
சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஆவடி,திருமுல்லைவாயில், போரூர் ,வளசரவாக்கம் ,மதுரவாயல் ,அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது. அதேபோல், திருவான்மியூர், ஓஎம்ஆர், ஈசிஆர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2வது நாளாக மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
காஞ்சிபுரம்:
கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஓரிக்கை, செவிலிமேடு, பாலுச்செட்டிச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் மேட்டுத்தெரு, காமராஜர் சாலை, பழைய ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சூறாவளி காற்றால் காஞ்சிபுரம் நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் இருந்த நெல் மூட்டைகள் மழை நீரால் நனைந்து சேதமடைந்தன. இன்னும் கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி:
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் பலத்த காற்றுடன் இன்று பெருமாள் பேட்டை, நியூ டவுன், ஆசிரியர் நகர்
கோனாமேடு, உதயேந்திரம், ஜாப்ரபாத், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறைக்காற்றோடு கூடிய மழை பெய்தது.அந்த சூறைக்காற்றில் சிக்கி ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டி கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஓடிந்து ந்து நாசமாயின. கடந்த ஆண்டு நல்ல மேய்ச்சல் இருந்தும் கொரோனா ஊரடங்கால் விளைந்த தார்களை போதிய விலைக்கு விற்க முடியவில்லை என்றும், இந்த ஆண்டாவது முழு பயனையும் பெற்று விடலாம் என நம்பிக்கையுடன் இருந்ததாகவும், இந்நிலையில் நேற்று வீசிய சூறைக்காற்றில் அனைத்து வாழைகளும் சேதமடைந்து விட்டதாக வேதனையோடு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.