
இந்தியாவின் பறக்கும் மனிதர் என அன்போடு அழைக்கப்படும் தடகள வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 91. அவரது வீட்டு பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் மில்கா சிங்கிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறி மட்டும் இருப்பதால் அவர் தன்னை சண்டிகரில் உள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
1960 வாக்கில் ரோமில் நடந்த ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடகள பிரிவில் 0.1 வினாடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மில்கா சிங். சுதந்திர இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகளில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமைக்கு மில்கா சொந்தக்காரர். இவர் பிறந்தது ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த கோவிந்த்புராவில். இப்போது அது பாகிஸ்தானில் உள்ளது.
ராணுவ வீரரான அவர் அங்கிருந்து தான் தனது தடகள ஓட்டத்தை தொடங்கினார். அவரது வாழ்க்கை இந்தி மொழியில் ‘பாக் மில்கா பாக்’ என்ற பெயரில் திறப்படமாக உருவாகி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.