Published : 27,May 2021 04:47 PM
'பணம் பிரச்னையே இல்லை; சிகிச்சை?'- வெளிநாடுகளுக்கு குடியேற விரும்பும் பணக்கார இந்தியர்கள்!

கொரோனா முதல் அலையில் உயிர் சேதம் இருந்தாலும், பெரிய அளவுக்கு இல்லை. ஆனால், இரண்டாம் அலையில் உயிர் சேதம் பெருமளவுக்கு இருக்கிறது. இந்த உயிர் சேதம் பல உளவியல் சிக்கல்களை உண்டாக்கி இருக்கிறது. அதனால், வெளிநாடுகளில் சென்று குடியேற விரும்புவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடியேறுவதற்கான விசாரிப்புகளும் ஏற்பாடுகளும் சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக 'எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
புதுடெல்லியில் உள்ள பணக்காரர் ஒருவரின் உறவினர் மகன் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார். இந்தக் குடும்பத்துக்கு பணம் ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், சிகிச்சை கிடைக்கவில்லை என்பதற்காக நியூசிலாந்து அல்லது கனடாவுக்கு குடிபெயர திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். நொய்டாவில் உள்ள ஒரு குடும்பம் கத்தாருக்கு ஏற்கெனவே சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.
பணம் இருந்தும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்பதற்காக வேறு நாடுகளில் குடியேற இருப்பதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் இருப்பது, போதுமான மருந்துகள் கிடைக்காமல் இருப்பதால் மற்ற நாடுகளுக்கு விண்ணப்பிபது உயர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
விசா மற்றும் குடியேற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் சுமார் 20 சதவீதம் அளவுக்கு இதுபோன்ற விசாரிப்புகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். தவிர, நிலைமை மேம்பட்டதும் இந்த எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளுக்கு மட்டுமல்லாமல் சிறிய நாடுகளான ஆஸ்திரியா, அயர்லாந்து, போர்ச்சுகல், மால்டா, சைப்ரஸ், துருக்கி உள்ளிட்ட சிறு சிறு நாடுகளுக்கு இடம்பெயர்வதிலும் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.
முதல் அலையில் எங்கோ நடந்த பாதிப்பாக கொரோனா இருந்தது. ஆனால், இரண்டாம் அலையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நெருக்கமான அல்லது தெரிந்த நபர்கள் மரணம் அடையும் செய்தி பெரும்பாலானவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக விசா உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பும் பணக்காரர்களின் வெளியேற்றம் நடந்திருக்கிறது. அது தொழில்புரிவதற்கு ஏற்ற சூழ்நிலை இங்கு இல்லை அல்லது சாதகமான வரி அமைப்பு இல்லை என்பதால் வெளியேற்றம் நடந்திருக்கிறது. ஆனால், மருத்துவக் காரணங்களால் வெளியேற முடிவெடுத்திருப்பது துரதிஷ்டவசமானது.
தகவல் உறுதுணை: தி எகாமினக் டைம்ஸ்