[X] Close

சுற்றுலாவும் சுற்றுச்சூழலும்: கானுயிர்களுக்கான வாழிடம் எங்கே இருக்கிறது?

சிறப்புக் களம்,சுற்றுச்சூழல்

World-Environment-Day-Where-is-the-habitat-for-wildlife
இந்தியா சுற்றுலாப் பகுதிகளால் இணைக்கப்பட்ட தேசம். பன்முகத்தன்மை கொண்ட இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனிச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் உண்டு. கடற்கரை நகரங்கள், பல்லுயிர் காடுகள், மலைப்பகுதிகள், தொன்மையான நகரங்கள், ஆன்மிக இடங்கள், அழகிய தீவுகள் என எண்ணற்ற பகுதிகளை கொண்ட இந்த தேசத்தின் எந்த ஒரு சிறப்பு வாய்ந்த நகரமும் தூய்மையாக இல்லை. மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கள் சூழல் மாசுபாடடைந்தே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மலைப்பகுதிகள். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த மலைவாசஸ்தளங்கள் இன்று பெரும்பாலானவர்களுக்கு பொழுது போக்கு இடமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் காணப்படும் எல்லா மலை மற்றும் காடு சார்ந்த சுற்றுலாப்பகுதிகளும் மக்கள் கூட்டத்தால் நசுக்கப்படுகிறது.
 
image
கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.5 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.6 கோடியாக இருக்கிறது. இத்தனை மக்களை உண்மையில் ஒரு மலைப்பகுதி தாங்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் விடுதிகளின் எண்ணிக்கையும், உணவகங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. புதிய புதிய சுற்றுலாத் தளங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் சுற்றுலாத்தளங்களால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் கொடைக்கானல் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படும் வாகனங்களால் மேலும் பாதிப்படைகிறது.
 
தொலை தூரத்தில் இருந்து வருபர்கள் கூட, வாகன நெரிசலால் நாள் முழுக்க சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க புதிய சாலைகளை அமைப்பதும், சாலைகளை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. இதற்கு பெயர்தான் இந்த தேசத்தில் சுற்றுலா வளர்ச்சி. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முட்டாள்தனம் இல்லையா? ஒரு ஆண்டுக்கு இந்த நகரம் எவ்வளவு சுற்றுலாப்பயணிகளை தாங்கும் எனக் கணித்து அதற்கேற்ப மக்களை அனுமதிக்க ஏன் அரசாங்கத்தால் முடிவதில்லை? கொடைக்கானல் தவிர்த்து, பழனி மலைத் தொடரில் இருக்கும் சிறு சிறு கிராமங்கள் கூட மெல்ல மெல்ல சுற்றுலாத் தளங்களாக மாறிக் கொண்டே இருக்கிறது.
 
image
அதிகப்படியான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒலிப்பான்களின் இரைச்சலும் ஒட்டுமொத்த வனத்தின் அமைதியையும் குலைக்கிறது. இந்த சூழலின் கானுயிர்களுக்கான வாழிடம் எங்கே இருக்கிறது? பல நேரங்களின் கானுயிர்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குப்பை தொட்டிகள் இருந்தாலும் பள்ளத்தாக்குகளில் குப்பைகளை தூக்கி எறியவே நம் மக்கள் விரும்புகின்றனர். அப்படி எறியப்படும் வீணடிக்கப்பட்ட உணவுகளால் கானுயிர்கள் ஈர்க்கப்படுகின்றன. பல பறவையினங்கள் இவ்வாறு ஈர்க்கப்பட்டு அவை சூழலில் இருந்து விலகி முற்றிலும் மனிதர்களை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
ஜீவ காருண்யத்திற்கும் கானுயிர் பேணலிற்கும் உள்ள வேறுபாட்டை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குரங்கு உட்பட எந்த ஒரு வன உயிருக்கும் உணவு கொடுக்கத் தேவையில்ல என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் அதை கண்டு கொள்வதாக இல்லை. இந்த கொரோனா காலகட்டத்திலும் செய்தி ஊடகங்கள் சுற்றுலா பயணிகள் வராததால் வன விலங்குகள் ஏமாற்றம் என செய்தி வெளியிடுகின்றன. ஒரு சில தன்னார்வலர்கள் இந்த வன விலங்குகளுக்கு தேடிப்போய் உணவு கொடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
 
மனிதர்களால் தரப்படும் உணவுகளை உண்டு வாழும் கானுயிர்கள் சூழல் சமன்பாட்டில் பங்கேற்க முடியாது. இதனால் காடுகள் அழிவை நோக்கியே செல்லும். சாலைகளுக்கு பழக்கப்படும் இந்த கானுயிர்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. மேலும் நம்முடைய உணவு கானுயிர்களுக்கு நோய்களையும் உருவாக்குகின்றன. கொடைக்கானல் வரும் சாலைகளின் ஓரங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் தூக்கி எறியும் அத்தனை பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
image
கொடைக்கானல் செல்லும் எவரும் வெள்ளி அருவியை கடந்தே செல்ல வேண்டும். வெள்ளி அருவியின் அழகை ரசித்து படம் எடுத்துக்கொள்பவர்கள் அந்த பாலத்தின் மறுபுறத்தையும் கவனிக்க வேண்டும். வெள்ளி அருவி அருகில் இருக்கும் கடைகளின் வேண்டியதை வாங்கி உண்பவர்கள் அதன் மிச்சத்தை அங்கே தான் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள். கடைக்காரர்களும் தங்கள் மிச்சத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி அங்கே தான் தூக்கி எறிவார்கள். தண்ணீர் மிகவும் மாசடைந்த நிலையில் ஓடையாகச் செல்வதை காணமுடியும். அந்த தண்ணீரைத்தான் அங்குள்ள குரங்குகள் அருந்துகின்றன.
 
இந்த தண்ணீர்தான் இந்த மலைத் தொடரில் வாழும் எண்ணற்ற கானுயிர்களுக்கு வாழ்வாதாரம். இதே தண்ணீர் பழனி வாழ் மக்களுக்கும்.
 
கட்டுரையாளர்: சதீஸ் முத்து கோபால்

Advertisement

Advertisement
[X] Close