[X] Close

'சிக்ஸர்களுக்கு இடையே வீழ்ந்த விக்கெட்!" - டாஸ்மாக் கடை திறப்பு சர்ச்சை: விவாதப் பார்வை

சிறப்புக் களம்,தமிழ்நாடு

Re-opening-of-Tasmac-stores-in-pandemic-situation-Controversy-and-interpretation
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது விமர்சனங்களையும சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய  அதிமுக ஆட்சியில், கொரோனா பேரிடரில் டாஸ்மாக் திறந்தபோது திமுக நடத்திய போராட்டத்தின் புகைப்படங்களைப் பதிவிட்டு, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
image
'என்ன மாதிரியான திட்டமிடல் இது'?
 
இதுகுறித்து நம்மிடம் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், ‘’கடந்த ஆட்சியில் ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளை திறந்தபோதும் கூட பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. சென்ற ஆட்சியில் என்ன சொன்னமோ அதையேதான் இப்போதும் சொல்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில் கொரோனாவை ஒழிக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இப்படியிருக்க கொரோனா முற்றிலும் குறையாத சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது ஏற்புடையது அல்ல.
 
தற்போது அறிவித்திருக்கும் தளர்வுகளின்படி, மக்கள் அதிகம் கூடாத வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடைகளை 2 மணி வரை திறக்க அனுமதித்துவிட்டு, அதிகம் கூட்டம் சேரும் டாஸ்மாக் கடைகளை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கியிருப்பது என்ன மாதிரியான திட்டமிடல் என்பது புரியவில்லை.
 
கடந்த ஆட்சியின்போது டாஸ்மாக் கடைகளை திறந்தபோது எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, இப்போது அவர்களே ஆட்சிக்கு வந்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது எவ்வகையில் நியாயம்? இது மக்களை முட்டாளாக்கும் செயல்பாடு. இதற்காக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.
 
image
'டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் அரசு உள்ளது..'
 
திமுக செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் கேட்டபோது, ‘’கடந்த அதிமுக ஆட்சியின்போது தளர்வுகள் அறிவிக்கப்படாத முழு ஊரடங்கு நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் நாம் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமத்திருக்கிறோம்.
 
மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கே சென்று வாங்கி வருகிறார்கள். மேலும் கள்ளச் சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் ஆங்காங்கே துவங்கிவிட்டன. அது பெரிய அளவில் உருவாகிவிடக் கூடாது.
 
தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்சுமையை ஏற்றிவிட்டு அதிமுக அரசு சென்றுவிட்டது. வட்டியே ஒரு லட்சம் கோடி ரூபாய் கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் அரசு உள்ளது.
 
மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாட்டு அரசுக்கு ஆலோசனை வழங்குவதை விட்டுவிட்டு, புதுவை துணைநிலை ஆளுநரிடம் பேசி அங்கு மதுக்கடைகளை அடைக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என்கிறார் அவர்.
 
image
'சிக்ஸர்களுக்கு மத்தியில் இதுவொரு விக்கெட்டின் வீழ்ச்சி'
 
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறுகையில், ‘’ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படுவதற்கு முன்பாக மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு சொல்கிற காரணங்கள், பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று வாங்கி வருகிறார்கள், திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது, கள்ளச் சாராயம் காய்ச்சத் துவங்கி விட்டார்கள், மதுக் கடைகளில் மது பாட்டில்களை திருடும் சம்பவங்கள் நடக்கின்றன...
 
இவை அனைத்துமே சென்ற ஆட்சியில் சொல்லப்பட்ட காரணங்களே. இவை அனைத்தையுமே காவல்துறையின் கண்டிப்பான செய்லபாடுகளால் தடுக்க முடிபவையே. வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த ஒரேக் காரணம், மதுக்கடைகள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வருமானம் மட்டுமே.
 
புதிய அரசு மதுக்கடைகளைத் திறக்க எடுத்திருக்கும் முடிவு மதுப்பிரியர்களை மட்டுமே திருப்திபபடுத்தும். கடந்த ஆட்சியின்போது பதாகை தாங்கி எதிர்ப்புப் போராட்டம் நடத்திவிட்டு, ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பது தவறு என்று அறிக்கைகள் மூலம் அரசைக் கண்டித்துவிட்டு, அதேத் தவறை செய்வது தார்மிக ரீதியாகவும் நியாயமில்லை.
 
image
ஆட்சிக்கு வந்து இதுவரை எடுத்த பல முடிவுகள் மூலம் மக்கள் மனதில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் தி.மு.க அரசுக்கு இது ஒரு சறுக்கலாக அமைந்துவிடும். தொடர்ந்து அடித்த சிக்ஸர்களுக்கு மத்தியில் இது ஒரு விக்கெட்டின் வீழ்ச்சியாகி விடும்.
 
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுகிற முக்கிய முடிவை இப்போது எடுக்க சாத்தியமில்லை என்பது புரிகிறது. ஆனால் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டு தமிழ்நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் வரையாவது திறக்காமல் இருப்பதே மக்களுக்கும், அரசின் நன்மதிப்புக்கும் நல்லது. இப்போதும் தாமதமில்லை. இந்த முடிவை திரும்பப்பெறுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்’’ என்கிறார் அவர்.

Advertisement

Advertisement
[X] Close