[X] Close

கொரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த என்ன செய்கிறது கேரள அரசு? - ஒரு பார்வை

இந்தியா,சிறப்புக் களம்,டெக்னாலஜி,கொரோனா வைரஸ்

Big-challenges-for-the-Pinarayi-Vijayan-government-over-second-Covid-wave

கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கேரள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக சற்றே விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்தில் இருக்கிறார். முதல் இன்னிங்ஸின்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தது. தற்போது கேரளத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் வலுவான மருத்துவமனை கட்டமைப்பு இருந்தபோதிலும், வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 28 முதல் 2021 மே 22 வரை 7,170 பேரை இழக்க நேர்ந்துள்ளது. அதிலும், இந்த ஆண்டு மே 1 முதல் 22 வரை, கேரளாவில் 1,862 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இறப்பு விகிதம் 0.3 சதவீதத்திற்கும் அதிகமாகும். மே 22 நிலவரப்படி, மாநிலத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 289,283 ஆகவும், பரிசோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 22.63 சதவீதமாகவும் இருந்தது.

image


Advertisement

இதையடுத்து பினராயி விஜயன், மே 22 அன்று, மூத்த அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். நோய்த்தொற்று வீதத்தைக் குறைப்பதிலும், சிக்கலான நோயாளிகளுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அவர் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார். வரவிருக்கும் பருவமழை காலத்தில் பரிசோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 30 சதவீதத்தை தாண்டினால் நிலைமை மோசமாகிவிடும் என்று எச்சரித்தார்.

முன்னதாக திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் 'டிரிபிள் லாக்டவுன்' கட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஒருநாள் முன்பு மாநிலம் முழுவதும் லாக்டவுன் மே 30 வரை நீட்டித்திருந்தார் முதல்வர் பினராயி. தற்போது மே 22 ஆம் தேதி நிலவரப்படி 30 சதவீதத்திற்கு மேல் பரிசோதனை பாசிட்டிவிட்டி விகிதத்தை கொண்ட மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 'டிரிபிள் லாக்டவுன்' போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா இரண்டாம் அலைகளை கட்டுப்படுத்த கேரளா திட்டமிட்டுவதற்கு மாநில அரசுக்கு ஆலோசனை கொடுத்தவரும், பொது சுகாதார நிபுணரும் நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் பி.எக்பால் இதுதொடர்பாக பேசுகையில், ``பரிசோதனை பாசிட்டிவிட்டி வீதம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து வருவதன் அடிப்படையில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பாசிட்டிவ் சிக்னல்களை பெற்றுள்ளது. இந்தப் பயன் மே 8 முதல் விதிக்கப்பட்ட நடைமுறையால் கிடைத்துள்ளது. மே மாத இறுதிக்குள் பரிசோதனை பாசிட்டிவிட்டி விகிதத்தை 15 சதவீதத்திற்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். அதேநேரத்தில், நாங்கள் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க முயற்சிக்கிறோம். தடுப்பூசி இல்லாமல், வரவிருக்கும் கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலைகளை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.


Advertisement

image

அவர் கூறியது போல லாக்டவுன் மட்டுமல்ல, இரண்டாவது அலையை சமாளிக்க கேரளா பல்வேறு உத்திகளை கையாண்டது. தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் வகையில் 'ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்' எனப்படும் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தது. இதேபோக, 24 மணிநேர டெலிமெடிசின் ஹெல்ப்லைன், தன்னார்வலர்கள் மூலம் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த ஆக்சிஜன் அளவு போன்ற நிலையை பரிசோதித்து அரசுக்கு தெரிவிக்கவைப்பது, அதன்மூலம் நோயாளிக்கு மருத்துவமனையில் அனுமதி அல்லது வீட்டுவசதி தேவைப்படுகிறதா என்று தீர்மானிக்கும் மருத்துவ குழுவுக்கு தரவுகளை அனுப்புவது போன்ற பல திட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.

இப்படி பல்வேறு வழிமுறைகளை அமல்படுத்தினாலும், மறுபுறம் ஒரு சிக்கலை எதிர்கொண்டது கேரள அரசு. அது தடுப்பூசி தட்டுப்பாடு சிக்கல்தான். கடந்த சில நாட்களாக அங்கு தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள கேரள அரசின் மூத்த அதிகாரி, ``தடுப்பூசிகள் கிடைப்பது தான் தற்போது எங்களுக்கு இருக்கு முக்கிய கவலை. தடுப்பூசி பற்றாக்குறை நோய்த்தொற்று வீதத்தை குறைக்கும் எங்கள் உத்திகளைத் தகர்த்துவிடும். தடுப்பூசிக்கு தேவையான அளவு மாநிலத்திற்கு கிடைக்குமா என்பதில் எங்களுக்கு சரியான தெளிவு இல்லை" என்று பேசியிருக்கிறார்.

இந்த தடுப்பூசி தட்டுப்பாடு மாநில அரசை வேறு முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. அது, மாநிலத்தில் தடுப்பூசி உற்பத்தி பிரிவுகளை அமைக்க மருந்து நிறுவனங்களுடன் கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளது. அதற்கேற்ப, திருவனந்தபுரம் மாவட்டம் தொன்னக்கலில் அமைந்துள்ள வைராலஜி நிறுவனத்தில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி பிரிவு ஒன்றை அமைப்பதற்காக விஞ்ஞானிகள் உட்பட உயர்மட்ட குழுவை பினராயி விஜயன் சமீபத்தில் அமைத்தார். இந்தக் குழு மூலம் மருந்து ஆலை அமைப்பதற்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது கேரளாவில்தான். அப்போது இருந்து கொரோனா விவகாரத்தில் கேரளா பல ட்விஸ்ட்களை கண்டு வருகிறது. எனினும், முதல் அலையில், கேரளா தொற்றுநோயை பல மாநிலங்களை விட மிகவும் திறம்பட நிர்வகித்தது. இதில் அரசுக்கு கிடைத்த நல்ல பெயர், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசாங்கம் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு காரணியாக அமைந்தது. அதன்படி இரண்டாவதாக அமைந்துள்ள அரசு, தற்போது கொரோனாவை முன்பைவிட சீக்கிரமாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இல்லையென்றால், அதுவே அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

image

இதற்கிடையே, கொரோனா விவகாரத்தில் கேரள அரசின் பணி தொடர்பாக எல்.டி.எஃப் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஏ. விஜயராகவன், "கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியுற்றுள்ளது. அவர்களின் அலட்சியம் மற்றும் குறுகிய பார்வை மக்களை மரணத்திற்கு தள்ளியுள்ளது. ஆனால் எல்.டி.எஃப் அரசாங்கம் நோய்த்தொற்று வீதத்தை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கவும் அனைத்து முயற்சிகளையும் செய்யும்.

உயிர்களைக் காப்பாற்ற கடுமையான கொரோனா நெறிமுறைகளின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் ஒரு சமூக ஊடக பிரசாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறோம்" என்று கூறியிருக்கிறார். அவர் அரசின் பணிகள் தொடர்பாக மேம்படுத்தி பேசினாலும், கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, ஆண்டு இறுதிக்குள் மூன்றாவது அலை எதிர்பார்க்கப்படுவதால், அடுத்து வரவிருக்கும் மாதங்கள் கேரள அரசுக்கு நிச்சயம் சவாலாகவே இருக்கும்.


Advertisement

Advertisement
[X] Close