Published : 03,Jun 2021 07:57 PM
அறிமுக போட்டியிலேயே அதிரடி காட்டி இரட்டை சதம் விளாசிய கான்வே!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது நியூசிலாந்து அணி. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக களம் இறங்கிய அறிமுக வீரர் டேவான் கான்வே தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் இரட்டை சதம் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் மார்க் வுட் வீசிய ஷார்ட் பாலை ஃபைன் லேக் திசையில் சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார். அதற்காக மொத்தம் 347 பந்துகளை எதிர் கொண்டார் அவர். நேற்று பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் பதிவு செய்திருந்தார் கான்வே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் வலுவான பவுலிங் லைன் அப்பை தாக்குபிடித்து விளையாடிய அவர், இறுதியில் ரன் அவுட்டானார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் விளாசிய ஆறாவது பேட்ஸ்மேன் கான்வே. நியூசிலாந்து அணி சார்பில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதனால் அவருக்கு மைதானத்தில் குவிந்த 7500 ரசிகர்களும் எழுந்து நின்று கர ஒலி எழுப்பினர். அதோடு இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அவர்.
முடிவில் நியூசிலாந்து அணி 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி தற்போது அதை டிரையல் செய்து வருகிறது.