[X] Close

பத்திரிகையாளர் டூ தலைமைச் செயலாளர்... - மம்தா கொண்டாடும் அலப்பன் பந்த்யோபாத்யாய யார்?

இந்தியா,சிறப்புக் களம்

Who-is-Alapan-Bandyopadhyay--Explained

ஓய்வுபெற்ற மறுநொடியே, முதல்வரின் முதன்மை ஆலோசகராக பதவி பெற்றிருக்கிறார் மேற்கு வங்க தலைமைச் செயலாளராக இருந்த அலப்பன் பந்த்யோபாத்யாய. கடந்த சில நாட்களாக தேசிய அளவில் கவனம்பெற்று வரும் அவரது பின்னணி குறித்தும், மம்தா ஏன் அவருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார் என்பது குறித்தும் சற்றே விரிவாக பார்க்கலாம்.

யாஸ் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் சென்றிருந்தபோது, முதல்வர் மம்தா பானர்ஜி புயல் சேதம் குறித்த ஓர் ஆவணத்தை மட்டும் ஒப்படைத்து விட்டு மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்த சில மணி நேரங்களிலேயே, அம்மாநில தலைமைச் செயலாளர் அலப்பன் பந்த்யோபாத்யாயவை மத்திய அரசு டெல்லிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

டெல்லியில் பொது குறைதீர் மற்றும் ஓய்வூதிய துறையில் இன்று பணியில் சேரும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், இப்போதைக்கு தங்களுடைய தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தலைமைச் செயலாளர் அலப்பன் பந்த்யோபாத்யாயவை பணியிடமாற்றம் செய்தது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

இந்த நிலையில், தலைமைச் செயலாளர் அலப்பன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் அவரை முதல்வரின் தலைமை ஆலோசகர் என்ற பதவியில் அமரவைத்துள்ளார் மம்தா. மூன்று ஆண்டுகள் முதல்வரின் ஆலோசகராக பந்த்யோபாத்யா பணியாற்ற இருக்கிறார். மம்தாவின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு வைத்த 'செக்' என பார்க்கப்படுகிறது.

அதேநேரம், பந்த்யோபாத்யாவுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காகவே இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், கொள்கை முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட பெரும் அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மம்தாவின் நடவடிக்கைகள், அவர் பந்த்யோபாத்யாயை எவ்வளவு மதிக்கிறார் என்பதையும், மேற்கு வங்கத்தின் சிவில் சர்வீஸ் கட்டமைப்பிற்கு அவர் அளித்த முக்கியத்துவத்தையும் பார்க்க முடியும்.

ஆனால், மோடி அரசின் கோபத்தை சம்பாதிக்கும் அளவிற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியைப் பாதுகாக்க மம்தா ஏன் இவ்வளவு முயற்சிகளை எடுக்கிறார் என்பதற்கு பந்த்யோபாத்யா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


Advertisement

யார் இந்த அலப்பன் பந்த்யோபாத்யா?

2002-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் அப்போதைய தலைமைச் செயலகமாக இருந்த டல்ஹெளசி சதுக்கத்தில் உள்ள ரைட்டஸ் மாளிகை வழக்கத்துக்கு மாறாக, அதிக பரபரப்புடன் இருந்தது. இசட் பிளஸ் பாதுகாப்புடன் காரில் வந்திறங்கிய அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, காலை சீக்கிரமாகவே, முதல்வர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். இதை கவனித்த பத்திரிகையாளர்கள் சிலர், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளார் என்பதறிய ஆர்வமாக இருந்தனர். அப்போது ஒரு மனிதர், பத்திரிகையாளர்களை பின்னால் இருந்து, `எல்லாம் சரியாக இருக்கிறதா?' என்று கேட்டுக்கொண்டே வரவேற்றார். புன்னகையுடனும் மிகவும் மரியாதையுடனும் நடந்துகொண்ட அவரிடம், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா வருகை குறித்து கேள்வி எழுப்பினர் பத்திரிகையாளர்கள்.

