[X] Close

மனிதர்கள் அலட்சியத்தால் விலங்குகளின் உயிரை பறிக்கும் சர்ஜிக்கல் மாஸ்க்: தீர்வுதான் என்ன?

சிறப்புக் களம்,சுற்றுச்சூழல்,கொரோனா வைரஸ்

The-environmental-problem-with-single-use-face-masks-and-why-we-need-to-make-a-change

மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்தாமல் மனிதர்கள் செய்யும் சின்ன சின்ன அலட்சியங்கள், விலங்குகள் - பறவைகள் - நீர்வாழ் உயிரினங்கள் என பல உயிர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தாகி இருக்கிறது. இதுபற்றி, இங்கு விரிவாகக் காணலாம்.


Advertisement

சென்னையை சேர்ந்த, சைபேரியன் ஹச்கி வகையை சேர்ந்த நாயொன்று, மாஸ்க்கை விழுங்கிவிட்தாக கூறி நேற்றைய தினம் கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்திருக்கிறது. முதலில் ஏதோவொரு உடல்நல பாதிப்பு என்று நினைத்தே, மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. பின்னரே நாயின் வயிற்றில் முகக்கவசம் இருப்பது தெரியவந்துள்ளது. விஷயம் தெரிந்தவுடன், துரிதமாக செயல்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக அதை நீக்கியிருக்கின்றனர், அதற்கு சிகிச்சையளித்த கால்நடை மருத்துவர்கள்.

image


Advertisement

இப்படி மாஸ்க்கினால் பாதிக்கப்படும் கால்நடைகளும், பறவைகளும் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இருதினங்களுக்கு முன்னர்கூட, பெரிய அலகை கொண்ட கடற்பறவையொன்று, தன் அலகில் மாட்டிக்கொண்ட மாஸ்க்கை அப்புறப்படுத்தமுடியாமல், போராடி போராடி இறுதியில் மூச்சுத்திணறி இறந்துவிட்டது.


Advertisement

பறவைகள், தெருவிலங்குகளுக்குத்தான் இந்த நிலை என்றில்லை. நீர்வாழ் உயிரினங்களும் கூட, மாஸ்க்கால் அதிகம் பாதிக்கப்படுகின்றன என சொல்கிறது தரவொன்று. 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2020 ம் ஆண்டு 30 சதவிகித அதிக கழிவுகள் உருவாகியிருப்பதாக, சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு கழிவுகள் ஆறுகளிலோ, கடல்களிலோ கலப்பவைதானாம். மேலும், ஒவ்வொரு மாதமும் 129 பில்லியன் டிஸ்போஸபிள் மாஸ்க்குகளையும்; 65 பில்லியன் டிஸ்போஸபிள் கையுறுகளையும் மக்கள் அப்புறப்படுத்துவதாக இந்தத் தரவில் கூறப்பட்டுள்ளது. அப்புறப்படுத்தப்படும் கழிவுகளிலிருக்கும் ஒருசில பாதுகாப்பு கவசங்கள் முழுமையாக மக்கிப்போக 450 வருட ஆயுட்காலம் ஆகலாமென கணிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவை நீரில் இருந்து, அவ்வுயிரணங்களுக்கு சேதம் விளைவித்துக் கொண்டே இருக்கும். இப்படியான கழிவுகளால் கொரோனாவுக்குப் பின், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் மிக அதிகமாக இருக்கும் என சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

