Published : 27,Jul 2017 05:30 AM
இந்து பெண்ணுடன் திருமணமா? எம்.எல்.ஏ மகனுக்கு கொலை மிரட்டல்!

’இந்து பெண்ணை திருமணம் செய்துள்ளதால் உங்களை தீர்த்துக்கட்ட இருக்கிறோம்’ என்று போனில் மிரட்டல் வந்ததாக, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ அபு ஆஸ்மியின் மகன் பர்ஹான் ஆஸ்மி புகார் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருப்பவர் அபு ஆஸ்மி. எம்.எல்.ஏவான இவர், ஏதாவது கருத்துத்தெரிவித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். இவரது மகன் பர்ஹான் ஆஸ்மி. இவர் சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். நடிகை ஆயிஷா தாகியாவை திருமணம் செய்துள்ள இவர், மும்பை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ‘எனக்கு ஒரு போன் வந்தது. இந்து சேனா என்ற அமைப்பில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், நான் இந்து பெண்ணைத் திருமணம் செய்திருப்பதால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். ஆபாசமாக பேசிய அவர், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் குண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும் சொன்னார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.