Published : 31,May 2021 08:25 AM

பொய் வேண்டாம், தயக்கமும் வேண்டாம் - 'ஜூம் களைப்பு' வாட்டாமல் நாம் 'விடுபடுவது' எப்படி?

Creative-ways-to-leave-your-call-politely--Zoom-fatigue-Explained

'ஜூம் களைப்பு' (Zoom fatigue) என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கேள்விபட்டிருக்கவில்லை என்றாலும் கூட, நீங்களே கூட ஜூம் களைப்பை அனுபவித்திருக்கலாம். தொடர்ச்சியாக அல்லது அதிக நேரம் வீடியோ சந்திப்புகளில் ஈடுபடுவதால் ஏற்படும் சோர்வைதான் இவ்வாறு சொல்கின்றனர்.

ஜூம் களைப்பு என்று சொல்லப்படாலும், உண்மையில் இது வீடியோவால் ஏற்படும் களைப்புதான். ஜூம் என்றில்லை, கூகுள் மீட், வெபெக்ஸ் என எந்த வகையான வீடியோ சந்திப்பு சேவையை பயன்படுத்தாலும், அதிகபடியான நேரம் வீடியோ அறையிலேயே இருக்க நேர்வதால், உடலளவிலும் மனதளவிலும் ஏற்படும் தாக்கத்தை 'ஜூம் களைப்பு' என பொதுவாக சொல்கின்றனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியிருக்கும் மாணவர்கள் முதல், அலுவல நிமித்தமாக வீடியோ சந்திப்புகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் வரை பலரும் ஜூம் களைப்பை உணர்ந்திருக்கலாம்.

இவர்கள் மட்டும் என்றில்லை, கொரோனா பெருந்தொற்று சூழலில் தனிநபர்களில் பெரும்பாலானோர் வீடியோ வாயிலாகவே நண்பர்களையும் நெருக்கமானவர்களையும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அதோடு, மெய்நிகர் விருந்து, வீடியோ அரட்டை என நேரத்தைக் கழிக்கவும் வீடியோதான் வடிகாலாக இருக்கிறது. இவர்களும்கூட 'ஜூம் களைப்பு' இலக்காகலாம் என்பதோடு, இந்தச் சந்திப்புகளை முடிவுக்கு கொண்டு வருவதும் ஒரு சிக்கலாகி வருகிறது என்பதுதான் நம் காலத்து பிரச்னையாகி வருவதாக வல்லுனர்கள் சொல்கின்றனர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 'ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ' நடத்திய ஆய்வு, 'ஜூம் களைப்பு' ஏற்படுவது உண்மைதான் என கண்டறிந்துள்ளதோடு, இதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளது. நேர் சந்திப்புகளை வீட, வீடியோவில் மறுமுனையை இருப்பவர்களை திரையில் பார்த்துக்கொண்டே இருப்பதும், மொழி கடந்த குறிப்புகளை புரிந்துகொள்ள உடல் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்க நேர்வதும், இதனால் மூளைக்கு ஏற்படும் சுமையும் இதற்கான காரணங்களாக பட்டியலிடப்படுகின்றன.

இதேபோல, வீடியோ உரையாடல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள், பேச்சை முடிப்பதில் உள்ள பிரச்னைகள் பற்றி பேசுகின்றன. அதிலும் குறிப்பாக வீடியோ உரையாடல்கள் முடிவில்லாமல் நீண்டுக்கொண்டிருக்கும்போது, எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பது சிக்கலாக அமைவதாக தெரிய வந்துள்ளது.

image

நேர் பேச்சில் ஈடுபட்டிருக்கும்போது, எதிரில் இருப்பவர் நிற்காமல் பேசிக்கொண்டே இருந்தால், கைகடிகாரத்தை பார்ப்பதன் மூலம் அல்லது செல்போனை பார்ப்பதன் மூலம், அவசர வேலை இருக்கிறது, வரட்டுமா என கூறி பேச்சை நாசுக்காக முடித்துக்கொள்ளலாம். ஆனால், வீடியோ சந்திப்புகளில் இருந்து பாதியில் வெளியேறுவது எப்படி?

