[X] Close

கொரோனா விரைவு செய்திகள்: தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்த புள்ளி முதல் ரெம்டெசிவிர் விற்பனை வரை

இந்தியா,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Corona-Quick-News--Vaccine-Purchase-Contract-Point-to-Remdecivir-Sale

1. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2. கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை கோரி உள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள் 45 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முனைப்புடன் மேற்கொள்ளும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இன்று கோரியுள்ளது. அதில், 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகளை வழங்க முடியும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

3.தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் விநியோகம் சீர்செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்சிஜன் கொண்டு செல்வதற்காக சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் வரவிருப்பதாகக் கூறினார்.

4. கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி தொடங்கிவைத்தார். பின்னர் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது. அந்ததந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். சென்னை சேப்பாக்கத்தில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பெரும்பாலான இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாங்கினாலும், ஒருசில இடங்களில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு கூட்டமாக சென்று வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

தஞ்சாவூர் காவேரி சிறப்பு அங்காடியில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து மக்கள் 2 ஆயிரம் ரூபாய் வாங்கிச்சென்றனர். சங்கரன்கோவிலில் மாற்றுத்திறனாளி வரிசையில் நிற்பதை அறிந்த கடை ஊழியர், உடனடியாக அவரிடத்தில் சென்று நிவாரண தொகையை அளித்து அனுப்பிவைத்தார். முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையும் ரேசன் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், தமிழகத்தில் நாளொன்றுக்கு 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனால், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பு மருந்துகளை கூடுதலாக வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

6. சென்னையில் தனியார் மருத்துவமனைகள் ஒட்டல்களில் வைத்து கொரோனா சிகிச்சை அளிக்கும் நடைமுறையை தொடங்கியுள்ளனர்.

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 500 படுக்கைகள் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுக்கைகள் தட்டுப்பாடு காரணமாக கூடுதல் மையங்களை ஏற்கனவே சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளும் கூடுதல் படுக்கைகளை ஒட்டல்களில் ஏற்படுத்தி வருகின்றனர். ஆர்.கே.சாலை, எழும்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஒட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தனியார் மருத்துவமனையினர் படுக்கைகள் ஏற்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையில் சோதிக்கப்பட்டு அவசர சிகிச்சை தேவைப்படாதவர்களே ஒட்டல்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் படுக்கைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர். அதே நேரம் கொரோனா பொது முடக்கத்தால் வாடிக்கையாளர்கள் வராத நிலையில் வர்த்தகத்தை தொடர ஓட்டல்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

image

7.புதிய தலைமுறையின் கோபிசெட்டிப்பாளையம் செய்தியாளர் சந்திரசேகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கொரோனா காலத்திலும் துடிப்புடன் பணியாற்றி செய்திகளை வழங்கி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்டார். கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று பிற்பகலில் அவரது உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிரமாக முயற்சித்தும் சிகிச்சை பலனளிக்காமல், சந்திரசேகரன் உயிரிழந்தார். 47 வயதாகும் சந்திரசேகரன் கடந்த 10 ஆண்டுகளாக புதிய தலைமுறையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். செய்திகளை உடனுக்குடன் கொடுப்பதில் ஆர்வத்துடனும் துடிப்புடனும் இருந்த சந்திரசேகரனின் மறைவு சக ஊடகத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சந்திரசேகரனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு புதியதலைமுறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

8. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மத்திய உள்துறை செயலாளர், மத்திய அமைச்சரவை செயலாளர், சாலை போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் அதிகாரிகளிடம் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுவது தொடர்பாக பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் அடுத்த சில நாட்களில் பேச உள்ளார்.

