[X] Close

கொரோனா விரைவுச் செய்திகள் மே 14: அதிகரிக்கும் கொரோனாவும் அமலாகும் புதிய கட்டுப்பாடுகளும்!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

speed-covid-news-on-may-14

> தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் உள்பட 31 ஆயிரத்து 892 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 183 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13 லட்சத்து 18 ஆயிரத்து 982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 56 ஆக அதிகரித்துள்ளது. இணைநோய் இல்லாத 68 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

> கேரளாவில் கொரோனா சிகிச்சைக்கான பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் விலை நிர்ணய சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின் அறிவிப்பை அடுத்து கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை தருபவர்கள் அணியும் பிபிஇ ஆடை 273 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. என்95 முகக் கவசங்கள் விலை 22 ரூபாயாகவும் 3 அடுக்கு சர்ஜிகல் முகக் கவசங்கள் 3 ரூபாய் 90 காசாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் முகத் தடுப்புகள் 21 ரூபாயாகவும் கையுறை 5 ரூபாய் 75 காசாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கொரோனா சிகிச்சை செலவுகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

> தமிழ்நாட்டில் கடந்த திங்கள்கிழமை முதல் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் சிலர் வெளியே சுற்றித்திரிந்ததையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. முன்னதாக 12 மணி வேரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இக்கடைகளில் ஒரே சமயத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. பொதுமக்கள் வீட்டின் அருகேயிருக்கும் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவேண்டும், அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைப்பாதை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தேநீர் கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கடைகள் இயங்க அனுமதி மறறுக்கப்பட்டுள்ளது. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ- பதிவுமுறை கட்டாயமக்கப்பட்டுள்ளது. திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கும், மாவட்டங்களுக்குள் இடையே பயணம் மேற்கொள்ள இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு கூறியுள்ளது. மக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்து அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

image

> தமிழகத்தின் பொதுமுடக்க விதிகளை மீறும் செயல்கள் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நடவடிக்கைகளை தொடக்கியுள்ளனர்.


Advertisement

> சென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை சற்றே மாறியிருக்கிறது. சிகிச்சை மையங்கள் செயல்படத் தொடங்கி இருப்பதால் படுக்கைகள் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்துள்ளது.

> தமிழகத்தில் கொரோனா இரண்டாவது ஆலை வீரியமடைந்துள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி பல இடங்களில் தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, சாதாரண ஆம்புலன்ஸ்கள் 10 கிலோ மீட்டர் வரை ரூ. ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டருக்கு மேல், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 25 ரூபாய் வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கிலோ மீட்டர் வரை இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வென்டிலேட்டர் உள்ளிட்ட அவசர சிகிச்சை வசதிகொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் 10 கிலோ மீட்டர் வரை 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், 10 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 100 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை தொடர்ந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. ஐதராபாத்தில் முதல் டோஸ் தடுப்பூசி சோதனை ரீதியில் செலுத்தப்பட்டதாக அதை இந்தியாவில் விநியோகிக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தெரிவித்துள்ளது. ஸ்புட்னிக் வி-யை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அவற்றை இறக்குமதி செய்து இந்தியாவில் விநியோகிக்கும் பணியை டாக்டர் ரெட்டீஸ் தொடங்கியுள்ளது.

> சென்னையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து சனிக்கிழமை முதல் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிகிழமை முதல் ரெம்டேசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நடைபெற்றது. இதனால் மருந்து வாங்க வந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கழமை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு மருந்து விற்பனை தொடங்கும் என்றும் தினசரி 300 நபர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம் என்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

> மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதாகவும், முதல் அலையின் போது இதனைச் செய்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார்

> சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை கண்காணித்து ஆலோசனை வழங்க 135-க்கும் அதிகமான இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்

> ஊரடங்கு காலத்தில் பழைய திருமண அழைப்பிதழை காட்டி ஏமாற்றி ஊர் சுற்ற முயன்ற சிலருக்கு கன்னியாகுமரி காவல்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

> கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய- மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதன்படி, உடல்கள் வரிசையாக காத்திருப்பதை தடுக்க தற்காலிக தகன மேடைகள் அமைக்க வேண்டும் - இடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - உடல்களை தொடாமல் மதச்சடங்குகளை நடத்த அனுமதிக்கலாம், மத நூல்களிலிருந்து வசனம் வாசிக்கவும், புனித நீர் தெளிக்கவும் அனுமதிக்கலாம் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்ய முடியாதபோது, அவர்களது மத, கலாசார அம்சங்களை கருத்தில் கொண்டு, மாநில உள்ளாட்சி நிர்வாகங்கள் அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

> கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எனக் கூறினார். அதே போல் உறவுகளை இழந்து தவிக்கும் மூத்த குடிமக்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

> கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி பற்றாக்குறையால், இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 300க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக, கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களை அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் வழக்கம்போல் போடப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close