[X] Close

அவைக்கு வராத பாஜக எம்பிக்களுக்கு அமித்ஷா கண்டிப்பு

Amit-Shah-strictly-adheres-to-BJP-MPs

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது கண்டிப்பாக அவையின் உள்ளே இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.களுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு நடுவே பல்வேறு மசோதாக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படுகிறது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடர்பான சட்ட திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்தது. விவாதம் முடிவடைந்து திருத்தங்கள் மீது வாக்கெடுப்பும் நடைபெற்றது.

வாக்கெடுப்பின் போது, பா.ஜ.க. தரப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சுமார் 30 எம்.பி.க்கள் அவையில் இல்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிட்டது. அவர்கள் கொண்டு வந்த திருத்தங்கள் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இது பா.ஜ.க. தரப்புக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. 


Advertisement

இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அவை நடைபெறும் போது கண்டிப்பாக உள்ளே இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.களுக்கு அமித்ஷா வலியுறுத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்த் குமார், "பா.ஜ.க. எம்.பி.க்கள்  நிச்சயம் அவையில் இருக்க வேண்டும். அவையில் எம்.பி.க்கள் இல்லாத விவகாரத்தை தலைவர் தீவிரமாக எடுத்துள்ளார். இது போன்று திரும்பவும் நடைபெறக் கூடாது” என்றார்.  


Advertisement

Advertisement
[X] Close