Published : 22,Jun 2021 08:58 PM

'தி ஃபேமிலி மேன்', 'ஜகமே தந்திரம்' மற்றும் சில...- ஈழத் தமிழர் சித்தரிப்பும் எதிர்வினையும்

The-Family-Man-2--Jagame-Thanthiram-and-Portrayals-of-Sri-Lankan-Tamils-in-Indian-cinema

கடந்த ஒரு மாதமாகவே இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது, இந்திய சினிமாவில் இலங்கைத் தமிழர்களின் சித்தரிப்பு என்னும் விஷயம். ஒருபக்கம் ஆரோக்கியமான விவாதமாகவும், இன்னொரு பக்கம் அடிதடி சண்டையாகவும் நடந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை முன்வைக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் முன்னோட்டம் வந்தபோதிருந்தே பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன. அதில் விடுதலைப்புலிகளுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனத்தோடு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்ட வசனம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. தொடரை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்கிற குரல், தமிழக அரசாங்கத்திடம் இருந்தும் எழுந்தது. இன்னொருபுறம் "ஒரு படைப்பு முழுமையாக வெளிவரும் முன்னரே இப்படியான எதிர்வினைகள் நிகழ்வது சரியல்ல" என்கிற வாதமும் வைக்கப்பட்டது. ஒருவழியாக தொடரும் வெளியானது. தொடரை எதிர்த்தவர்கள் எண்ணத்தை பூர்த்திசெய்வது போலவே, பல இடங்களில் இலங்கைத் தமிழர்களும், விடுதலைப்புலிகள் இயக்கமும் ஒரு சார்பாக காட்டப்பட்டிருப்பதாக கூறி பலரும் வெகுண்டெழுந்தனர்.

image

குறிப்பாக இலங்கைத் தமிழர் பலர் இந்தத் தொடர், தேசியவாதம் பேசும் இந்தியர்களின் அஜெண்டாவை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட ஒன்று என்று குற்றம்சாட்டினர். அவர்களின் குற்றச்சாட்டுகள் இவை:

1. எப்படி ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் தலைவர் தனது சொந்த விருப்பு, வெறுப்பிற்காக பயிற்சி பெற்ற போராளிகளை உபயோகிப்பதாக காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியும் என்பதே அவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு. கதைப்படி, இது மிகவும் வலுவாகவும் சொல்லப்பட்டிருப்பதால், இந்தக் குற்றச்சாட்டு பலம் வாய்ந்த ஒன்றாகவும் கருதப்பட்டது.

2. குடிப்பழக்கம் கொண்ட இயக்கத்தின் தலைவர் தனது போராளி ஒருவரை குடிக்கக்கூடாது என்று கூறும் காட்சி அபத்தமான ஒன்று என்று கடுமையான எதிர் விமர்சனம் வைக்கப்பட்டது.

3. ராஜி என்கிற பெண் போராளியை சித்தரித்த விதம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. அந்த கதாப்பாத்திர வடிவமைப்பு உண்மையான விடுதலைப்புலி போராளி ஒருவரை எந்த இடத்திலும் பிரதிபலிக்கவில்லை என்றும், காசு கொடுத்தால் அல்லது தனது தேவைக்காக எதையும் செய்யும் ஒரு கதாபாத்திரம் போலவே இருந்ததாகவும் பொங்கி எழுந்தனர்.

பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் இலங்கைத் தமிழர் போராட்டத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மையப்படுத்தி தமிழில் எடுக்கப்பட்ட எல்லா படங்களின் மீதும் வைக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழரல்லாது, வட மாநிலங்களில் இருப்பவர்கள் இந்தக் கதைகளை அணுகுகையில், அவர்களுக்கு ஈழப் போராட்டம் பற்றிய அறிவோ அல்லது அதன் ஆழமோ புரியாமல், தங்கள் திரைக்கதைக்கு தேவையான வடிவில் அதை வளைத்து படமாக அல்லது தொடராக எடுத்து வெளியிடுவதை ஒரு வேலையாக வைத்திருக்கின்றனர் என்றும் பரவலாக பேசவும், விவாதிக்கவும் செய்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் தனுஷ் நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்' வெளிவந்தது. ஓடிடி தளத்தில் வெளிவந்ததால் முதல்நாளே பரவலாக இணையம் முழுக்க இந்தப் படம் மிகவும் விமர்சிக்கப்பட்டது. அதில் எதிர்மறை விமர்சனமே அதிகம். படத்தின் திரைக்கதை தொய்வும், யூகிக்கக்கூடிய காட்சிகளும், லாஜிக் இல்லாத பல தருணங்களும் இதற்கு காரணமாய் இருந்தபோதிலும், அதையெல்லாம்விட முக்கியமாக படத்தில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் காட்டப்பட்ட விதம் மீண்டும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கதையோ லண்டனில் நடப்பதால், அதுவும் தமிழ்ப் படம் என்பதால் இயக்குநர் புலம்பெயர் தமிழர்களை இதில் முக்கிய பாத்திரங்களாக மாற்றினார். ஆனால், கதையில் அவர்கள் கள்ளக்கடத்தல் செய்வது போலவும், கொலை, கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்வது போலவும் காட்சியமைத்திருந்ததால், ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் தவறாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், தங்களின் திரைக்கதை தேவைக்காக ஈழத்தமிழர்களை கொச்சையாக சித்தரிப்பது தமிழக இயக்குநர்களின் வழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதும் இவர்களின் வாதமாக இருக்கிறது.

image

சரி, இந்த குற்றச்சாட்டுகள் நியாயமானதா? இந்தியாவில் இருந்து வெளிவரும் படைப்புகள் அப்படித்தான் இலங்கைத் தமிழர்களை அணுகுகிறதா என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.

ஆரம்ப காலகட்டம் தொட்டே தமிழ்ப் படங்களில் ஈழத் தமிழர்கள் காட்டப்படும் முறை விமர்சிக்கப்பட்ட வந்திருக்கிறது. 'புன்னகை மன்னன்' படத்தில் ரேவதி ஒரு சிங்களப் பெண்ணாக நடித்திருப்பார். ரேவதியின் மீது கோபப்படும் இலங்கைத் தமிழராக ஹுசைனி வருவார். இது மிகப்பெரிய பிரச்னைகளை எழுப்ப, படம் எடுத்துமுடித்த பின்னர் இந்தப் படத்தை இயக்குநர் கே.பாலசந்தரே முழுமையாக இறுதிவரை பார்க்கவே இல்லை என்று கூறுவர். அந்த அளவுக்கு அவர் மன உளைச்சலுக்கு ஆளானாராம்.

அதன்பின்னர் அங்கும் இங்கும் சில இடங்களில் இலங்கைத் தமிழர் திரையில் வந்து போனாலும் கூட 'கன்னத்தில் முத்தமிட்டால்' மற்றும் 'தெனாலி' ஆகிய இரண்டு படங்களும் விமர்சனத்துக்குள்ளானது. 'தெனாலி' என்னதான் நகைச்சுவை படமாக இருந்தாலும் கூட, கமல்ஹாசன் அதில் பேசும் தமிழ் இலங்கையின் எந்தப் பகுதியிலும் இப்போது பேசப்படுவதே இல்லை என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது. இன்றும் அதே நிலைமைதான் தொடர்கிறது. இலங்கைத் தமிழ் என்கிற போர்வையில் பாலக்காட்டு தமிழ்தான் இவர்கள் பேசுகிறார்களோ என்கிற கேள்வியும் முன்வைக்கிறார்கள்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படம் இன்னும் அதிகமாக விமர்சனத்திற்குள்ளானது. ஈழத் தமிழர்களை கொன்றெடுத்த சிங்களவர்களை தூக்கிப்பிடிப்பதாகவும், மனித வெடிகுண்டாக மாறும் மனநிலை உள்ள ஒருவனை தவறாக சித்தரித்ததாகவும் விவாதம் எழுந்தது. 'நந்தா' போன்ற படங்கள் ஈழத் தமிழர்களை அகதிகள் என்று கூறாமல், "தாய்நாடு திரும்பியவர்கள்" என்று கூற சொன்னதால், உண்மையில் அதில் எப்படி கருத்து தெரிவிப்பது என்கிற குழப்பமே பலருக்கும் எழுந்தது. இதோ இப்போது 'தி ஃபேமிலி மேன் 2' மற்றும் 'ஜகமே தந்திரம்' உபயத்தில் இன்னும் பல புது பூகம்பங்கள் எழுந்துள்ளன.

