Published : 06,Jun 2021 10:08 PM
திருவாரூர்: இளம் பெண் மரணத்தில் மர்மம் என பெற்றோர் புகார்

திருவாரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை பிரச்னையில் தனது மகளை அவளது கணவனின் குடும்பத்தினர் அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டதாக அப்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - விஜயராணியின் மூத்த மகளான மீனாவின் கணவர் ரமேஷ் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுவிட்டதை அடுத்து, அந்தப் பெண், மாமியார் மற்றும் உறவினர்களுடன் சேங்காலிபுரம் சிற்றூரில் வசித்து வந்தார். இதுபோன்ற சூழலில், வரதட்சணை கேட்டு மீனாவை அவரது கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீனா வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மீனா தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீனாவின் மாமியார், மற்றும் உறவினர்கள் யாரும் அப்போது வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் மீனாவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மீனாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையின் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.