அதற்கு, ``தேநீர் கோப்பையைத் தவிர, நான் உங்களுக்கு எதுவும் வழங்க முடியாது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் செல்ல வேண்டும்" என்று மரியாதையுடன் பேசினார் அந்த மனிதர். ஆம், அந்த நபர்தான் தற்போது மம்தா - பாஜக சண்டைக்கு காரணமாக இருக்கும் அலப்பன் பந்த்யோபாத்யா.

image

பந்த்யோபாத்யா மே 17, 1961-இல் பிறந்தார், தெற்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தின் நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் படிக்கும் போதே டாப் ரேங்க் மாணவராக வலம் வந்தவர் அவர். பின்னர் கல்லூரிப் படிப்பை, புகழ்பெற்ற பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் முடித்தவர் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை துவக்கினார்.

மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமான நாளேடான ஆனந்தபஜார் பத்திரிகாவில் பணிபுரிந்த சமயத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். 1987 பேட்ச் அதிகாரியாக மேற்கு வங்க அரசின் கீழ் முதல் பணி. அப்போது தொடங்கியது பயணம். 34 ஆண்டுகள் அவரது வாழ்க்கை முழுவதும், மேற்கு வங்கத்தில் பல்வேறு பதவிகள் மூலம் சமூக கடமையை செய்து வருகிறார்.

1987-ல் பணியில் இவர் இணைந்த அதே காலகட்டத்தில்தான் புத்ததேவ் பட்டாச்சார்யா 1987 மற்றும் 1996-க்கு இடையில் தகவல் மற்றும் கலாசார அமைச்சராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில்தான் இவர்களின் அறிமுகம். இந்த அறிமுகம் நாளைடைவில் புத்ததேவ் முதல்வராகும்போது அவரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக பந்த்யோபாத்யாயவை உயர்த்தியது. அவருக்கு மட்டுமல்ல, வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் ஆட்சியாளர்களின் அனைத்து மூத்த அமைச்சர்களின் விருப்பத்திற்குறிய நபராக, பல்வேறு துறைகளைக் கையாளும் போது தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக பாராட்டப்பட்டிருக்கிறார் பந்த்யோபாத்யாய.

எப்போதும் அமைதியாக, அதிகம் பேசாத நபர் அவர். என்றாலும், ஆட்சியாளர்கள் மத்தியில் அவர் ஒரு சிறந்த 'டாஸ்க் மாஸ்டர்'. எந்த வேலையை கொடுத்தாலும், சிறப்பாக செய்து தருவதினாலேயே இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு மற்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா இருவரும் கிராமப்புற மேற்கு வங்க மக்களின் நலனுக்காக அவரது புதுமையான மற்றும் புதிய யோசனைகளுக்காக பந்த்யோபாத்யாயவை அதிகம் விரும்பினர். அரசு பணிகளில் பழுத்த அனுபவம் கொண்டவர். ஹவுரா,

வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களின் கலெக்டர், கொல்கத்தா மாநகராட்சியின் (கே.எம்.சி) ஆணையாளர், போக்குவரத்து, மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ), வர்த்தகம் மற்றும் தொழில், தகவல் மற்றும் கலாசாரம் மற்றும் வீட்டு வசதி வாரியம் என பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர் எனப் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றி இருக்கிறார்.

நல்ல பழக்கூடிய ஒரு மனிதர் பந்த்யோபாத்யாய. ஆளுநர் ஜகதீப் தங்கருடன் திரிணாமூல் அரசின் உறவு மிகவும் மோசமாக உள்ளது, இருப்பினும் ஆளுநருக்கு பந்த்யோபாத்யாய நல்ல தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இதேபோல்தான், இடதுசாரி மற்றும் திரிணாமூல் தலைவர்களுடனும். குறிப்பாக இடதுசாரிகளிடம் நெருக்கம் காண்பித்த அதிகாரியாக இவர் அறியப்பட்டாலும், திரிணாமூல் காங்கிரஸ் பொறுப்பேற்றபோதும் அவருக்கு முக்கியவத்துவம் கிடைத்தது. அதற்கு காரணம் அவரின் பண்புகள். அந்தப் பண்புகளே முதல்வர் மம்தாவிடம் அவரை நெருங்கவைத்தது. திரிணாமூல் ஆட்சியில்தான் 2019-ன் பிற்பகுதியில் உள்துறைச் செயலாளரானார்.

உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டபோது சீனியாரிட்டி வரிசையில் பார்த்தால் 20 பேருக்கு பின்பே, பந்த்யோபாத்யாய இருந்தார். ஆனால் அவரின் செயல்பாடுகள் மம்தா அரசுக்கு பிடித்துப்போக, அவரையே முதல்வர் மம்தா அரசு உள்துறை செயலாளராக்கியது. உள்துறை செயலாளராக இருப்பதற்கு முன்பு, போக்குவரத்து செயலாளராக பணியாற்றியிருந்தார், இப்போது பாஜக எம்எல்ஏ மற்றும் மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து ஆதிகாரிதான் போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சுவேந்து ஆதிகாரி திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியபோது, பந்த்யோபாத்யாயிடம் போக்குவரத்து துறையின் முழு பொறுப்பையும் கொடுத்தார் மம்தா. எப்போது அழைத்தாலும், எதை பற்றி கேட்டாலும் சொல்லக்கூடிய நபர் பந்த்யோபாத்யா.

அரசு மீட்டிங்கின்போது எப்போதும் மம்தா பானர்ஜியை "மேடம் முதல்வர்" என்று அழைப்பது, மம்தா தனது அறைக்கு வரும்போது எழுந்து நிற்பது அவரின் வழக்கம். இப்படி தனது செயல்களால் விரைவாகவே மம்தா மனதில் இடம்பிடித்துவிட்டார். இதனால் தான் பந்த்யோபாத்யாயவை `ஒரு நாளில் 24 மணிநேரமும் கிடைக்கக்கூடிய ஒரு அதிகாரி' என்று புகழ்கிறார் மம்தா.

வங்கத்தின் மாநில செயலகமான நபன்னாவின் வட்டார தகவலின்படி, மம்தா பந்த்யோபாத்யாயவை ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக மதிக்கிறார். ஒன்று பந்த்யோபாத்யா தலைமைச் செயலளாராக இருந்தபோது வகுத்து கொடுத்த துவாரே சர்க்கார் (வீட்டு வாசலில் அரசு) போன்ற சில திட்டங்கள் மம்தாவின் ஆட்சிக்கு அளப்பரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது. இதுபோன்ற திட்டங்கள் தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணியாகவும் அமைந்தது. இதேபோல், கொரோனா தொற்றுநோய் முதல் அம்பான் மற்றும் யாஸ் சூறாவளிகள் வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து குழுக்களுக்கும் தலைமை தாங்கி மம்தாவின் கட்டளைக்கு இணங்க வழிநடத்தியவரும் அவர்தான். இதுபோன்ற காரணங்களால் மம்தாவுக்கு பிடித்த அதிகாரியாக சமீப காலங்களில் மாறிப்போனார்.

இதையடுத்துதான், "பந்த்யோபாத்யாய மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரி, காலை 7 மணிக்கு ஆனாலும் சரி அல்லது இரவு 10 மணி ஆனாலும் சரி எனது அழைப்பு எப்போதும் இருந்தாலும் பந்த்யோபாத்யாய எடுத்து வேலை செய்வார். ஆனால் அவர் ஒரு பெங்காலி என்பதாலும். மக்களுக்காக வேலை செய்வதாலும் மத்திய அரசால் துன்புறுத்தப்படுகிறார். மேற்கு வங்கத்தின் நலன்களுக்காக அவரது சேவை எங்களுக்குத் தேவை என்பதாலேயே அவருக்கு தற்போது புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது" என்று பேசி தனது போர்ப்படை தளபதிக்கு முதல்வரின் முதன்மை ஆலோசகர் என்ற பதவியையும் கொடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close