Published : 17,May 2021 06:12 PM

மேற்கு வங்கத்தில் 2 அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் தொண்டர்கள்

Narada-Scam-case-TMC-Ministers-arrested-in-West-Bengal-by-CBI-and-the-party-Followers-gathered-in-front-of-CBI-office

நாரதா லஞ்ச ஊழல் முறைகேட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு வங்க மாநில அமைச்சர்களும், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுமான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. அதையடுத்து மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நேரடியாக சிபிஐ அலுவலகம் சென்று தனது கண்டனத்தை தெரிவித்தார். 

தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிபிஐ அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தின் மீது கற்களை வீசியதாகவும் தெரிகிறது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பி இருந்தனர். அதையடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வர அலுவலகத்தின் முகப்பு பகுதியில் மத்திய ரிசர்வ் படை குவிக்கப்பட்டது, லேசாக தடியடி நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.  

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் செயல்களை விமர்சித்திருந்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் சொல்லி இருந்தார். 

நாரதா முறைகேடு வழக்கு?

தற்போது கைதான நால்வரும் கடந்த 2011இல் அமைந்த மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தவர்கள் . அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் தொடங்க விரும்பிய தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் 2014இல் நடந்துள்ளது. அதனை நாரதா தொலைக்காட்சி படம் பிடித்துள்ளது. பின்னர் 2016 தேர்தலுக்கு முன்னர் அந்த வீடியோ பொதுவெளியில் வெளியாகி இருந்தது. அதனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நான்கு பேருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தார், அதைத் தொடர்ந்து சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை இறுதி செய்து அவர்களை கைது செய்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்