image

'தி ஃபேமிலி மேன் 2' ஒரு கற்பனைக் கதை. அதிலும் முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் தொடர்பு இருக்கவேண்டிய கட்டாயமும் திரைக்கதையில் இருந்தது. அதன் காரணமாகவே பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியை ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அதுபோக, ஈழ விடுதலை அமைப்புக்கும், உலகின் பல தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்ததாகவும் முன்பிருந்தே பல அனுமானங்கள் இங்கே இருந்தவண்ணமே உள்ளன. அதற்கு வடிவம் கொடுத்து எடுக்கப்பட்டதாலேயே 'ஃபேமிலி மேன் 2' தொடர் இந்த கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. கற்பனை கதையாகவே ஆயினும் கூட, இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்தின் போராட்டத்தை இப்படி கொச்சைப்படுத்துதல் எந்தவகையிலும் நியாயமில்லை என்கிற அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

ஆனால், அதேநேரத்தில் எந்தளவு காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் வடமாநிலங்களுக்கு பரிச்சயமோ, அந்தளவு ஈழப் பிரச்னை கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் ஆதாயமாக்கப்பட்ட ஒரு பிரச்னையாகவே ஈழப்போராட்டம் வடமாநிலங்களில் அணுகப்படுகிறதே தவிர, அவர்களுக்கு இது ஓர் அண்டை நாட்டு பிரச்னை என்கிற அளவில்தான் புரிதல் இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், எப்படி தங்களது படங்களில் பாகிஸ்தான் வாழ் இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்று பொதுப்படையாக சித்தரிக்கின்றனரோ அதேபோன்றுதான் அவர்கள் இலங்கைப் பிரச்னைகளையும் அணுகுகின்றனர். ஈழப்போராட்டம் பற்றிய தெளிவான ஆவணப்படங்களோ அல்லது கலைப்படங்களோ இதுவரை வெளியாகாத, பிரபலமாகாத சூழ்நிலையில், 'தி ஃபேமிலி மேன்' போன்ற தொடர்கள் உண்மை நிகழ்வை கற்பனையாக்குவது தொடரச் செய்யும் என்பதையும் நம்மால் மறுக்க இயலாது. ஆனால், இதே தொடரில் "தான் ஏன் ஒரு போராளியாக ஆனேன்" என்பதை ராஜி கதாபாத்திரம் விளக்கும் காட்சி மிகவும் தெளிவாக எழுதப்பட்ட ஒன்று.

மறுபுறம் 'ஜகமே தந்திரம்' ஈழத்தில் இருந்து போரின் காரணமாக புலம்பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது எதிர்கொள்ளும் கடினங்களை விரிவாகப் பேசியது. தமிழ் சினிமாவில் இதற்குமுன்னர் இந்த விஷயம் பேசப்பட்டதில்லை என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்னையை கமல்ஹாசன் - மாதவனின் 'நளதமயந்தி' ரொமான்ட்டிக் காமெடி பாணியில் பேசியது. ஆனால், அதையே சற்றே தீவிரத்தன்மையுடன் 'ஜகமே தந்திரம்' பேசியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நாடற்றவர்களின் வலியையும் பேச முயன்று, அதற்கு எடுத்துக்கொண்ட வழியில் பிசகியிருக்கிறது 'ஜகமே தந்திரம்'. ஆனாலும், இந்த சப்ஜெக்ட்டை தொட்டதும் கவனிக்க வேண்டிய ஒன்றுதான். படத்தின் இறுதிக் காட்சிகூட, நாடற்றவர்களின் வலியை, அகதிகளுக்கு உகந்த குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களுக்கு கடத்தும் சர்க்காஸ்டிக் முயற்சி செய்யப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.

