[X] Close

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள்... கொரோனாவுக்கு பலியானவர்களா? - மக்கள் பீதி

இந்தியா,சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

Hundreds-of-suspected-victims-retrieved-from-Ganga

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் என்று கருதப்படுவதால் மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.

இந்திய இதிகாசங்களில் மிகவும் புனிதமான நதியாக வர்ணிக்கப்படுவது கங்கை நதி. தற்போதுள்ள மத்திய அரசும் கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக தனித் துறையை உருவாக்கி கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, மக்கள் அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்யும் வகையில் நூற்றுக்கணக்கான சடலங்கள், கங்கை நதியில் மிதக்க விடப்பட்டுள்ளன. அதுவும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள்தான் இப்படி நதியில் எறியப்பட்டிருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் அந்த அச்சத்தை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

image


Advertisement

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் ஓடும் கங்கை நதியில் கால்நடைகளை மேய்ப்பதற்காக காலையில் அழைத்துச்சென்ற அந்தக் கிராம மக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்திருக்கிறது. பல நாட்களாக நீரில் கூறியிருந்ததால் அழுகிய நிலையில் இருந்த சில சடலங்களை நாய்கள் குதறியபடி இருந்துள்ளது. இன்னும் சற்று தூரம் தள்ளி பார்த்தபொழுது மேலும் ஏராளமான சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில், பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த சடலங்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவை இல்லை என உத்தரப் பிரதேச மாநிலமும், பீகார் மாநிலமும் கூறுவதுதான்.

சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட அந்த கிராமம், பீகாரில் இருந்தாலும் உத்தரப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில்தான் உள்ளது.


Advertisement

இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ள பீகார் அரசு அதிகாரிகள், 'பீகார் மாநிலத்தை பொறுத்தவரை இறந்தவர்களின் உடல்களை ஆற்றில் தள்ளிவிடும் வழக்கம் இல்லை. எனவே, இவை நிச்சயம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவைதான்' என அடித்துக் கூறுகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாதவர்கள் இறந்துபோகும் பட்சத்தில் அவர்களது உடல்களை உறவினர்கள் கங்கையில் வீசி விடுகின்றனர் எனவும் கூறுகின்றனர். எனவே, இந்த சடலங்கள் அனைத்தும் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ள நிலையில். எங்கிருந்து இந்த சடலங்கள் வீசப்பட்டன; இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பால் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்குமா உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் கேள்விகளாக முன் நிற்கின்றன.

இதேபோல ஹிமிர்புர் என்ற பகுதியில் ஓடக்கூடிய யமுனை நதியில் பாதி எரிந்த நிலையில் சில உடல்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக கூறும் உள்ளூர் மக்கள், இதனால் தங்கள் கிராம மக்கள் பெரும் பீதியடைந்து உள்ளதாக கூறுகின்றனர்.

பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள், சுகாதார ஊழியர்களால் ஆறுகளில் கொட்டும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், "நிச்சயம் இந்த சடலங்கள், எங்கள் மாநிலங்களைச் சேர்ந்தவை இல்லை" என உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.

image

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்து காட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "ஆறுகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் அடித்து வரப்படுகின்றன. சிகிச்சைக்காக மக்கள் மைல் கணக்கில் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியே, உங்களது கண்ணாடியை கழட்டுங்கள்; உங்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத் திட்டத்தை தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை" என கடுமையாக சாடியுள்ளார்.

சடலங்கள் இவ்வாறு ஆற்றில் விடப்படும் நிகழ்வுகளை சர்வதேச ஊடகங்கள் பலவும் கடுமையாக விமர்சித்துள்ளன. கொரோனா பரவல் ஏற்கெனவே இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆறுகளில் இப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் மிதந்து வருவதும், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவை அல்ல என்று, அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் அரசு அதிகாரிகள் திணறி வருவதும் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மேலும் பாதிப்பை அதிகரிக்கலாம் என அச்சம் மிகுந்த சூழலிலும் உள்ளூர் கிராம மக்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

- நிரஞ்சன் குமார்


Advertisement

Advertisement
[X] Close