Published : 03,Jun 2021 07:29 PM

யோகிக்கு 'போட்டி'யாக அரவிந்த் ஷர்மா ஐஏஎஸ்... - உ.பி.யில் பாஜகவின் திடீர் 'மூவ்' ஏன்?

Aravind-kumar-sharma-becomes-headings-in-Uttar-Pradesh-politics

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு போட்டியாக ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளதாக பாஜகவுக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த தகவல் பற்றிய முழுவிவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் அரசியல் விவகாரங்கள் இரண்டு மாநிலங்களில் சூடுபிடித்து வருகிறது. முதல் மாநிலம், மேற்கு வங்கம். அங்கு முன்னாள் தலைமைச் செயலாளர் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசும் - மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசும் முட்டி மோதி வருகின்றன. இதேபோல் இன்னொரு மாநிலம் உத்தரப் பிரதேசம். மேற்கு வங்கத்தில் பாஜக அரசால் குழப்பம் ஏற்படுகிறது என்றால், உத்தரப் பிரதேசத்தில் மத்திய பாஜகவால் மாநில பாஜகவுக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.

image

கடந்த சில வாரங்களாக உத்தரப் பிரதேசத்தில் பாஜக மத்திய தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அடுத்தடுத்து முகாமிட்டு வருகின்றனர். இவர்கள் முகாமுக்கு பல்வேறு பின்னணி கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது, அரசியல் மாற்றத்துக்கான சாத்தியங்கள். இப்படி சொல்லப்படுவதற்கு காரணம், உத்தரப் பிரதேச பாஜகவில் அக்கட்சியின் மத்திய தலைவர்களால் மாநில பாஜகவின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள அரசியல்வாதியான ஒரு ஐஏஎஸ் அதிகாரி.

அவர் வேறு யாருமல்ல, குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்ட அரவிந்த் குமார் சர்மாதான். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த் குமார் சர்மா. சில வாரங்களாக இவர், மோடியின் வாரணாசி தொகுதியில் நேரடியாக முகாமிட்டு கொரோனா நிவாரணப் பணிகளை பார்வையிடுவது, மோடி - அமித் ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது என உத்தரப் பிரதேசத்தில் சுழன்று வருகிறார். கடைசியாக மத்திய அரசு பணியில் இருந்த இவர், கடந்த ஜனவரியில்தான் பதவியிலிருந்து விலகினார். அதற்கடுத்த 3 நாட்களில் உத்தரப் பிரதேச பாஜக உறுப்பினராக சேர்ந்துகொண்டார். சில நாட்களில் அவர் சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆனார்.

வழக்கமாக இதுபோன்ற ஒருவரை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே பதவிகளில் கொண்டுவரப்பட்டால், அவரை வைத்து கட்சித் தலைமை வேறு ஒரு திட்டம் தீட்டியுள்ளதாக கருதப்படும். அதேதான் அரவிந்த் குமார் சர்மா விஷயத்திலும் பேசப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள், இந்த வாதத்தை முன்வைத்து, பாஜக மத்திய தலைமை அரவிந்த் குமார் சர்மாவை யோகி ஆதித்யநாத்துக்கு மாற்றாக திணிக்க முற்படுகின்றனர். விரைவில் அவருக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவையில் அமைச்சர் அல்லது அதற்கும் மேலான பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.

image

மோடி, அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக பாஜகவின் எதிர்காலம் என பேசப்பட்டு வரும் யோகியின் இடத்துக்கு திடீரென வேறு ஒருவரை கொண்டுவருவதன் பின்னணி குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் பல பின்னணிகள் பேசப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச அரசியலை கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் யோகேஷ் மிஷ்ரா என்பவர் இது தொடர்பாக பிபிசி-க்கு அளித்த பேட்டியில், "பாஜக மேலிடத்துக்கு யோகியின் செயல்பாடுகளில் அதிருப்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதே அதிருப்தி மக்களிடம் தோன்றி, யோகியின் தலைமையில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநில பாஜக தோல்வியைத் தழுவினால், அதன் தாக்கம் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில்தான் மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது இன்னொரு தோல்வி, அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்படும் நிலை வந்தால், அது மத்திய பாஜக தலைமை மற்றும் அதன் ஆட்சித் தலைமைக்கும் மிகப்பெரிய தலைவலியாகி போய்விடும் என்றே அக்கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கருதுகிறார்கள். எனவேதான் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, அரவிந்த் குமார் சர்மாவை உத்தரப் பிரதேச அமைச்சரவையில் இடம்பெற செய்ய பாஜக தலைமை முயன்று வருகிறது. ஆனால், அதற்கு யோகி சம்மதிக்கவில்லை என அவருக்கு நெருக்கமான நபர் பேசியிருக்கிறார். இதுபோன்ற அரசியல் களேபரங்களால் உத்தரப் பிரதேச பாஜக தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்