ஓடிடி திரைப் பார்வை: '42' - இனவெறிக்கு எதிராக மைதானத்தில் களமாடிய ஜாக்கி ராபின்சன்!

ஓடிடி திரைப் பார்வை: '42' - இனவெறிக்கு எதிராக மைதானத்தில் களமாடிய ஜாக்கி ராபின்சன்!
ஓடிடி திரைப் பார்வை: '42' - இனவெறிக்கு எதிராக மைதானத்தில் களமாடிய ஜாக்கி ராபின்சன்!

கிரிக்கெட், கால்பந்து, பேஸ் பால், கபடி, ஹாக்கி என உலகம் முழுக்க விளையாடப்படும் குழு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பிறப்பு, வரலாறு என்றெல்லாம் உண்டு. எல்லா நாடுகளிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றனதான். ஆனால் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் குழு என ஒன்று உண்டில்லையா? அதன் செயல்பாடுகள் என்ன? ஒரு வீரர் அணியில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்? திறமைதான் உண்மையில் அளவீடாக பார்க்கப்படுகிறதா? - இந்தக் கேள்விகளுக்கு பொதுவான பதில் 'இல்லை' என்பதுதான்.

மனிதன், மனிதனை விலை பேசி விற்ற காலமெல்லாம் மலையேறி விட்டதாக நினைக்கலாம். ஆனால் இன்றும் மனிதர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். பகிரங்கமாக விற்கப்படுகிறார்கள். ஒரு கிரிக்கெட் வீரரை இந்த நிறுவனமோ, இந்த நடிகரோ இந்த விலைக்கு ஏலமெடுத்தார், இந்த வீரர் இத்தனை கோடிக்கு விலைபோனார் என்பது வெறும் செய்தியாக கடந்து போக வேண்டிய விஷயமல்ல. இது ஆபத்தான மனித வியாபாரம்.

2013-ஆம் ஆண்டு வெளியான '42' என்ற இந்த சினிமா கருப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்சனின் வாழ்க்கையினைப் பேசுகிறது. யூடியூபில் கிடைக்கும் இந்த பயோபிக், இனவெறி ஆதிக்கம் குறித்த பல திறப்புகளை நமக்குத் தருகிறது.

அமெரிக்கர்களின் ப்ரிய விளையாட்டான பேஸ்பால் ஆட்டத்தில் 1947 வரை கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ‘ப்ரூக்லின் டூக்கர்ஸ்’ என்ற பேஸ்பால் விளையாட்டு அமைப்பை 'ரிக்கி' என்ற முதியவர் நிர்வகித்து வருகிறார். அவர் முன்னாள் பேஸ்பால் வீரரும் கூட. அவர் இந்த விளையாட்டை சில வேறு கோணங்களில் பார்க்கிறார். ஒன்று இதில் நிறவெறி கூடாது; மற்றொன்று இது அவரது பிரதான வணிகம். ஒரு காட்சியில் “டாலர்கள் கருப்பும் இல்லை, சிவப்பும் இல்லை... அது பச்சை நிறம், எனக்கு அதுதான் பிடிக்கும்” என பணத்தின் மீதான தனது பார்வையை பேசுகிறார்.

‘ஜாக்கி ராபின்சன்’ என்ற கருப்பினத்தை சேர்ந்த நீக்ரோ இளைஞனை அவர் தனது பேஸ்பால் குழுவில் விளையாட ஒப்பந்தம் போடுகிறார். அதுவரை வெள்ளையர்கள் மட்டுமே விளையாடும் இந்த விளையாட்டில் புதிதாக ஒரு நீக்ரோ சேர்க்கப்பட்டால் சந்திக்க நேரிடும் விளைவுகளை அவர் நன்கு அறிவார். ஆனாலும் அதனைச் செய்வதால் பெறப்படும் கவனத்தையும் வணிக லாபத்தையும் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுக்கிறார் அவர்.

‘ப்ரூக்லின் டூக்கர்ஸ்’ பேஸ்பால் குழுவில் இணைந்து விளையாட ஜாக்கி ராபின்சனுக்கு பெரும் தொகை ஊதியமாக பேசப்படுகிறது. ஆனால் ராபின்சனை பொறுத்தவரை இது அவருக்கும் அவரது இனத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால், தன் இனத்தின் இருள் பயணத்தில் முகப்பு விளக்காக அவரது வெற்றி பார்க்கப்படும். ‘ஜாக்கி ராபின்சன்’ துணிச்சலாக விளையாட ஒப்புக்கொள்கிறார்.

