Published : 25,May 2021 08:50 PM

ஆன்லைன் வகுப்புகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? - ஓர் அலசல்

கொரோனா பெருந்தொற்று நோய் தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் பூட்டப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அதுவும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டது. இந்த அசாதாரண சூழலினால் அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ராஜகோபாலன் என்ற வணிகவியல் பாட ஆசிரியர், மாணவிகளுக்கு பாடத்திற்கு அப்பாற்பட்டு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்புவது, ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் தோன்றி பாடம் எடுப்பது என மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து புகார்கள் முன்வைக்கப்பட்ட சூழலில் அவரை கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது.  

விசாரணையில் கடந்த ஐந்து வருடங்களாக மாணவிகளிடம் இது போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு அந்த பள்ளியில் பணிபுரியும் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம் பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை மேற்கொள்ள உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகத்தினரும் காவல் துறையின் விசாரணையின் ஆஜராகினர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சைபர் துறை சார்ந்த வல்லுனரிடம் பேசினோம்... 

ஐந்து வருடங்களாக இந்த பாலியல் சீண்டல் வெளியில் தெரியாமல் இருந்தது எப்படி?

வில்லவன் ராமதாஸ் - கல்வி ஆலோசகர் 

“சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு இத்தனை நாட்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக கண்டும் காணாமல் இருந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இது மாதிரியான செயலில் இருந்தால் அது நிச்சயம் எப்படியாவது அவர்களுக்கு செவி வழி செய்தியாக வந்திருக்கும். ஆனால் ஏதோ ஒன்று அவர்களுக்குள் இருந்துள்ளது. அதனால் இந்த விஷயம் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வரவில்லை. 

முக்கியமாக பார்த்தோம் என்றால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் வீட்டில் இதுமாதிரியான குற்றங்கள் ஏதேனும் நடந்தால் தங்களிடம் தெரிவிக்க வேண்டுமென சொல்ல வேண்டும். குழந்தைகளுடன் இணக்கமாக இருப்பது அவசியம். சமயங்களில் குழந்தைகள் பெற்றோர்களிடம் சொன்னாலும் அந்த விவகாரம் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் வேறு விதமாக இருப்பதால் பெற்றோர்களே தயக்கம் காட்டலாம்.

அதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு உதவும் கவுன்சிலிங் மற்றும் குறைதீர் மையத்தை அமைத்து இது மாதிரியான உளவியல் ரீதியாக புகார்களை தங்களிடம் தெரிவிக்க சொல்லலாம். அதன் மூலம் அந்த தயக்கம் உடைக்கப்படும். இது சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளளவும் உதவும். ஆனால் சம்மந்தமில்லாத விஷயங்களுக்கெல்லாம் அஞ்சுவது தான் இந்த மாதிரியான குற்றத்தில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து செயல்பட தூண்டுகிறது” என்கிறார் வில்லவன் ராமதாஸ்.

image

இந்த வழக்கில் மேலும் ஆதாரங்கள் வேண்டும் என சொல்லி பெற்றோர்கள் புகார் கொடுக்க சொல்லி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கை வலுப்படுத்த அந்த புகார்கள் உதவுமா?

பாலமுருகன் - குழந்தைகள் நல செயற்பாட்டாளர் 

“தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றத்தை நிரூபிக்க தற்போது உள்ள ஆதாரங்களே போதும். பல்வேறு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது தண்டனை பிறப்பிக்கவும் வழிகள் உள்ளன.

பெற்றவர்கள் தயங்கினாலும் ரகசிய வாக்குமூலம் மாதிரியான வழிமுறைகளும் உள்ளன. அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். புகார் கொடுப்பவர்களின் அடையாளம் வெளியில் தெரியாது என உத்தரவாதம். இந்த விவகாரத்தில் பள்ளிக்கும் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. விசாரணைக்கு சென்ற அரசு அதிகாரியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருந்தது தான் அந்த சந்தேகத்திற்கு காரணம்” என்கிறார் பாலமுருகன்

கைது செய்யபட்டுள்ள ராஜகோபாலன் தனது கைபேசி மற்றும் கணினியில் இருந்த குறுஞ்செய்தி தகவல்களை அழித்துள்ளார் என தெரிகிறது. அதை முழுவதுமாக மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளதா?

தினேஷ் - சைபர் நிபுணர் 

“இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தகவல்களை நிச்சயம் மீட்டெடுக்கலாம். தற்போது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது ஸ்க்ரீன்ஷாட் தான். அந்த சம்பந்தப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்டை மீட்டெடுக்கும் வழிகள் உள்ளன. அதே போல வீடியோ மாதிரியான ஆன்லைன் வகுப்புகளில் ஒரு அமர்வை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் அந்த அமர்வுகளை நிச்சயம் பேக்-அப் வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளன” என்கிறார். 

ஆன்லைன் வகுப்புக்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர உள்ளதாக அரசு என தகவல் வந்துள்ளது. அதில் என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டும்?

“ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து பயிற்சி கொடுக்க வேண்டும். இந்த ஆன்லைன் வகுப்பு முறையில் அத்துமீறல்கள் இருந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவது என அனைத்தையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆன்லைன் வகுப்பிற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வரவேற்கதக்கது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் எந்தளவிற்கு மாணவர்களை சென்றடைந்துள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி முடிவுகளை எடுக்க வேண்டும்” என்கிறார் வில்லவன் ராமதாஸ். 

தொகுப்பு: எல்லுச்சாமி கார்த்திக்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்