[X] Close

"எம்.ஜி.ஆரை வயிறு வலிக்க சிரிக்கவைத்த கலைஞர்!" - நினைவலைகள் பகிர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி

சிறப்புக் களம்,தமிழ்நாடு

Three-Kisses-by-the-Kalingar-Flexible-Memories-of-Dindigul-I-Leoni

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடையே முன்பு பகிர்ந்துகொண்ட நினைவலைகளை இங்கு பார்க்கலாம்...


Advertisement

"முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நகைச்சுவை உணர்வை சொல்லித் தெரிய தேவையில்லை. கலைஞரின் மறைவுக்குப் பிறகுதான் அவரது நகைச்சுவை செய்திகளை பலரும் பரிமாறிக் கொள்கிறார்கள். அதுல முக்கியமா கலைஞர் ஒரு கல்யாணத்துக்கு வாழ்த்துரை வழங்க வந்திருக்காரு. அது ஒரு காதல் கல்யாணம் அப்ப மேடையில இருந்த மாப்ள, பொண்ணை தொட, இடிக்க, கொஞ்சன்னு ஜாலியா காதல் விளையாட்டுல இருந்திருக்காரு. இதை பாத்த மாப்ளயோட அப்பா "டேய் தலைவர் வந்துட்டாரு, கொஞ்சம் சும்மா இருடா"ன்னு சொன்னாரு. ஆனா, மாப்ள அத காதுல வாங்கிக்கவே இல்ல. இதை பாத்த கலைஞர் வாழ்த்துரையில் பேசும்போது, "தம்பி இப்படியெல்லாம் இருக்கக் கூடாது"ன்னு சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் அவர் கலைஞர் இல்ல. ஆனா எப்படி பேசினார்னா "இன்று மணவிழா கண்டிருக்கும் மணமக்கள் கடிகார முற்களைப் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று பேசினார்.

என்னடா தலைவர் கடிகார முள் போல் வாழணும்னு வாழ்த்துராறேன்னு எல்லோரும் முழிக்க, "எந்த நேரமும் சேர்ந்தே இருக்காதீர்கள், சில நேரம் விலகியும் இருங்கள். கடிகார முட்கள் சேர்ந்தும் விலகியும் இருந்தால்தான் கடிகாரம் ஓடுகிறது என்று பொருள். அதனால நீங்கள் சேர்ந்தே இருப்பது உங்களுக்கும் நல்லதல்ல; உங்கள் குடும்பத்துக்கும் நல்லதல்ல; மற்றவர்களுக்கும் நல்லதல்ல; ஆகவே மணமக்கள் கடிகார முட்களை போல் சேர்ந்தும் பிரிந்தும் இருந்து பாருங்கள் வாழ்க்கை இனிக்கும்" என்று சொன்னார். உடனே அந்த மாப்ள, பொண்ணை விட்டு விலகி நின்றார். மணமக்களை வாழ்த்துவதில் கூட அங்கே கிடைத்த அனுபவத்தை வைத்து கடிகார முட்களை போல் வாழுங்கள் என வாழ்த்தினார்.


Advertisement

image

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்துல, அமைச்சர்கள் யாரும் தங்களது சொந்த தேவைகளுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது. அப்படி மீறி பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம்னு ஒரு சட்டம் போட்டாரு. அதனால மந்திரிகள் தங்களது சொந்த தேவைகளுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்த மாட்டாங்க. இந்நிலையில், ஒருதடவ எம்.ஜி.ஆர் அமைச்சரவையில மந்திரியா இருந்த பி.டி.சரஸ்வரியோட கார் கிண்டி ரேஸ் கிளப்ல நின்றிருக்கு. இத பாத்த பத்திரிகையாளர், ஆஹா ரேஸ் கிளப்புக்கு மந்திரியோட கார் வந்ததை போட்டா எடுத்து மந்திரியோட கார் இந்த இடத்துல நிக்கிறது என்று எதிர்கட்சி தலைவரா இருந்த கலைஞர்ட்ட கொடுத்து இத சட்டமன்றததுல நீங்க கேளுங்க. இதுக்கு எம்.ஜி.ஆர் என்ன பதில் சொல்றார்னு பாப்போம்னு சொன்னாரு.

