Published : 09,Jun 2021 09:15 PM
'என் வழி... தமிழ்நாடு வழி...' புதுச்சேரி பின்பற்றும் நடைமுறைகள் - ஒரு பார்வை

மொழி ரீதியாக ஒன்றுபட்ட புதுச்சேரி மாநிலம் தமிழக அரசின் பள்ளிக்கல்வி முறையை மட்டுமன்றி, கொள்கை ரீதியான நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகின்றது. இதுதவிர வேறு எதிலெல்லாம் தமிழகத்தை புதுச்சேரி பின்பற்றுகிறது என்ற விவரங்கள் இங்கே...
நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டும் மூன்று மொழிகளை பேசும் மக்களை கொண்ட மாநிலமாக உள்ளது. அந்தவகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால், தமிழகத்தை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் பின்னிப்பிணைந்துள்ளது.
அதேபோன்று மாஹே மாவட்டம் கேரள மாநிலத்தையொட்டியுள்ள பகுயிலும், ஏனாம் மாவட்டம் ஆந்திரா மாநிலத்தையொட்டியுள்ள பகுதியிலும் ஒட்டியுள்ளது. தனக்கு அருகே உள்ள மாநிலங்களின் கலாசாரத்தை, புதுச்சேரி அரசு பின்பற்றி வருகின்றது.
ஆகவே புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனிக் கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால், தமிழக அரசின் கல்வி பாடத்திட்டத்தையும், மாஹே கேரளா மாநில கல்வி பாடத்திட்டத்தையும், மற்றும் ஏனாம் ஆந்திர மாநில கல்வி பாடத்திட்டத்தையும் பின்பற்றி வருகின்றது.
அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இருந்தாலும் உயர் நீதிமன்றம் இல்லாததால் தமிழகத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில்தான் நீதித்துறைகள் செயல்படுகின்றது.
இதைத் தவிர தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள்தான் புதுச்சேரியிலும் உள்ளதால், தமிழகத்தில் எடுக்கப்படும் கொள்கைரீதியான முடிவுகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகின்றது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை, மதிய உணவுத்திட்டம், நலிந்தோர்க்கான உதவி தொகை, மீனவர்களுக்கான உதவிகள் என்று பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டஙகள் தமிழகத்தை ஒட்டியே அமைந்துள்ளது.
ஒரு சிலவற்றில் மட்டும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூட்டும். அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் ரூ.4 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது அதை பின்பற்றி புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தவிர மத்திய அரசின் நிதிக்கொடைகள் அதிகம் கிடைத்த நேரத்தில் புதுச்சேரியில் விற்பனை வரி குறைந்து காணப்பட்டதால் மோட்டார் வாகன விலைகள் தமிழகத்தை விட புதுச்சேரியில் 4 சதவீதம் குறைந்து இருந்தது. ஆனால் இப்போது ஒரே சீரான வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதால் அந்த சலுகை புதுச்சேரிக்கு கிடைக்காமல் போனது.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் திரைப்படங்கள் தணிக்கை என்பது இல்லை. ஆகவே தமிழகத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, இங்கு ஒப்புதல் செய்யப்படும் படங்களே, புதுச்சேரியில் வெளியிட அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
- ரகுமான்