Published : 07,Jun 2021 05:15 PM

ட்விட்டர் vs மத்திய அரசு, தொடரும் முரண்பாடுகள் - காரணம் என்ன? - விரிவான அலசல்

what-are-things-to-know-about-government-versus-Twitter-battle

மத்திய அரசிற்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையேயான வாய்க்கால் தகராறு நெடு நாளாக இருந்த போதிலும், அது உச்சக்கட்டத்தை அடைந்தது என்னவோ, ’காங்கிரஸ் டூல் கிட் உருவாக்கி, பாஜகவிற்கு எதிராக செயல்படுகிறது’ என ட்விட்டுகளை பறக்கவிட்ட எம்.எல்.ஏவின் ட்விட்டுகளை manipulated tweets என ட்விட்டர் கூறிய பின்னர்தான். இதனால் பாஜக தரப்பிலிருந்து ட்விட்டர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட, இல்லை இல்லவே இல்லை என மறுத்தது ட்விட்டர்.

image

இதனிடையே சமூகவலைதளங்களுக்கு அரசு கொண்டு வந்த புதிய விதிகளில் சிக்கல்களை சந்தித்த ட்விட்டர் நிறுவனம் தற்போது நீதிமன்ற வாசலை நாடியிருக்கிறது. அண்மையில் ட்விட்டரில் துணை முதல்வர் வெங்கையா நாயுடுவின் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கணக்கில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட கொதித்தெழுந்து விட்டார்கள் பாஜகவினர். உடனடியாக புதிய விதிகளுக்கு கட்டுப்படுங்கள் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற இறுதி எச்சரிக்கையும் ட்விட்டருக்கு அனுப்பபட்டது.

ஏன் இவ்வளவு முரண்பாடு, புதிய விதிகளை பின்பற்றுவதில் ட்விட்டருக்கு அப்படி என்ன சிக்கல், உடனடியாக அரசு புதிய விதிகளை அமல்படுத்துவதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல கேள்விகள் நமது கபாலத்திற்குள் எழாமல் இல்லை. ஆகையால் இது தொடர்பான சந்தேகங்களை சமூகவலைதள ஆய்வாளர் வினோத் ஆறுமுகத்திடம் முன்வைத்தோம்.

image

இது குறித்து அவர் அளித்த விளக்கங்கள்:

அரசு சமூகவலைதளங்களை தணிக்கை வட்டத்திற்குள் எடுத்துவர முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில் ட்விட்டர் மட்டுமல்லாது வாட்ஸ் அப், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏதோ ஒரு இடத்தில் மத்திய அரசுடன் முரண்படுகிறது. காரணம் என்னவென்றால் மத்திய அரசு சொல்லக்கூடிய அனைத்து விதிகளுக்கும் சமூகவலைதளங்கள் சம்மதம் தெரிவித்தால் அவர்கள் தொழில் ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

உதாரணமாக இந்தியாவில் ஒரு பிரச்னை தொடர்பாக ஒரு ஹேஷ்டேக் உருவாகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை இந்திய அரசு நீக்கச் சொல்கிறது. அதை அப்படியே ட்விட்டரோ, பேஸ்புக்கோ நீக்கிவிடுகிறார்கள். ஆனால் இதே பிரச்னை வேறு நாட்டில் ஏற்படும் போது அங்கும் இதே நடைமுறையை அவை பின்பற்றும் போது, அந்த நாட்டிற்கு சமூகவலைதளங்கள் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால், பிற நாடுகளுக்குள் சமூகவலைதளங்கள் புதிதாக நுழைவதில் சிக்கல் ஏற்படும். நிறுவனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையையும் பெருமளவு குறையும். ஆகையால்தான் அவர்களுக்கென்று விதிமுறைகளை வகுத்து அதன்படி செயல்படுகிறார்கள். தற்போது இந்திய அரசு கொண்டு வந்துள்ள விதிகளில் பலவை ட்விட்டருக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்தக்குழப்பத்திற்கு அரசிடம் உரிய விளக்கத்தை பெற ட்விட்டர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

ஏன் இந்திய அதிகாரி?