அவருடைய சக வீரர்கள் ஜாக்கி ராபின்சனை சற்றும் மதிப்பதில்லை; அவர்களோடு இணைந்து உணவோ தங்கிமிடமோ கூட ஜாக்கியால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மைதானத்தில் விளையாடும்போது எதிர் அணியினரால் “ஏய் நீக்ரோ, ஏய் நீக்ரோ” என பகிரங்கமாகவே அவர் சீண்டப்படுகிறார். ஆனால் அவரது இலக்கு தன்னை சீண்டுபவர்களுக்கு தற்காலிகமாக பதில் சொல்வது அல்ல... ஒடுக்கப்படும் தங்கள் கருப்பின மக்களுக்கான நிரந்தர வெற்றி வாசலை திறக்கும் சாவி அவரிடம் உள்ளது. அந்த பெரும் பொறுப்பு அவரை பொறுமையாக இருக்கச் செய்கிறது. என்றாலும் அவரும் மனிதன்தானே... நிராகரிப்புகளால் சில வேளைகளில் உடைந்து போகிறார். உணர்சிவசப்பட்டு அழுகிறார். ஆனாலும் அவரது மக்கள் ஜாக்கியின் மனைவி என எல்லோரும் அவருக்கு ஊக்கம் கொடுக்கிறார்கள்.

மைதானத்தில் ஜாக்கி ராபின்சன் பெரிய சாகசம் செய்தாலும் கூட கேலரி வெள்ளையர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தாமல் மவுனமாக இருக்கிறார்கள். ஆனால் ஜாக்கி எதையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அவர் உழைப்பது, அவரது திறமைக்கு கிடைக்கப் போகும் புகழுக்கோ அங்கீகாரத்துக்கோ இல்லை. பேஸ்பால் விளையாட்டில் கருப்பினத்தவர்களுக்கும் ஓர் இடம்... அது மட்டும்தான் அவரை உந்தித் தள்ளியது. அது ஜாக்கிக்கு வெறும் மைதானம் அல்ல, யுத்தக்களம். அந்த வெறி அவரது ஆட்டத்தில் வெளிப்படுகிறது.

ஆனால், இறுதியாக ஜாக்கி நினைத்த வெற்றி இலக்கை அடைய முடிந்ததா என்பதை படம் பார்த்துத் தான் தெரிந்து கொள்ளவேண்டும். இது ஒரு உண்மைக் கதை என்பதால் நாயகன் ‘ஜாக்கி ராபின்சன்’ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

1919ல் ஜோர்ஜியாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே தன் தந்தையால் கலிபோர்னியா அழைத்துவரப்பட்டு அங்கு வளர்ந்தார். மேஜர் லீக் பேஸ்பால் சங்கத்தில் சேர்ந்து விளையாடிய முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர் இவர். 1947ல் தனது விளையாட்டு வாழ்வை துவங்கிய அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அத்துறையில் கோளோச்சினார். அதுவரை பேஸ்பால் ஆட்டத்தில் இருந்த நிறவெறி தழும்புகளை தனது வியர்வையால் அழித்தார் அவர். அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜாக்கி ராபின்சன் தனது 53வது வயதில் நீரிழிவு நோயால் காலமானார். அவர் அணிந்து விளையாடிய சீருடை எண் ‘42’. அதனை இன்றும் அமெரிக்க பேஸ்பால் வீரர்கள் வருடத்திற்கு ஒரு முறை அவர் நினைவாக அணிந்து கொள்வார்கள். நீக்ரோ லீக்ஸ், மைனர் லீக்ஸ், மேஜர் லீக்ஸ் என படிப்படியாத உயரம் தொட்டவர் ‘ஜாக்கி ராபின்சன்’. அமெரிக்காவில் அவருக்கு நினைவிடங்கள் அவர் பெயரால் விளையாட்டு கழகங்கள் எல்லாம் உண்டு.

ஜாக்கி ராபின்சன் வாழ்க்கையின் சில பகுதிகளை இயக்குனர் பிரையின் ஹெல்ஜிலாண்ட், அவர் அணிந்து விளையாடிய சீருடை எண் ‘42’ என்ற பெயரிலேயே சினிமாவாக இயக்கினார். 2013ஆம் வருடம் வெளியான இத்திரைப்படம் ஆப்ரிக்கன்-அமெரிக்கன் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதை பெற்றது. மேலும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஹோச்சி பிலிம் விருது 2013, கீ ஆர்ட்ஸ் வழங்கும் சிறந்த ஒலி, ஒளி தொழில்நுட்பத்திற்கான விருது என பல விருதுகளை இப்படம் பெற்றது.

இங்கு விளையாட்டு வெறும் விளையாட்டாக இல்லை... அது விளையாட்டு காரியமும் இல்லை... அதற்குள் ஓர் அரசியல் இருக்கிறது, நிறவெறி இருக்கிறது, அதிகாரம் ஒளிந்திருக்கிறது. இரு எதிரி நாடுகள் மைதானத்தில் மோதிக் கொள்வதை விளையாட்டாக அல்லாமல் யுத்தம் போல சித்தரிப்பதன் மூலம் ஆதாயம் பெறுவது பன்னாட்டு நிறுவனங்களும் சூதாட்டத்தரகர்களும் தானே..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com