image

ஆனால், புலம்பெயர் தமிழர்களை ஆரம்பத்தில் தவறாக சித்தரித்தது பூதாகரமான விஷயமாக மாறி இருந்ததால், இந்தக் குறிப்பிட்ட பகுதியும் சேர்ந்தே விமர்சிக்கப்பட்டது. "எங்களுக்கு என்னங்க தெரியும்? போர் நடந்ததுன்னு சொன்னா "ஐயோ அப்படியா"ன்னு கொஞ்சநேரம் உச்சு கொட்டிட்டு, வருத்தப்பட்டு, அப்புறம் எங்க பொழப்ப பார்க்க போயிருவோம்..." என்று சுருளி பேசும் வசனம், தமிழ் ஈழத்தை பற்றிய இந்திய தமிழர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிப்பதாக இருந்ததையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

உண்மையில் இந்திய சினிமாவில் ஈழம் பற்றியும், அங்கு நடந்த போர் பற்றியும் எளிதில் காட்சிப்படுத்திட இயலாது. தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்தைப் பற்றிய பதிவை பொதுவில் வைப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் உண்டு. 'குற்றப்பத்திரிக்கை' என்கிற படம் பட்ட பாட்டை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறப்படும் சிலர் இன்னும் விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த இறுக்கமான சூழ்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் இந்த மாதிரியான படங்கள் அல்லது தொடர்கள் இன்னும் சற்று கவனமாக, உணர்ச்சிபூர்வமாக ஈழத்தமிழர் பிரச்னைகளை அணுகவேண்டும் என்பதே அவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதை நிறைவேற்றும் கடமையும் நம் படைப்பாளிகளுக்கு உள்ளது. ஆனால், வணிக சமரசம் மிகுந்த இந்தச் சூழலில் அவை எந்தளவு சாத்தியம் என்பதையும் நாம் யோசித்தே ஆகவேண்டும். மேலும், அப்படி வணிக நோக்குக்காக இலங்கை தமிழர்களை மற்றும் அவர்களின் போராட்டங்களை கொச்சையாக சித்தரிப்பதை விட அதை எடுக்காமலேயே இருக்கலாம் என்பதும் ஈழத் தமிழர்களின் ஆதங்கமாக இருப்பதை காணமுடிகிறது.

"எந்தப் படத்தில் ஈழத்தை காட்டினாலும் குறை சொல்லும் இலங்கைத் தமிழர்கள், ஏன் அவர்களே ஒரு படம் எடுத்து இதை உலகிற்கு பறைசாற்றக்கூடாது?" என்கிற கேள்வியும் இங்கே எழாமல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டைப் போல் இலங்கையில் திரைப்படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல என்பதுதான் இங்கே பிரச்னையே. எந்தப் படம் எடுப்பதற்கு முன்பும் இலங்கையின் தணிக்கைத்துறைக்கு முழு திரைக்கதையையும் ஒப்புவிக்க வேண்டும். அதில், அவர்கள் சொல்லும் மாற்றங்களை செய்தே ஆகவேண்டும். அவர்களது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாக அவை இல்லாது போனால், அந்தத் திரைக்கதை நிராகரிக்கப்படும். இதை மீறி படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் திரைக்கதைகள் புண்ணியம் செய்தவை. ஆனாலும் படப்பிடிப்பு நடக்கையில் தணிக்கைத் துறையை சேர்ந்த ஒருவரும் எப்போதும் உடனிருப்பார். அவர் வந்தபின்னர்தான் கேமராவை வெளியே எடுக்கமுடியும். இப்படியான சூழலில் ஈழப்போர் பற்றிய சரியான படம் ஒன்று இலங்கையில் இருந்து வருவது சாத்தியமே இல்லாத ஒன்று.

மேலும், இந்திய சமூகத்தில் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து பல படங்களில் சித்தரித்ததின் விளைவாக முஸ்லிம்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை உணர்வை உருவாக்கி வைத்தார்கள். அதேபோல் காஷ்மீர் பிரச்னைகள் பற்றிய முழுப் புரிதல் எதுவும் இன்றி கூட இங்கே பல படங்கள் வெளியாகி சர்ச்சையாகின. இதே நிலைமை ஈழப் போராட்டத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே அவர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. இதில் நியாயமும் இருக்கிறது. ஆக, படைப்பாளிகளும் பொறுப்புணர்வோடு செயல்படவேண்டிய காலம் இது என்பதை இங்கே பதிவு செய்வது நம் கடமையாகிறது. இனி வரும் காலங்களிலாவது இவை சரியான முறையில் நிகழும் என்று நம்புவோம்.

- பால கணேசன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்