[X] Close

கொரோனா விரைவு செய்திகள் மே22: தளர்வற்ற முழு பொதுமுடக்கம் முதல் கருப்பு பூஞ்சை பாதிப்பு வரை

கொரோனா வைரஸ்

Covid-19-Fast-news-for-today

கொரோனா விரைவு செய்திகள் மே22 : தளர்வற்ற முழு பொதுமுடக்கம் முதல் கருப்பு பூஞ்சை பாதிப்பு வரை


Advertisement

1. தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா உச்சத்தை எட்டும் என்பதால் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே தொற்றை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து, வரும் 24ஆம் தேதி முதல் எந்தவித தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை தோட்டக்கலை துறை மூலம் வாகனங்களில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் உணவு வேளையின் போது பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. SWIGGY, ZOMATO போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்குகளும், ஏடிஎம் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி வழங்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், வேளாண் விளை பொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும், சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வழிகாட்டுதல் படி இயங்கும் எனவும், தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

2.வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மளிகை, காய்கறி கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனங்கள் மூலமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் காலை 10 மணிவரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக, தோட்டக்கலை துறை மூலமாக மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாகனங்கள் மூலமாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணங்களுக்கு சென்றுவர இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு திருமணங்களுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

3. திங்கள்கிழமை முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது.


Advertisement

பொதுமக்கள் நலன் கருதி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்துவிதமான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், தேநீர் கடைகள், சலூன்கள் உள்ளிட்டவை அனைத்தும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. அதேபோல், டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4. பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வரை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து சேவைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மதுரையில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சென்னை கோயம்பேட்டியில் போக்குவரத்து துறைசெயலர் சமயமூர்த்தி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை தவிர பிற நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம், கோயம்பேட்டிற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணிக்குமாறு மக்களை தமிழக போக்குவரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

5. மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மேலும், நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்பதைத் தடுக்க, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6. கொரோனா 2ஆம் அலையில் நாடு முழுவதும் இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச பாதிப்புகளை எதிர்கொண்ட தலைநகர் டெல்லியில், 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்ததாக பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும், ஆந்திராவில் 26 மருத்துவர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 14 மருத்துவர்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவரும் சூழலில், தொற்று பாதிப்புக்கு ஆளாகும் மருத்துவர்கள் உயிரிழக்க நேரிடுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

7. கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தொடர்ச்சியாக தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையிலும் 6 பேருக்கு நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

8. முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 24ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்பதால் மக்கள் பாதிக்காத வகையில், காய்கறி, மளிகை பொருட்களை வாகனம் மூலம் தடையின்றி விநியோகிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9. கொரோனாவை தொடர்ந்து நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 8 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 2 ஆயிரத்து 281 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்ட்ராவில் 2 ஆயிரம் பேரும், ஆந்திராவில் 910 பேரும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் இந்நோய்க்கு இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 23 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பொருத்து மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சை தொற்று நோய்க்கான சிகிச்சையை பெற வழிவகை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கருப்பு பூஞ்சை நோய் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நோய்க்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள மருந்தை அதிகளவில் தயாரித்து மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் சோனியா கேட்டுக் கொண்டுள்ளார்.

11. மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றும் 16 மருத்துவர்கள், 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கொரோனா வார்டில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12. கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்த இதய நோயாளி ஒருவர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை இறக்கிவிட்டபின் ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றியபோது, தீ விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிய பராமரிப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

13. கொரோனா தொடர்பான புதிய புள்ளிவிவரங்கள் அதன் பரவல் குறைந்து வருவதை காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால், தொற்று கண்டறியப்படும் விகிதம், சிகிச்சையில் உள்ள நோயாளிகள், தினசரி புதிய தொற்றுகள் என 3 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் கொரோனா குறைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். கடந்த 10ஆம் தேதி 24.83% ஆக இருந்த தொற்று கண்டறியப்படும் விகிதம் 22ஆம் தேதி 12.45% ஆக குறைந்துள்ளதாக வி.கே.பால் தெரிவித்தார். சிறுவர்களை கொரோனா தொற்றினாலும் அவர்களுக்கு பாதிப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்த வி.கே.பால் அவர்கள் மூலம் பிறருக்கு தொற்று பரவ வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை தொடர்ந்து 6ஆவது நாளாக 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார். வீடுவீடாக சென்று உடல்நிலை பரிசோதனை எடுப்பது, நாள்தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்துவது, கார் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் மாற்றுத்திறனாளிகளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவது உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

14.அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி B1.617.2 என்ற உருமாற்ற கொரோனா வைரசுக்கு எதிராக 80% செயல்திறன் பெற்றுள்ளதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகெங்கும் தற்போது பரவியுள்ள பல்வேறு வகை கொரோனா வைரஸ்களில் அதிக பாதிப்பு ஏற்படுத்த கூடியதாக இந்தியாவில் உருவான B1.617.2 வைரஸ் கருதப்படுகிறது. இந்த வகை வைரஸ் தாக்குதலில் இருந்து அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி எந்தளவுக்கு மனிதர்களுக்கு பாதுகாப்பு தருகிறது என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தொகுப்பட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் புதிய தொற்றுக்கு எதிராக 80% பாதுகாப்பை அஸ்ட்ராஜெனகா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி இ்ந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

15.கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க ஏதுவாக உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை தேவைக்கு அதிகமாகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்து வருகிறது.

தமிழகம் கொரோனா 2வது அலையில் இருந்தே மீளாத நிலையில், 3ஆவது அலை விரைவில் வரவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதனை சமாளிக்க ஏதுவாக ஆக்சிஜன் மருத்துவ உபகரணங்களை இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இறக்குமதி செய்து வருகிறது. இதில், டிட்கோ நிறுவனம் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டல் கருவி, சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள், ஃப்ளோ மீட்டர்கள், கிரையோஜெனிக் ஐசோ டேங்கர்கள் 40 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2ஆயிரத்து 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிட்கோ மூலமாகவும், ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிஐஐ மூலமாகவும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து 800 ஆக்சிஜன் சிலிண்டர்களும், தென்கொரியாவில் இருந்து 975 ஆக்சிஜன் சிலிண்டர்களும், 380 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மலேசியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சென்னை மாநகராட்சி மூலமாக 22 கோடி ரூபாய்க்கு 5 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதேபோல், 185 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் லெபனான் நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவைதவிர சிங்கப்பூரில் இருந்து 2 ஆயிரத்து 630 ஆக்சிஜன் ரெகுலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டு அதில், ஆயிரத்து 780 ரெகுலேட்டர்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவைதவிர, சீனா மற்றும் தைவானில் இருந்து 23 கோடி மதிப்புள்ள 17 கிரையோஜெனிக் ஐசோ டேங்கர்கள் வாங்க கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி, ஓசூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை போர்கால அடிப்படையில் கட்டமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வரவிருக்கிற கொரோனா 3வது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான கட்டமைப்பு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close