[X] Close

'தொற்று அச்சம்', 'தகனத்துக்கு காசு வேணுமே!' - கங்கை நதியின் கொரோனா சடலங்கள் பின்புலம்

இந்தியா,சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

Tragic-stories-of-Covid-victims-in-Ganga-river

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து மிதந்து வந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் சோகக் கதைகள், கொரோனா பேரிடர் காலத்தில் நெஞ்சை இன்னும் உலுக்குவதாக உள்ளன.

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் ஓடும் கங்கை நதியில் இந்த வாரத் தொடக்கத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்காக காலையில் அழைத்துச் சென்ற அந்தக் கிராம மக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்திருக்கிறது. பல நாட்களாக நீரில் கிடந்ததால், அழுகிய நிலையில் இருந்த அந்த சடலங்களில் சிலவற்றை நாய்கள் குதறி இருந்தன. இன்னும் சற்று தூரம் தள்ளி பார்த்தபொழுது மேலும் ஏராளமான சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சடலங்கள் கிடைத்த சவுசா கிராம மக்கள், இதற்கு காரணமாக கைகாட்டியது உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள கஹ்மார் கிராமத்தைதான். இரு மாநில எல்லை பகுதி என்பதால் சடலங்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவை இல்லை என உத்தரப் பிரதேச மாநிலமும், பீகார் மாநிலமும் கூறி வருகின்றன. சடலங்கள் கங்கை ஆற்றில் மிதக்கவிடுவது இரு மாநில மக்களுக்கும் பழக்கமான ஒன்று தான். என்றாலும் இந்த முறை குவியல் குவியலாக சடலங்கள் கிடைத்துள்ளதுதான் அதிர்ச்சிக்கு காரணம்.


Advertisement

image

இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அமித் ஷா என்பவரிடம் 'தி பிரின்ட்' செய்தித் தளம் பேசியுள்ளது. அதில், "இந்த சடலங்கள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி உ.பி. மற்றும் பீகார் இடையே ஒரு பழி விளையாட்டு நடக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய கிராமம் என்று கூறப்படும் கஹ்மார் கிராமத்தில் கொரோனா காரணமாக சில நாட்களுக்கு முன் 15-19 உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதேபோல் கஹ்மார் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ஆனால், தகன மேடை ஒரே நேரத்தில் மூன்று சடலங்களை எரிக்கும் அளவிலேயே உள்ளன. எனவேதான் கஹ்மார் மற்றும் பிற கிராமங்களிலிருந்து மீதமுள்ள உடல்கள் அனைத்தும் கங்கையில் விடப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.

இதேபோல், கஹ்மர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான உர்மிளா தேவி தனது 42 வயது கணவர் ஷம்பு நாத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், "ஒரு சிறிய காய்ச்சல் என் கணவரின் உயிரை எப்படி எடுக்கும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அவர் சில பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருந்தார். ஆனால் ஏப்ரல் 22 இரவு, மூச்சுத் திணறல் ஏற்பட, வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். அடுத்த நாள், மற்றொரு சகோதரர் 35 வயதான சுவாமி நாத், காலையில் காய்ச்சல் ஏற்பட்டு, வீட்டில் இறந்தார்" என்கிறார்.


Advertisement

இவர்கள் இறந்தபின்பு ஷம்புவின் உடல் மட்டும் அவர்களது உறவினர்களால் தகனம் செய்யப்பட, சுவாமி நாத்தின் உடல் கங்கை ஆற்றில் விடப்பட்டுள்ளது. இதேபோல் 65 வயதான பிம்லா தேவி என்பவரின் உடலையும் அவரின் குடும்பத்தினர் கங்கை ஆற்றில் விட்டுள்ளனர். இப்படி பலர் தங்கள் உறவினர்களின் சடலங்களை ஆற்றில் விட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் இதற்காக சொல்லும் காரணங்கள் பல உண்டு. ஒரு தகனத்துக்கான செலவு. தகனம் செய்யப்படும் மரங்களின் விலை மிக அதிகமாக இருப்பது. கொரோனா காலத்தில் கடுமையான வேலை இழப்பு, பண நெருக்கடியில் சிக்கித் தவித்திருக்கும் அவர்கள் உடல்களை தகனம் செய்ய நிறைய செலவு செய்ய வேண்டி இருப்பதால் இந்த முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.

image

இதற்கு இன்னொரு காரணம், கொரோனா அச்சம். பணம் செலவு செய்து தகனம் செய்ய தயாராக இருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக இறந்தவர்களின் உடல்களை தூக்கக் கூட உறவினர்கள் யாரும் வருவதில்லையாம். இறுதிச் சடங்குகளுக்குச் சென்றால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களிடையே தொற்றுநோயை அதிகரித்திருக்கக்கூடும் என்பதால், கங்கை கரைக்குச் சென்று அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு சடலங்களை ஆற்றில் விடுகின்றனர். கடந்த நான்கு வாரங்களில் இப்பகுதியில் சுமார் 70 சதவீத உடல்கள் ஆற்றில் தள்ளப்பட்டுள்ளதாக ராகேஷ் என்பவர் கூறியிருக்கிறார். பெரும்பாலும் பொருளாதார கஷ்டங்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் தினசரி கூலிகளாக வேலை செய்கின்றன. அவர்களிடம் எந்த சேமிப்பும் இல்லை. எனவே, இது போன்ற ஒரு சூழ்நிலையில், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கங்கையில் மூழ்கடித்து வருகின்றனர். இதனால் இருமாநிலத்தை ஒட்டியிருக்கும் நதிக்கரையில் சடலங்கள் குவிந்து வருகின்றனர். தற்போது அதனை அதிகாரிகள் அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

தகவல் உறுதுணை: The Print


Advertisement

Advertisement
[X] Close