Published : 03,Jun 2021 06:21 PM

கொரோனா கால மகத்துவர்: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தினமும் 4500 பேருக்கு உணவளிக்கும் குழு

NGO-gives-food-for-4-500-people-daily-in-Chennai-Rajiv-Gandhi-hospital

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உணவளித்து சேவை செய்து வருகின்றனர் ஒரு தன்னார்வ குழுவினர். அவர்களை பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதியார். ஆனால் இன்றளவும் பசியால் வாடுபவர்களும், ஓரு வேளை உணவுக்கே தவிப்பவர்களும் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றனர். அதுவும் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில், பசியால் தவிப்பவர்கள் ஏராளம். நம்மால் முடிந்தவரை, நமக்கு தெரிந்த யாரும் பசியால் வாடக்கூடாது என்ற எண்ணமே, இவர்களின் நிலையை மாற்றி, பசியை ஆற்றும்.

image

அப்படியொரு முன்னெடுப்பை, தங்கள் பகுதியில் செய்துவருகின்றனர் சென்னையை சேர்ந்த ஒரு தன்னார்வலர்கள் குழுவினர். 

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கலிருந்தும் உடல்நிலை மோசமாக இருக்கும், அனைத்து வயதுடைய நபர்களும்  சிகிச்சை பெற தினம்தோறும் வருகின்றனர். அவர்களுடன் நோயாளியின் உறவினர்களும், உதவிக்கு வருகின்றனர். அப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்லும் மருத்துவமனையில், இந்த ஊரடங்கு காலத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு காலம் என்பதால் மருத்துவமனை அருகில் ஹோட்டல் இயங்காமல் இருப்பதே, இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பணம் இல்லாமல் இருப்பதால், பலர் இரண்டு, மூன்று நாட்கள் தண்ணீரை குடித்து விட்டு இருக்கும் சூழல்கூட நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

மருத்துவமனைக்கு வந்துவிட்டு, இப்படி பசியால் தவிக்கும் மக்களின் பசியை போக்கும் வகையில் 'மனோ மித்திர சேவா சமதி' என்ற அமைப்பு செயல்படத்தொடங்கியுள்ளது. இந்த அமைப்பின் நிர்வாகிகள், 24வது நாள்களாக இப்பகுதியில் உணவு வழங்கி வருகின்றனர்.

காலையில் இட்லி - பொங்கல் - கிச்சடி - கல் தோசை; மதியத்தில் சாம்பார் - தயிர் - காய்கறிகள் - சாதம் - சப்பாத்தி - கூட்டு - வாழைப்பழம் - மோர்; மாலையில் சூப் - டீ - காபி; இரவு அதே போன்று உணவுகள் என அனைத்து வேளையும் உணவளிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 4,500 பேருக்கு உணவளிப்பதாக கூறுகின்றார்கள் அவர்கள்.

image

இந்த சேவை பற்றி, மனோ மித்தர சேவா சமதி அமைப்பின் நிர்வாகி அசோக் ஜெயின் பேசுகையில், "நாங்கள் இதற்குமுன் எங்கள் பகுதியில் அமாவாசை தினங்களில் உணவு வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி செய்துகொண்டிருந்தபோது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறோம். இன்று 24-வது நாளாக உணவு வழங்குகிறோம்" என்றார்.

image

மருத்துவமனைக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்ட கணவருக்கு உதவியாக வந்த பெண்ணொருவர் இவர்களின் இந்த சேவை பற்றி பேசுகையில், "எனது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். எங்களிடம் இந்த நிலையில் பணமும் இல்லை. வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், எங்களுக்கு இவர்கள் சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். இவர்களை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டோம்" என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனார். இவரைப்போல எண்ணிலடங்கா நபர்கள், மருத்துவமனை வளாகத்தில் இக்குழுவினரின் சேவையால் உதவி பெற்று வருகின்றனர். 

- ஆனந்தன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்