Published : 14,Jun 2021 06:20 PM

'5 நிமிடங்களில் ரூ.18.5 கோடியாக மாறிய ரூ.2 கோடி' - ராமர் கோயில் நில மதிப்பு மோசடி சர்ச்சை

Corruption-issues-in-land-purchase-for-Ayodhya-Ram-temple

அயோத்தி ராமர் கோயிலுக்காக வாங்கிய நிலம், 2 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்த ஒப்பந்தத்தை மாற்றி 18.5 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தம் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளை மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஊழல் நடந்துள்ளதாக சமாஜ்வாடி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

image

இந்த ஊழலானது அயோத்தி ராமர் கோயிலுக்காக நிலம் வாங்கியதில் நடந்துள்ளது எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முதலில் கிளப்பியவர், சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் பவன் பாண்டே. அவருடன் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், சேர்ந்து குற்றம்சாட்டினார்.

இருவரும், "அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கோயில் கட்டுமானத்துக்கு வாங்கிய நிலமானது 2 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்த ஒப்பந்தத்தை மாற்றி 18.5 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பத்திரப் பதிவில் கோயில் நிர்வாகத்துக்காக வாங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளனர். அதுவே, 5 நிமிடங்களுக்கு பிறகு விற்பனையாளருக்கு கூடுதலாக ரூ.16.5 கோடி செலுத்தி புதிய ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த மார்ச் 18-ஆம் தேதி இந்த பத்திர பதிவு நடைபெற்றுள்ளது.

இதற்கு மூல காரணம், ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய். 1.208 ஹெக்டேர் மதிப்புள்ள அந்த நிலம் அயோத்தி மாவட்டத்தின் சதர் தெஹ்ஸிலின் கீழ் உள்ள பாக் பிஜைசி கிராமத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. சம்பத் ராய், அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ராவின் உதவியுடன் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.18.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். இது பணமோசடி வழக்கு. எனவே, கோயில் வளாகத்திற்கு நிலம் வாங்குவது குறித்து மத்திய புலனாய்வுப் பணியகம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியோரால் விசாரணை வேண்டும்.

2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலத்தை 5 நிமிடங்களில் 18 கோடி ருபாய் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது ஏன்? ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய சாட்சிகளாக இருந்துள்ளார்கள்" என்றனர்.

image

இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், "இந்த நிலத்தின் மீது பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தின் உள்ளீடுகளை மேற்கோள் காட்டி, இந்த நிலத்தை முதன்முதலில் சுல்தான் அன்சாரி என்பவர் இந்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி அதன் அசல் உரிமையாளர் குசூம் பதக், ஹரிஷ் குமார் பதக் அல்லது பாபா ஹர்தாஸ் ஆகியோரிடமிருந்து ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளனர். சில நிமிடங்கள் கழித்து, அதே நிலத்தை அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ராய், அன்சாரியிடமிருந்து ரூ.18.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

அன்சாரிக்கும் ராய்க்கும் இடையிலான பரிவர்த்தனையைக் காட்டும் இரண்டாவது விற்பனை பத்திரம் உள்ளது. அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தி மேயர் ஹிருஷிகேஷ் உபாத்யாய் ஆகியோர் நில விற்பனை பத்திரத்தை சாட்சிகளாக சாட்சியமளித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை கொண்டு, முழுமையான விசாரணையைத் தொடங்க வேண்டும், மேலும் ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.

ஏனெனில் இது ராமரின் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் கேள்வி. அவர்கள் கடினமாக சம்பாதித்து ராம் கோயில் கட்டுமானத்திற்கான பணத்தை நிதியாக அளித்துள்ளனர். நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகமாகியுள்ளது. உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க முடியாது" என்றுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் இது தொடர்பாக அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். "தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில்தான் நிலத்தை வாங்கி இருக்கிறது. இந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன் நிலத்தின் சொந்தக்காரர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். என்றாலும் முறையான பத்திரப்பதிவு நடக்காமல் இருந்த நிலையில், 2021 மார்ச் 20 ஆம் தேதி பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அந்த ஒப்பந்த விலையில் நிலத்தின் சொந்தக்காரர்கள் நிலத்தை விற்று பத்திரத்தை பதிவு செய்தனர்.

image

அதன் பின்புதான் கோயில் கட்டுமானத்திற்காக அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த ஊழலும் இல்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். மகாத்மா காந்தியை படுகொலை செய்ததாக கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாங்கள் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சமாட்டோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் படித்து விசாரிப்பேன்" என்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்காமல் மவுனம் காத்துவருகின்றது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்