அந்த போட்டாவ எடுத்துக்கிட்டு கலைஞர் சட்டமன்றத்துக்கு போனாரு. இப்ப மாதிரியெல்லாம் அப்ப சட்டமன்றத்துல நடக்குறத ஒடனே ஒடனே எல்லாம் பாக்க முடியாது. போயிட்டு சாயந்தரம் வந்தாதான் என்ன நடந்துச்சுன்னு தெரியும். மதியானம் உணவு இடைவேளைல வெளியே வர்றப்ப எம்.ஜி.ஆரும் கலைஞரும் சிருச்சு பேசிக்கிட்டே வந்தாங்க. என்னடா நம்ம கொடுத்த போட்டா ஒர்க் அவுட் ஆகல போல இருக்குன்னு பத்திரிகைகாரங்க வெளியில நின்னு, கலைஞர் இந்த பிரச்சினையை கௌப்புல போல, ரெண்டு பேரும் ஜாலியா வர்றாங்கன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.


Advertisement

அப்ப என்னா நடந்துச்சுன்னா, இடையில அந்த வண்டி ஏன் ரேஸ் கிளப்புக்கு போச்சுன்னு அவங்க நண்பர்ட கலைஞர் வெசாருச்சு இருக்காரு. கார எடுத்துட்டு போனது அமைச்சர் இல்ல; அமைச்சரோட அம்மா. அவங்க ஏதோ ஒரு அவசரத்துல அமைச்சரோட கார எடுத்துட்டு போயிட்டாங்க. இந்த வெவரம் கலைஞருக்கு தெருஞ்சதனால பிரச்னை எதுவும் பண்ணாம அந்த போட்டாவ எம்.ஜி.ஆர் கிட்டு காட்டி, தவறு நடந்துருச்சு இனி இதுமாதிரி நடக்காம பாத்துக்கோங்கன்னு சொல்லியிருக்காரு. எம்.ஜி.ஆரும் சரி நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டாரு.

இப்ப எம்.ஜி.ஆரும் கலைஞரும் சிருச்சு பேசிக்கிட்டு வர்றப்ப பத்திரிகையாளர்கள் நிற்பதை பாத்துட்டு எம்.ஜி.ஆர் புருஞ்சுக்கிட்டாரு. சட்டமன்றததுல ஏதாவது பிரச்னை வந்திருக்கும் அத கேக்குறதுக்குதான் நிக்கிறாங்கன்னு தெருஞ்சுக்கிட்டு, "எனக்கும் கலைஞருக்கும் சட்டமன்றத்துல குடுமிபுடி சண்டை நடக்கும்னு எதிர்பாத்து வந்தீங்க அப்படித்தானே" என்று எம்.ஜி.ஆர் கேட்க, அமைதியாக இருந்த பத்திரிகையாளர்களை பாத்து "எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் குடுமிபுடி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. காரணம் எனக்கும் குடுமி இல்ல; எம்.ஜி.ஆருக்கும் குடுமி இல்லை"ன்னு கலைஞர் சொன்ன ஒடனே எம்.ஜி.ஆர் அப்படி சிருச்சிருக்காரு சட்டமன்ற வளாகத்துல. வீட்டுக்கு போன பின்பு தொப்பியை கழட்டி தலையை பாத்துட்டு கலைஞருக்கு போன் செய்த எம்.ஜி.ஆர், "நீங்க சொன்னத நெனச்சு நெனச்சு வயிறு வலிக்க சிருச்சேன்"னு சொன்னாரு. ஒரு எதிர்கட்சி தலைவருக்கும் முதலமைச்சருக்கும் எப்படி பட்ட உறவு இருந்திருக்கு என்று எங்க ஊர் கலெக்டர் பிச்சாண்டி சார் சொன்ன இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

திமுக வழங்கிய பாரதிதாசன் விருதை வாங்கிட்டு ஏற்புரையில நான் பேசும்போது சொன்னேன்... "நான் இன்றைக்கு நெறைய அரசியல் கூட்டங்கள்ல பேசுறத பாத்துட்டு அதிமுககாரங்க எங்க கட்சிக்கு வாங்கன்னு கூப்புட்டாங்க. ஒங்களுக்கு பண உதவி செய்றோம். பெரிய பொறுப்பெல்லாம் தர்றோம்னு சொன்னவங்கள்ட நான் சொன்னேன்... அறிவாலயத்து வாசல்ல சுண்டல் வித்தாவது லியோனி பொழச்சுக்குவானே ஒழிய காசுக்காக மாற்றுக் கட்சியில போய் சேர மாட்டேன்"னு பேசினேன்.

இதை கேட்டுக்கொண்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிறைவுரையில பேசும்போது, "மாற்றுக் கட்சிக்கெல்லாம் போக மாட்டேன் சுண்டல் விப்பேன்னு லியோனி சொன்னாரு. லியோனிய நான் சுண்டல் விற்க விடமாட்டேன். அவருக்கு ஒரு புத்தகக் கடை வைத்துக் கொடுப்பேன்"னு சொன்னாரு. அன்னைல இருந்து அவர் மீது இருந்த ஈடுபாடுதான் இன்னக்கி வரைக்கும் அவரை பற்றி மேடைல பேசிக்கிட்டே இருக்கேன். கட்சிக்கு அப்பாற்பட்டு தலைவர் கலைஞர் என்மீது வைத்த அந்த அளவுகடந்த பாசத்தால்தான் திமுக உறுப்பினராகவே சேந்தேன்.

