்களும் வைக்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் கடந்து செல்லும் பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நம் கண்முன்னே நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

image


Advertisement

இதனைத் தடுப்பதற்கான 1994-ம் ஆண்டு 'தேசியத் தூய்மைப் பணியாளர் ஆணையம்' உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கவும், கையால் மலம் அள்ளும் இழிநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களைக் கண்காணிக்கவும் வழிவகுக்கப்பட்டது. பின்னர், 2013-ல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், சட்டம் இருந்தாலும், நாடு முழுவதும் இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் 66,692 பேர் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 37,379 பேர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், மகாராஷ்டிரா 7,378 பேருடன் இரண்டாவது இடத்திலும், உத்தராகண்ட் 6,170 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

image


Advertisement

தமிழ்நாட்டில் 425 பேர் மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிநிலையில் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நகரங்களில் மழைக்காலத்தில் அதிக நீர்த்தேக்கம் ஏற்படும். இதனைத் தடுக்க மனிதர்களை வைத்து தங்கள் வீட்டு செப்டிக் டேங்குகளை தூர்வாரச் செய்யும் அவலமானது அதிகளவில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இது மட்டுமின்றி அதிகம் பாதிக்கப்படும் மக்கள் ரயில் போக்குவரத்திலும் உள்ளனர். உலகளவில் உள்ள ரயில் போக்குவரத்திலேயே இந்தியா மிகவும் பெரியது. குறிப்பாக, 13 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு இந்திய ரயில்வே இயங்கி வருகிறது. இதே துறையில்தான் அதிகமாக மலம் அள்ளும் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது எனவும் தேசியத் தூய்மைப் பணியாளர் ஆணையம் சொல்கிறது.

இந்த அவல நிலைக்கு முடிவுகட்ட எண்ணி பல்வேறு தன்னார்வ இயக்கங்கள், தலைவர்கள் எனப் பலரும் தொடர்ந்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். எனினும் இந்த அவலம் முடிவுக்கு வந்ததாக இல்லை.

இந்த அவல நிலையில் சிக்கிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய அளவில் 340 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2016-ல் 6 பேரும், 2017-ல் 7 பேரும், 2018-ல் 9 பேரும், 2019-ல் 12 பேரும் 2020-ல் 9 பேர் என 5 ஆண்டுகளில் மொத்தம் 43 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இறப்புகளுக்கு முக்கியக் காரணம், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்காமல் இருப்பதே என்பது பலரின் கருத்தாகவும் உள்ளது.

image

தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றமும் தேசிய தூய்மைப் பணி தொழிலாளர்கள் ஆணையமும் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளன. ஆனால், ஏட்டில் உள்ள வழிமுறைகள் பயன்பாட்டிற்கு வந்தால்தான் இந்த மானுட அவலம் மறையும்.

சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவருக்கு மறுவாழ்வு தரும் வகையில் ''தூய்மைப் பணியாளர்களுக்கான மறுவாழ்வு சுயதொழில் திட்டம்" கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதன்மூலம், தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு தவணைப் பண உதவியாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. குறைந்த வட்டியில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெற உதவி செய்யப்படுகிறது. மேலும், மூலத்தனக் கடனாக ரூ.3,25,000 வரையும், 3000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் இரண்டு ஆண்டுகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுவதாகக் கூறுகிறது.

நீதிமன்றங்கள் கூறும் கருத்துக்கள் என்னென்ன?

"மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்ற வைப்பது மனிதாபிமானமற்ற செயல்" என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறுகிறது.

"தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட போதும் கொடுமைகள் தொடர்வது ஏன்?" என அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

"சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபோதிலும் சாதிய பாகுபாடுகள் தொடர்கின்றன. எந்த நாடும் தங்கள் குடிமக்களைத் தெரிந்தே சவக்குழிக்குள் அனுப்புவதில்லை" என உச்சநீதிமன்றமும் தெரிவிக்கிறது. மேலும், மனிதக் கழிவுகளை அகற்றும்போது இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது.

image

இது தொடர்பாக, 'புதிய தலைமுறை'யின் 'நியூஸ் 360' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதி தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன் கூறுகையில், "அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல. யாரெல்லாம் தூய்மைப்பணி தொழிலைச் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் மனிதக் கழிவை அள்ளுபவர்கள்தான். பாதாளச் சாக்கடைகளில் இறங்கி வேலை செய்பவர்கள், செப்டிக் டேங்குகளில் இறங்கி வேலைசெய்பவர்கள் என இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவருமே மனிதக் கழிவை அள்ளுபவர்கள்தான்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 99 சதவிகிதம் பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மீதமுள்ள 1 சதவிகிதத்தினர் வேலையில் சேர்ந்தாலும், அதே துறையில் வேறு வேலைகளைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர்.

இந்தப் பணியைச் செய்யக்கூடாது எனச் சட்டம் இருக்கிறது. ஆனால், இதை யாரும் மதிப்பதே இல்லை. இதற்கு மாற்றாக இயந்திரம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு 99 சதவிகித இடங்களில் இயந்திரங்களே இல்லை. கோயம்புத்தூர், கும்பகோணம் போன்ற ஒரு சில இடங்களில் இயந்திரங்கள் வாங்கப்பட்டாலும், முறையாகப் பயன்படுத்துவதில்லை. உதயநிதி ஸ்டாலின் அவருடைய தொகுதியில் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் இயந்திரங்கள் வழங்கத் தமிழக அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஜக்கையன்.

image

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மனித கழிவுகளை அகற்றும் முறையை ஒழிக்க இயந்திரம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை முதன்முறையாகத் தமிழகத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு பகுதியில், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close