மத்திய அரசு ட்விட்டரை இந்திய அளவிலான குறைத்தீர்க்கும் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டு இருக்கிறது. அதற்கு காரணம் இருக்கிறது. இந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் இருக்கும் போது, சைபர் குற்றம் சார்ந்த தகவல்களை அவர்களிடம் இருந்து பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தீவிரவாத தாக்குதல், பெண்களுக்கு எதிராக ஆன்லைனில் நடக்கும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பல குற்றங்களை உடனடியாக தடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் நாட்டின் இறையாண்மையை பாதிக்கப்படுகிறது என்று மத்திய கூறியுள்ளது. இதனைக் களைவதற்காகத்தான் இந்தியாவில் இந்திய அதிகாரியை நியமிக்க அரசு வலியுறுத்துகிறது.

image

இந்திய அரசுக்கு கட்டுப்பட்டே ட்விட்டர் இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் டூல் கிட் விவகாரத்தில் அமைச்சர்கள்தான் கண்டனம் தெரிவித்தார்களே தவிர, அரசு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. சர்வதேச அளவில் நாட்டை ஜனநாயகம் பொருந்திய நாடாக காண்பிக்க சில மதிப்பீடுகள் உள்ளன.

அதில் அரசுக்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எண்ணிக்கை, அரசு அனுமதியளித்த போராட்டங்களின் எண்ணிக்கை, இறந்த பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை, காப்பற்றப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை, பத்திரிக்கை சுதந்திர மதீப்பீடு உள்ளிட்டவை பலவை அடங்குகிறது. இந்த மதிப்பீடுகளுக்குள் இந்தியா வராத பட்சத்தில் உலக வங்கி நமக்கு கடன் தராது. அதே போல அரசை சமூகவலைதளங்கள் கட்டுப்படுத்த முயற்சித்தால், பாதிப்பு சமூகவலைதளங்களுத்தான்.

குழப்பம் உண்டாக்கும் விதிகள்:

அரசு கொண்டு வந்துள்ள புதியவிதிகளில் சில விதிகள் சிக்கல் நிறைந்தவையாக இருக்கின்றன. அவைகளில் சிலவை

1. ஒரு குறிப்பிட்ட மத, இன, மொழி சார்ந்த நம்பிக்கைகளை கேலி செய்ய கூடிய கருத்துக்களை அரசு உத்தரவிட்டால் நீக்க வேண்டும். இது நபருக்கு நபர் மாறுபடக்கூடிய ஒன்றாகும். அப்படியானால் இதில் எது சரி, எது தவறு என எப்படி கண்டறிய முடியும்.

2. இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை நீக்க வேண்டும். இதனை எப்படி விவசாய போராட்டத்திற்கு பொருத்தி
பார்க்க முடியும்.

3. இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே இருக்கும் நட்பை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை நீக்க வேண்டும். இதனை ஈழப்பிரச்னையில் செயல்படுத்த முடியுமா?

இது போன்ற விதிகள் ட்விட்டருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகையால் இதில் எது சரி, தவறு என்பது தொடர்பான விளக்கங்களை இந்திய சட்டத்தின் படி மத்திய அரசு ட்விட்டருக்கு கொடுக்க வேண்டும்.

முடிவு எப்போது?

ட்விட்டருக்கும் அரசிற்கும் இடையேயான இந்தப்பிரச்னை நேரடி பேச்சுவார்த்தையில் முடிய வாய்ப்பு மிகக்குறைவு. நீதிமன்றம் தான் இதற்கான தீர்வை கொடுக்கும். ஏதேனும் ஒரு பக்கம் இணங்கி போகவேண்டிய சூழ்நிலை வந்தால் அதில் ட்விட்டர் இணங்கிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கொண்டுவரப்படும் சில மாற்றங்கள் சாமனியரின் கருத்து சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.

- கல்யாணி பாண்டியன் 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்