திடீரென நாமாக சந்திப்பை விட்டு வெளியேறுவது தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் என்ன செய்வது?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், வீடியோ சந்திப்புகளை அதிக நேரம் நீடிக்காமல் முடித்துக்கொள்வதற்காக பலரும் புத்திசாலித்தனமான உத்திகளை கையாண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

மதிய உணவு முதல் நெட்ஃபிளிக்ஸில் படம் பார்ப்பது வரை பலவிதமான வேலைகள் வீடியோ சந்திப்புகளில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு, கல்லூரி மாணவி ஒருவர், 'மதிய உணவை தருவித்திருக்கிறேன், சாப்பிட வேண்டும்' என்பதை காரணம் காட்டி குட்பை சொல்வதாக கூறியிருக்கிறார். இன்னொருவரோ, 'நெட்ஃபிளிக்சில் படம் பார்க்கும் நேரம் வந்துவிட்டது' என்பதை பேச்சை முடிப்பதற்கான காரணமாக சொல்வதாக கூறியிருக்கிறார்.

அலுவலக பணியில் இருப்பவர்களோ, திடீரென லேப்டாப்பில் டைப் செய்யத் துவங்கி, 'ஒரு பிரசன்டேஷனை உருவாக்க வேண்டும்' எனக்கூறி பேச்சை முடித்துக்கொள்கின்றனர். இன்னும் சிலரே, 'ஒரு அழைப்பு வருகிறது' என வராத அழைப்பை காரணம் காட்டி பேச்சை முடிக்கின்றனராம்.

தொழில்நுட்ப கில்லாடிகள் எனில், திடீரென தங்கள் கம்ப்யூட்டர் திரையை உரைய வைத்துவிட்டு, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட தோற்றத்தை உண்டாக்கி வெளியேறுவிட்டு, அதன் பிறகு மேசேஜிங்கில் தகவல் தெரிவித்து விடுவது போன்ற உத்திகளை கையாள்கின்றனர்.

இப்படியாக பலரும், வீடியோ உரையாடல்களை முடிவுக்கு கொண்டு வர விதவிதமான பொய்களை பயன்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

image

இந்தப் பொய்கள் ஆபத்தில்லாத சின்ன சின்ன பொய்கள் அல்ல என்பது மட்டும் அல்லாமல், இதற்கான சமூகவியல் விளக்கத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். அதாவது, உரையாடல்களை முடிக்க நேர்த்தியான காரணத்தை பயன்படுத்தும்போது மறுமுனையில் இருப்பவர்கள் அதிருப்தி அடைவதற்கு பதில், மகிழ்ச்சியே அடைக்கின்றனராம். ஏனெனில், அவர்களும் கூட பேச்சை முடிக்கவே விரும்பியிருக்கின்றனர்.

ஆனால், அவர்களும் எப்படி முடிப்பது எனத் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தபோது, மறுமுனையில் இருப்பவர் அதை செய்வது சாதகமாக அமைந்துவிடுகிறதாம்.

ஆக, வீடியோ அழைப்புகள் முடிவில்லாமல் நீண்டுக்கொண்டே இருந்தால், அதை முடித்துவைக்க தயங்க வேண்டாம். ஆனால், அதை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செய்யுங்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே, ஆபத்தில்லாத சின்ன சின்ன பொய்களைத் தவிர்த்துவிட்டு, தயங்காமல் உண்மையுடன் சாதுர்யமான உத்திகளை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்குங்கள்.

உங்களுக்கு ஜூம் களைப்பு ஏற்படாமல் தற்காத்து உடல்நலனையும் மனநலனையும் பேணிப் பாதுகாக்க, அந்தந்த சூழலுக்கு ஏற்ப நேர்த்தியான காரணங்களை முன்வைத்து, இணைப்பில் உள்ளவர்கள் புன்னகையுடன் 'பை பை... டேக் கேர்' சொல்லும் அளவுக்கு சரியான உத்திகளைக் கையாளத் தொடங்குங்கள்.

- சைபர்சிம்மன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்