Published : 27,Jan 2017 02:02 PM

ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Municipal-elections-before-the-end-of-April--State-Election-Commission

ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பாணை எப்போது வெளியிடப்படும் என்பதை வரும் 31ஆம் தேதி தெரிவிக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டதாகக் கூறியும், வார்டுகள் ஒதுக்கீடு முறையாக செய்யப்படவில்லை என்று கூறியும் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ் பாரதி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்தும், முறையான வழிமுறைகளை கடைப்பிடித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பான விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நூட்டி ராமமோகன் ராவ், எஸ்.எம். சுப்ரமணியன் ஆகியோர், தேர்தல் நடத்த புதிய அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் வரும் 31ஆம் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து உறுதியானத் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்