ஊரடங்கில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்: தமிழகத்தில் அரங்கேறும் அவலம் - விரிவான அலசல்

ஊரடங்கில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்: தமிழகத்தில் அரங்கேறும் அவலம் - விரிவான அலசல்
ஊரடங்கில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம்: தமிழகத்தில் அரங்கேறும் அவலம் - விரிவான அலசல்

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாத வாக்கிலும், தற்போதும் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையை அமல் செய்துள்ளது அரசு. இந்நிலையில் இந்த ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அரங்கேற்றம் என்பது அதிகரித்து வருவதாக CHILD RIGHTS AND YOU என்ற அமைப்பு குழந்தை திருமணங்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தின் நிலை?

சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த மாவட்டங்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் வாழ்விட பகுதிகளான 71 இடங்களில் இந்த திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2020 மே மாதத்தில் தமிழகத்தில் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 2020 மே மாத புள்ளி விவரங்களின் படி சேலத்தில் 98 திருமணங்களும், தர்மபுரியில் 192 திருமணங்களும் நடந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமண எண்ணிக்கையை காட்டிலும் அதிகம். ஊரடங்கு காலத்தில் திருமண செலவுகள் குறைவு என்பதே இந்த திருமணம் அதிகம் நடக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மே மாதத்தில் முகூர்த்த நாட்களும் அதிகம் என்பது இதற்கு மற்றொரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் போனால் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் CRY தெரிவித்துள்ளது. 

இந்திய அளவில் எப்படி?

உலகில் நடைபெறும் மூன்று திருமணங்களில் ஒன்று இந்தியாவில் அரங்கேறி வருகிறது. உலகளவில் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவிகிதம். தேசிய அளவில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களாக உள்ளன. பாரம்பரியம், பாலின சமத்துவமின்மை, வறுமை மாதிரியானவை இந்தியாவில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெற காரணமாக பார்க்கப்படுகிறது. 

“குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்ற கொடூர மிக்க மனித உரிமை மீறலாக குழந்தை திருமணத்தை பார்க்க வேண்டி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 50 முழு நேர பணியாளர்கள் குழந்தை உரிமை மீறலை கண்காணிக்கும் பணியில் இருக்கின்றனர். இது தவிர சைல்ட்லைன் பவுண்டேஷன் உள்ளது. அதே போல பல அமைப்பகள் குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வருகின்றன. இவ்வளவு பேர் இருந்தும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடைபெறுகிறது என்றால் இந்த பணியாளர்கள், அமைப்புகள் தங்களது பணியை முறையாக செய்ய தவறிவிட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அதனால் இவர்கள் மீது முழுமையாக பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. பரவலான தொடர்புகளை இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மேற்கொள்ள தவறியதே இதற்கு காரணமாக பார்க்க வேண்டி உள்ளது. பல தளங்களில் உள்ளவர்கள் இணைந்து செயல்பட்டால் தான் இதனை தடுக்க முடியும்” என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன்.  

இந்த குழந்தை திருமணங்களுக்கு பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை தயார் செய்கிறார்கள்?

“குழந்தைகளின் வாழ்வே பெற்றோர்கள் எடுக்கும் முடிவுகளில் தான் உள்ளது. குழந்தைகள் என்று இல்லை 18 வயதை கடந்தவர்களும் பெற்றோர்களின் முடிவின் படியே செயல்படுகின்றனர். ‘அப்பாவும், அம்மாவும் நமக்கு சரியானதை தான் செய்கிறார்கள்’ என குழந்தைகளும் எண்ணுவது உண்டு. பெரும்பாலும் பெற்றவர்கள் குழந்தைகளை இது மாதிரியான திருமணங்களில் மிரட்டல் தொனியை பின்பற்றுவதில்லை. சென்டிமென்டை பெற்றோர்கள் பின்பற்றுவார்கள்” என்கிறார் மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம். 

அதிரடி காட்டிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்!

தமிழகத்தின் தலைமை செயலகத்தில் மாவட்ட சமூக நல மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளுடன் குழந்தை திருமண தடுப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இதனை தடுக்க அதிரடிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

“குழந்தைத் திருமணத்தை நடத்துவோர் மட்டுமின்றி அதில் பங்கேற்பவர்கள் மீதும் நடவடிக்கை. மெத்தன போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது” என கூட்டத்தில் அறிவித்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன். 

தொகுப்பு : எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com