[X] Close

விரைவுச் செய்திகள்: முதல்வரின் 'முகக்கவசம்' விழிப்புணர்வு | விஜயகாந்த் 'நலம்'

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamil-Nadu-and-India-News-updates-May-19-at-11-AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் மீண்டும் இன்று தொடங்குகிறது. மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அண்மையில் தொடங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி, ஆலையின் குளிர்விக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்று முதல், டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

முதல்வர் காட்டிய 'டெமோ': நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியைப் பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றின் அவசியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்கிறார். இரட்டை முகக்கவசம் அணிவதையும் அவர் வலியுறுத்தினார்.


Advertisement
 • தினசரி பாதிப்பு: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். புதிதாக 2.67 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
 • அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது.
 • முதல்வர் ஆய்வு: தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
 • அமைச்சர் உத்தரவு: கோயில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
 • மருத்துவமனையில் விஜயகாந்த்: சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள தேமுதிக, விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அக்கட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 • உச்சம் தொட்டு பின்னர் குறையும்: தமிழகத்தில் வரும் 29 முதல் 31ஆம் தேதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது சூத்ரா என்ற கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் தெரிவித்தார். தமிழகத்தில் மே 29இல் இருந்து 31க்குள் கொரோனா உச்சம் தொட்டு பின்னர் குறையும் என்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாளுக்குள் கொரோனா உச்சம் தொடும் என்றும் வித்யாசாகர் தெரிவித்தார். மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரேதசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உச்சத்தை கடந்து தற்போது இறங்குமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரி போல பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இனிமேல்தான் உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 • வெ.இறையன்பு எச்சரிக்கை: கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அரசின் இலவச சேவைகளுக்கு கையூட்டு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எச்சரித்துள்ளார்.
 • 2,000 ரூபாய் அபராதம்: கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியே வருவது கண்டறியப்பட்டால் 2,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
 • சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ அதர் பூனாவாலா விளக்கம்: நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், உள்நாட்டு தேவையை கவனத்தில் கொள்ளாமல், தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக சீரம் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை மறுத்துள்ள சீரம் நிறுவனம், தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பதுடன், அதன் விநியோகத்தில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில்லை என்றும் சீரம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது 2 அல்லது 3 மாதங்களில் சாத்தியமில்லை என சீரம் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் வரை ஆகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 • நாளை முதல் 18- 44 வயதினருக்கு தடுப்பூசி: தமிழகத்தில் நாளை முதல் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது போகபோகத்தான் தெரியும் என்றார். திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டதால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாகவும், மருந்து விற்பனை செய்த சுரேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 • டவ் தே புயல்: குஜராத்தை புரட்டி போட்ட டவ் தே புயலுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
  40 ஆயிரம் மரங்கள், 70 ஆயிரம் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் சுமார் 6 ஆயிரம் கிராமங்கள் இருளில் மூழ்கியிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close