[X] Close

ஓடிடி திரைப் பார்வை: 'டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்'- ஜார்ஜ் பிளாய்டின் மரணமும் அதிர்வுகளும்!

சினிமா,சிறப்புக் களம்

Two-Distant-Strangers-Movie-Review

மக்கள் அரசியலின் கலை வடிவமாகவே சினிமா இருக்க வேண்டும். எக்கால அரசியலையும் துணிந்து அது பேசவேண்டும். அடக்குமுறைகளுக்கு எதிரான விடுதலைக் குரலாக உலகின் காதுகளுக்குள் ஓங்கி அது ஒலிக்க வேண்டும். அவ்வகையில் அமெரிக்க கருப்பின மக்களின் பிரச்னையினை வித்தியாசமான திரைக்கதை பாணியில் பேசியிருக்கிறது கடந்த ஆண்டு வெளியான அமெரிக்க குறும்படம் 'டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்' (Two Distant Strangers).


Advertisement

image

கருப்பின இளைஞர் கேர்ட்டர் ஒரு கிராபிக் டிசைனர். அவர் தனது காதலி பெர்ரியுடன் இரவில் 'டேட்' செய்துவிட்டு உறங்குகிறார். ஒரு அதிர்ச்சி கனவு அவரை எழுப்பிவிடுகிறது. கனவின்படி, கேர்ட்டர் தன் காதலியின் வீட்டில் இருந்து கிளம்பி சாலைக்கு வருகிறார். அங்கு வெள்ளை போலீஸ் அதிகாரி ஒருவர் கேர்ட்டரை மறித்து விசாரிக்கிறார். கேர்ட்டர் புகைப்பது கஞ்சாவோ என சந்தேகித்து உக்கிரமாக கேர்ட்டரை தாக்க முயல்கிறார் அந்த அதிகாரி. பின் கருப்பின கேர்ட்டரை தரையில் படுக்கவைத்து தனது முழங்காலால் கழுத்தை அழுத்துகிறார். மூச்சுவிட முடியாமல் துடிக்கும் கேர்ட்டர், “என்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னால் மூச்சுவிட முடியவில்லை” என சொல்லித் துடித்து இறந்து போகிறார்.


Advertisement

இப்போது இந்தக் காட்சி எந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது என நான் உங்களுக்கு விளக்கத் தேவை இல்லை. ஆம் மேலே விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் ஜார்ஜ் ப்ளாயிடின் மரணத்தைதான் பேசுகின்றன. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் ஜார்ஜ் பிளாய்டின் கொடூர மரணம் உலகின் மனசாட்சியினை உலுக்கியது. வெள்ளை இனத்தைச் சேர்ந்த அமெரிக்க போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் விசாரணைக்காக ஜார்ஜ் பிளாய்டை கைது செய்ய வந்திருக்கிறார். காரில் ஏற மறுத்த அவரை போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் தனது முழங்கால்களால் அழுத்தி கொலை செய்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து உலகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தன. பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு டெரிக் சாவ்வின் சிறையிலடைக்கப்பட்டார்.

image

‘டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ என்கிற சினிமா ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை மட்டும் பேசுகிறதா என்றால், இல்லை. கதைப்படி கனவில் நாயகன் அதிர்ந்து எழுகிறார் இல்லையா... அந்த கனவு ஒருமுறை வருவதல்ல 99 முறை இந்த சினிமாவில் வருகிறது. ஒவ்வொரு முறையும் அமெரிக்க வெள்ளை அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு கருப்பினத்தவரின் கதை சொல்லப்படுகிறது. கொல்லப்படும் ஒவ்வொரு கருப்பினத்தவரின் நகல் வடிவமாக கதையின் நாயகன் கேர்ட்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். இந்த கதை சொல்லல் பாணியை 'டைம் லூப் ஸ்கிரீன் ப்ளே' என்று சொல்லலாம்.


Advertisement

ஜார்ஜ் பிளாய்டின் மரணம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்த ஒரு வீடியோ முக்கிய காரணமாக இருந்தது. அதனை எடுத்தவர் 18 வயது அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா ஃபிரேஸர். அவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவே ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதி பெற்றுத் தந்திருக்கிறது. தற்போது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேஸரை கவுரவப்படுத்தும் நோக்கில் ஊடகத்துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டார்னெல்லா ஃபிரேஸர் ஊடகவியலாளராக இல்லாத போதும் அவர் செய்தது ஒரு நல்ல ஊடகப் பணிதான். எனவே அவருக்கு சிறப்பு 'புலிட்சர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

image

தற்போது நெட்பிளிக்ஸின் காணக் கிடைக்கும் ‘டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ எனும் இந்த சினிமா சமகால அரசியலை பேசும் மிக முக்கியமான சினிமா. இதனை ட்ராவோன் ப்ரீ மற்றும் மார்டின் டெஸ்மோண்ட் ரோய் ஆகியோர் இணைந்து இயக்கி இருக்கின்றனர். இவர்களில் இக்கதையின் திரைகக்தையினை எழுதியவர் ட்ராவோன் ப்ரீ. ஜெஸிகா யங் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கருப்பின இளைஞராக ஜோ பாடாஸும், வெள்ளை போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரோ ஹார்வட்டும் நடித்திருக்கின்றனர்.

image

சிறந்த லைவ் ஆக்‌ஷன் சினிமாவிற்கான ஆஸ்கர் விருது பெற்ற இந்த சினிமாவுக்கு இசையமைத்திருக்கிறார் ஜேம்ஸ் பாய்சர். மொத்த சினிமாவின் அரசியல் அடர்த்தியை எண்டு கார்டில் ஒலிக்கும் 'The Way it is' எனும் பாடல் வெளிப்படுத்துகிறது. மேலும், இப்படத்தின் எண்டு கார்டில் அமெரிக்க வெள்ளை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட நூறு கருப்பினத்தவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

அடக்குமுறைக்கு ஆளாகும் கருப்பின மக்களின் விடுதலைக் குரலான ‘டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ குறும்படம் தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப்பார்வை: ’ஆதாமிண்ட மகன் அபு’- இஸ்லாமிய தம்பதியின் மெக்கா கனவும் அன்பான வாழ்வும்


Advertisement

Advertisement
[X] Close