[X] Close

கொரோனா ஊரடங்கும் தென்மேற்கு பருவமழையும்: வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

விவசாயம்,தமிழ்நாடு

farmers-worry-about-lockdown-and-rain-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அறிவித்து நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது.


Advertisement

இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். பெரியகுளத்தில் கொரோனா பொது முடக்கத்தால் பறித்த மாங்காய்களை விற்பனை செய்ய முடியாததால் பழுத்து அழுகிய நிலையில் குளங்களில் டன் கணக்கில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர். அழுகிய மாம்பழங்களை குளங்களில் கொட்டி வருவதால் நீர் மாசடைவதாக பாசன விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய ஒன்றியங்கள் டெல்டா பகுதி ஆகும். இங்கு 15-க்கும் மேற்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அறவை பணிக்காக திருச்சி கொண்டு செல்வது வழக்கம். கூடுதலாக நெல் மூட்டைகள் வருவதாலும் அதிக நாட்கள் விவசாயிகள் காத்திருப்பதாலும் அரியலூர் மாவட்டத்தில் தற்போது அயன்சுத்தமல்லி கிராமத்தில் நெல் மூட்டைகள் மொத்தமாக இருப்பு வைக்கபட்டு, பின்னர் திருச்சியில் உள்ள நவீன அரசி ஆலைக்கு அனுப்பப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அயன் சுத்தமல்லி நெல் இருப்பு வைக்கும் இடத்திற்கு லாரிகள் செல்ல சாலை இல்லாத நிலை தொடர்கிறது. தற்போது மழையில் லாரிகள் உள்ளே சென்றால் லாரியின் டயர் மண்ணில் சிக்கி கொள்ளும் நிலையில் இருக்கிறது. எனவே நெல் இருப்பு வைக்க வந்த 20 க்கும் மேற்பட்ட லாரிகள் கீழப்பழுவூர் அருகே தனியார் எடை மேடை அருகே நிறுத்தி வைக்கபட்டுள்ளன. இதனால் கடந்த 2 நாட்களாக லாரிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி ஓட்டுனர்களும் அங்கேயே காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போல் மழை காலைத்தில் பிரச்சனை‌ வராமல் இருக்க நெல் இருப்பு இடத்தை மாற்று இடத்தில் வைக்க வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 15 லட்ச ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு கொடிக்கால் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா முழு ஊரடங்கு என்பதால் திருமணம் கோயில் விழாக்கள் நடைபெறாததால் வெற்றிலை வியாபாரம் முடங்கிப் போய் உள்ளது. இதனால் கொடிக்கால்களில் வெற்றிலை அழுகி கருகி வருகிறது. 40 ரூபாய்க்கு விலை போன ஒரு கவுளி வெற்றிலை தற்போது வெறும் 15 ,20 ரூபாய்க்கு விற்பதாகவும், நஷ்டம் ஏற்பட்டாலும் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் வெற்றிலை கிள்ளி வருவதாகவும், ஆண்டு முழுவதும் மங்கள நிகழ்சிக்களுக்கு பயன்படும் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகளின் வாழ்வு மங்கி போயுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு , கூமாப்பட்டி கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக விவசாய பணிகளை மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு செய்தார். மேலும் கான்சாபுரம், ராமசாமியாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெற்களை கையில் அள்ளி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் நெல் விளைச்சல் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் இப்பகுதியிலுள்ள விளைவித்த அம்மன் ரக நெல்லை வேளாண் அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் வேளாண் அதிகாரிகளை அழைத்து இம்முறை அம்மன் ரக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.மேலும் இப்பகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.


Advertisement

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் எட்டாயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிக மகசூல் தரக்குடிய குஜராத், ஆந்திரா ரக விதைக் கடலையை பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.ரு ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்ய மராமத்து பணிகள், விதைகடலை, உரம், தண்ணீர் இறைப்பதற்கான செலவுகள், ஆள் கூலி உட்பட ரூ 30 ஆயிரம் வரை செலவான நிலையில் அதிக மகசூல் கிடைக்கும என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி மழை பெய்ததால் கடலை மகசூல் பாதிக்கப்பட்டது. நோய் தாக்கியதாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டு பெரும்பாலான நிலக்கடலை சோடையாக உள்ளது.

ஊரடங்கினால் பூ விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியாக மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வரும் சூழலில் ஊரடங்கிற்கு முன்பு வரை சம்பங்கி பூக்களின் விலை கிலோ 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் பூக்களை கொண்டு வரும் விவசாயிகளிடம் போதிய விலை கொடுத்து வாங்கி செல்ல வியாபாரிகளும் வரமுடியாத நிலையால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் ஒரு விவசாயி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சுமார் 100க்கும் அதிகமான கிலோ மதிப்புடைய சம்பங்கி பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற வேதனையான சம்பவம் அரங்கேறியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close