இப்படி நீரில் போடப்படும் கழிவுகளில் முக்கியமானதாக இருக்கிறது, மாஸ்க் வகைகள். அதிலும் குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் டிஸ்போஸபிள் மாஸ்குகள் அதிகமாக இருக்கிறதாம். இவற்றை கடல்கள் ஆறுகளில் வீசும்போது, அவற்றிலிருந்து நெகிழி கழிந்து நீரில் கலப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நீரில் கலக்கும் அந்த நெகிழி, நீரையே நம்பியிருக்கும் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த நெகிழி மட்டுமன்றி, மாஸ்க்கில் இருக்கும் கயிறுகளும், ஆபத்தை ஏற்படுத்துகிறது என சொல்லப்படுகிறது. காரணம், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினமும், கயிறுகளை எளிதில் மென்றுவிடும் அளவுக்கு பற்களை கொண்டது. ஆக உணவென நினைத்து கயிறுகளை சாப்பிட்டுவிடுவது, அவற்றுக்கு உடல்ரீதியான பாதிப்பை கொடுக்கும். சில நேரங்களில், கயிறுகள் உயிரினங்களின் கால் / அலகு / உடலில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. யுனைடட் நேஷன்ஸ் செய்தித்தொகுப்பில், பயன்படுத்தப்பட்ட மாஸ்க் மற்றும் கொரோனா பெருந்தொற்று மருத்துவ கழிவுகளில், 75 சதவிகிதம் கடலிலேயே கலக்கிறது எனக்கூறப்பட்டுள்ளது. ஆகவே, அதீத பாதிப்பை அடைவது, கடல்வாழ் உயிரினங்கள்தாம்.

image

உலகளவில் இதுவரை 129 பில்லியன் அளவிலான, டிஸ்போஸபிள் மாஸ்க் வகைகள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக, தரவொன்று சொல்கிறது. இதன்படி பார்த்தால், நிமிடத்துக்கு மூன்று மில்லியன் மாஸ்குகள் உபயோகப்படுத்தப்பட்டிருந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும், முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்றால், பதில் இல்லை. ஒப்பீட்டளவில், துவைத்து காயவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ரீயூசபுள் மாஸ்குகள், பெரியளவில் பிற உயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்களின் அலட்சியம், உயிரிங்னகளின் அழிவில் முடிவடையும் இந்த நிலையை மாற்ற, மனிதர்களாகிய நாம், மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்தவேண்டியது மிக மிக அவசியம். கொரோனா கால நெகிழி கழிவுகளின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால், 'துனி அல்லது பருத்தியால் ஆன மறுசுழற்சிக்கு உகந்த மாஸ்க்கை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்யும்போது, குப்பைக்கு செல்லும் நெகிழி கொண்ட மாஸ்குகள் எண்ணிக்கை குறையும். உயிரினங்களை காப்பதற்கான முதல் முயற்சியாக இது இருக்கும் என்பதால், முடிந்தவரை பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் மாஸ்க்’ வகைகளை அதிகம் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

image

கொரோனா பேரிடர் நேரத்தில் மாஸ்க் அணிவதை தவிர்க்க முடியாது என்றாலும், என்ன மாஸ்க் அணியலாம், அதை எப்படி அப்புறப்படுத்தலாம் என்பது, அதை உபயோகப்படுத்தும் நம் கைகளிலேயே இருக்கிறது. அந்தவகையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் மாஸ்குகளை அப்புறப்படுத்தும்போது, அதன் இருபக்கமும் உள்ள கயிறுகளை அறுத்துவிட்டு அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், மாஸ்க்கால் பறவைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான சேதங்கள் கயிறு காரணமாகத்தான் ஏற்படுகிறது. அந்தக் கயிறு, குறிப்பிட்ட விலங்கு/பறவையின் கால்களிலோ – அலகுகளிலோ – வாய்ப்பகுதியிலோ சிக்கிக்கொள்கிறது. அவற்றால் ஏற்படும் அடுத்தடுத்த அசம்பாவிதங்கள், அவற்றின் உயிரையே பறிக்கிறது. மேலும் மாஸ்க்கை வீதிகளில் வீசுவது, சாக்கடையில் வீசுவது, ஆறுகளில் எறிவது போன்றவற்றை செய்யாமல், முறையாக அவற்றை குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

மனிதர்களாகிய நாம் கொஞ்சம் கவனம் எடுத்தால், எத்தனையோ உயிரினங்களின் அழிவை தடுக்க முடியும் எனும்போது அதை செய்யக்கூட நாம் தயங்கினால்... அது நிச்சயம் குற்றமே!

- நிவேதா

தகவல் உறுதுணை: LariatNews, smeharbinger.net


Advertisement

Advertisement
[X] Close