திமுக பொதுக்குழு கூட்டம் கோயம்புத்தூர்ல நடந்துச்சு. அந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினரா இல்லாத என்னைய சிறப்பு அழைப்பாளரா அழைத்திருந்தாங்க. அப்ப தலைவர் வர்றதுக்கு லேட்டாச்சு. அதுவரைக்கும் பேசுங்க லியோனின்னு சொன்னாங்க. சரின்னு நான் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். அப்ப தலைவர் வந்து ஒக்காந்துட்டாரு. போதும் லியோனி, நீங்க பேச்ச முடுச்சுருங்கன்னு சொன்னாங்க. ஒடனே தலைவர் "லியோனி பேசட்டும், நான் கொஞ்ச நேரம் கேக்குறேன்"னு சொன்னாரு.

image

நான் தலைவர பாக்கணும்னா கோபாலபுரம் வீட்டுக்கு போவேன். அதே மாதிரிதான் நான் தலைவர பாக்குறதுக்காக வீட்டுக்கு போனேன். அப்ப ஏங்கூட மலேசியாவுல இருந்து வந்திருந்த ரெண்டு பேச்சாளர்களும் வந்திருந்தாங்க அவங்கதான் தலைவரை பாக்கணும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க. அனுமதி வாங்கிட்டு வீட்டுக்குள்ள போறேன். தலைவரு ரொம்ப கோபத்துல இருந்தார் போல என்னைய பாத்ததும் "போயா வெளிய, யாருயா ஒன்னைய வரச்சொன்னது? என்னா பேசுற நீ மேடைல, போ வெளிய போடான்"னு ரொம்ப கோபமா சத்தம் போட்டாரு.

எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு. என்னடா ஏம்மேல பாசமா உள்ளவரு கோபத்துல கண்ணா பின்னான்னு திட்டிட்டாருன்னு ரொம்ப வேதனையோட வெளியில வந்தேன். நான் சோகமா வர்றத வெளியே நின்றிருந்த துரைமுருகன் பாத்துட்டு, என்னா லியோனின்னு கேட்டதும் தலைவர் என்னைய போடா வெளியேன்னு திட்டிட்டாருன்னு சொல்லி அழுதுட்டேன். அதைக் கேட்ட துரைமுருகன் பயங்கரமா சிருச்சுட்டு ரொம்ப சந்தோஷம் அவரு ஒன்னைய திட்டிட்டார்ல்லா உன் மேல ரொம்ப பிரியமா இருக்கார்ன்னு அர்த்தம். நேத்து கூட என்னைய பயங்கரமா திட்டுனாருன்னு சொன்னாரு.

என்னடா இது நம்மளதான் திட்டுறாருன்னு பாத்தா அவரு கூட இருந்தவங்க எல்லாரும் திட்டு வாங்கிருக்காங்க போலன்னு நெனச்சுக்கிட்டு சண்முதகநாதன் ஐயாவ பாத்து "ஐயா ரொம்ப வேதனையா இருக்கு. போடா வெளியேன்னு சொல்லிட்டாரு"ன்னு சொன்னேன். "திட்டு வாங்கிட்டியா... நீ திட்டு வாங்குறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி என்னைய போடா வெளியேன்னு திட்டுனாருன்"னு சொல்லிட்டு சிரிச்சாரு. அவர்ட்ட ஒரு நாளைக்கி இருபது முப்பது தடவ நான் திட்டு வாங்குவேன். யாரையாவது அவரு கோபமா திட்டுனாருன்னா அவங்க மேல அவரு ரொம்ப பாசமா இருக்காருன்னு அர்த்தம்னு சொன்னாரு. நான் மனச தேத்திக்கிட்டேன்.

ஒரு வாரம் கழுச்சு திரும்ப கலைஞரை பாக்கப் போனேன். எங்க திட்டிவிடப்போறர்னு பயந்துகிட்டே தான் போனேன். ஆனா தலைவர் திட்டல. "வா நல்லா இருக்கியா ஒக்காருன்"னு அன்போடு வரவேற்றார். அன்னக்கி போடா வெளியேன்னு சொன்னதும் போயிட்டியான்னு தலைவர் கேட்டதும் "ஆமா தலைவரே வெளியே போன்னு சொன்னா போயித்தானே ஆகணும்"னு சொன்னேன். "நான் போடா வெளியேன்னு சொன்னா ஏம்பக்கத்துல வாடான்னு அர்த்தம்"னு சொல்லி சிருச்சாரு. இதெல்லாம் எனக்கு தெரியாது தலைவரேன்னு நானும் சிரிச்சேன். "ஒக்காரு" அப்படீன்னாரு. "இல்ல தலைவரே"ன்னு சொன்னதும் அவரு பக்கத்துல கூப்புட்டு ஒக்காரு வெச்சாரு.