9.நாட்டில் இதுவரை 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 529 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்களைப் பொருத்தவரை இதுவரை முதல் டோஸ் 96 லட்சத்து 27 ஆயிரத்து 650 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 66 லட்சத்து 22 ஆயிரத்து 40 பேருக்கு போடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களைப் பொறுத்தவரை முதல் டோஸ் ஒரு கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 871 பேருக்கும், இரண்டாவது டோஸ் 81 லட்சத்து 49 ஆயிரத்து 613 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதானவர்களைப் பொருத்தவரை 42 லட்சத்து 58 ஆயிரத்து 756 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயது முதல் 60 வயது பிரிவில் 5 கோடியே 68 லட்சத்து 5ஆயிரத்து 772 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில் இரண்டாவது டோஸ் மிக மிக குறைவாக 87 லட்சத்து 56 ஆயிரத்து முன்னூற்று 13 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அறுபது வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இதுவரை முதல் டோஸ் 5 கோடியே 43 லட்சத்து 17 ஆயிரத்து 646 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ள நிலையில், இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 75 லட்சத்து 53 ஆயிரத்து தொள்ளாயிரத்து 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

10.கோவாக்சின் தடுப்பூசி உற்பத்திக்கு பிற மருந்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதில் மத்திய அரசு நீண்ட தாமதம் செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் சில பதிவுகளை இட்டுள்ளார். கோவாக்சின் தடுப்பூசியை பிற மருந்து நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த 4 வாரங்களுக்கு முன்பே மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த 4 வார தாமதத்தால் எவ்வளவு உயிர்கள் பறிபோயிருக்கும் என்றும் அதற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்றும் ப.சிதம்பரம் வினவியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் இன்னும் தாமதம் நீடிப்பது ஏன் எனவும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் 2 மாதங்களில் நீங்கி தாராளமாக கிடைக்கத் தொடங்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்ய விரும்பும் மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

11. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் , 4 கவுன்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று தொடங்கியது. நீண்ட நேரம் காத்திருந்தும் மருந்து கிடைக்கவில்லை எனக் கூறி சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2 கவுன்ட்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நேரு விளையாட்டு அரங்கில் 4 கவுன்ட்டர்களில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மருந்து விநியோகம் இன்று தொடங்கியது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்ததை வாங்க சென்னை மட்டுமன்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். ஒருவருக்கொருவர் முந்திச் செல்ல முயன்றதால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் மருந்து கிடைக்கவில்லை எனக்கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க வேண்டும் எனவும், டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

12. பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு வந்த தொகையினை ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும் அடிப்படையான மருத்துவ கருவிகளை வாங்கவும் பயன்படுத்த உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விப்லவ் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நாடு முழுவதும் 738 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் ஜெனரேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவக் கருவிகளை நிறுவ வேண்டும் என்றும் இதன் மூலம் மக்கள் இலவசமாக சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் திட்ட நிதியை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தொடர்பான செலவுகளுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு தனியாக மனுதாரர் கடிதம் எழுதியுள்ளார்.

13. தமிழகத்தில் ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றிற்கு அரசு மருத்துவமனைகளில் 178 பேரும், தனியார் மருத்துவமனையில் 125 பேரும் என 303 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,359 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 6,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 82 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 2013 பேரும் கோவையில் 3124 பேரும்,கடலூரில் 719 பேரும், தர்மபுரியில் 289 பேரும், அரியலூரில் 254 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14. தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண பணிகளுக்கு எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வீரியமடைந்துள்ள நிலையில், தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நன்கொடை அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்பேரில் தொழில்துறையினர் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண பணிகளுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணைவேந்தர் டாக்டர் சத்தியநாராயணன், எஸ்.ஆர்.எம். ராமாபுரம் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவக்குமார் , எஸ்.ஆர்.எம். ராமாபுரம் கல்வி நிறுவனத்தின் இணைத் தலைவர் நிரஞ்சன் ஆகியோர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான நிதியை அளித்தனர்.

15. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வாசன், கட்டுப்பாடுகளை பின்பற்றினால்தான் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கூறினார். மத்திய அரசு தடுப்பூசி, மருந்துகள் மற்றும் ஆக்சிஜனை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் எனவும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close