திமுக முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்கள் எல்லாம் கையகட்டி நின்னுகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன். "அவங்க நிக்கிறாங்க அதனாலதான் ஒன்னைய ஒக்காரச் சொல்றேன்"னு சொல்லிட்டு, "நித்யா காபி கொடு"ன்னு சொல்லி ஏம்பக்கம் திரும்பி "என்னா இன்னக்கி வந்துருக்கேன்"னு கேட்டாரு. ஆயிரம் விளக்கு பகுதியில பொதுக்கூட்டம்னு சொன்ன ஒடனே "காபிய சூடா குடுச்சுட்டு ஆரிப்போயி பேசாத இதே சூடோட போய் பேசணும்" அப்படீன்னாரு.

image

ஒருநாள் காலைல நான் திண்டுக்கல் வீட்ல இருக்குறப்ப டைரக்டர் இராம நாராயணன் போன் பண்ணுனாரு. "வணக்கம், நான் இராம நாராயணன் பேசுறேன். இயல் இசை நாடக மன்ற தலைவர் நானு". "சொல்லுங்க டைரக்டரே ஒங்களோட டைரக்ஷனுக்கு நான் பெரிய ரசிகர்"னு சொன்னேன். "தலைவர் கலைஞர் ஒங்களுக்கு கலைமாமணி விருது கொடுக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்காரு"ன்னு சொன்னாரு. அவர் சொன்னத கேட்டுட்டு எனக்கு சந்தோஷம் தாங்க முடியல ரொம்ப பெருமையா இருந்துச்சு. என்னடா தலைவர் நமக்கு தொடர்ந்து அதிர்ச்சியா கொடுத்துக்கிட்டு இருக்காருன்னு.

நான், ஆர்யா, அனுஷ்கா, சோ.சத்தியசீலன் எல்லாரும் கலைமாமணி விருது ஒன்னா வாங்குனோம். அப்ப செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரா இருந்த பரிதி இளம் வழுதிதான் எல்லாருக்கும் விருது கொடுத்தாரு. நான் விருது வாங்க வர்றப்ப அமைச்சர ஒக்கார சொல்லிட்டு தலைவரே எனக்கு விருது கொடுத்தாரு. அப்புறமா என்னைய இங்கவான்னு பக்கத்துல கூப்புட்டு முத்தம் கொடுத்தாரு. இது தலைவர் எனக்கு கொடுத்த ரெண்டாவது முத்தம். இது கலைமாமணி விருது வாங்கும்போது கெடச்சது.

என்னோட கையில இருந்த விருது பணமுடிப்பு இதெல்லாம் எனக்கு பெருசா தெரியல, அவர் கொடுத்த முத்தத்துக்கு முன்னாடி. முத்தத்த வாங்கிட்டு மெய் மறந்து கிறுக்குத் தட்டிபோயி இறங்குனேன் மேடைல இருந்து. செம்மொழி மாநாடு வாய்ப்பு கூட நான் கேட்டு வாங்குனேன். ஆனா கலைமாமணி விருது நான் கேட்காமலே தலைவர் எனக்கு கொடுத்தாரு.

அதே மாதிரி திமுக முப்பெரும் விழாவுல எனக்கு பாரதிதாசன் விருது கொடுத்தாங்க. தலைவர் கையால பொன்னாடைய போத்திட்டு பொற்கிழிய கொடுக்குறப்ப லியோனி இங்கவான்னு கூப்புட்டாரு. என்னங்க தலைவரேன்னு பக்கத்துல போனேன். அப்பவும் ஒரு முத்தம் கொடுத்தாரு. இதுவரைக்கும் தலைவர்ட மூணு தடவ முத்தம் வாங்கியிருக்கேன். ஒன்னு அவரோட பவழ விழாவுல. ரெண்டாவது கலைமாமணி விருது வாங்கும் போது. மூணாவதாக பாவேந்தர் பாரதிதாசன் விருது வாங்கும் போது. நான் எத்தனையோ விருது வாங்கியிருக்கலாம் ஆனா முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரிடம் வாங்கிய அந்த மூன்று முத்தத்துக்கு எதுவும் ஈடாகாது" என்றார் திண்டுக்கல் ஐ.லியோனி.

- எம்.கலீல்ரஹ்மான்


Advertisement

Advertisement
[X] Close