[X] Close

”100 ஓட்டு வாங்கிடு என்று சவால் விட்டவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்” -பத்ம பிரியா பேட்டி!

சிறப்புக் களம்,தமிழ்நாடு

chennai-tamizhachi-padma-priya-special-interview

தோல்விகள் பலவிதம்... ஆனால், திமுகவிடம் தோல்வியடைந்த அதிமுகவுக்கே மதுரவாயல் தொகுதியில் டஃப் ஃபைட் கொடுத்து 33, 401 வாக்குகளைப்பெற்று மூன்றாம் இடத்தைப்பிடித்து வெற்றிகரமான தோல்வியை தழுவியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான சென்னை தமிழச்சி என்கிற பத்ம பிரியா. தொகுதியில் மட்டுமல்ல…. மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் பட்டியலிலும் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். ’முதல் தேர்தலிலேயே எப்படி முடிந்தது உங்களால்’ என்று பத்ம பிரியாவிடம் சில  கேள்விகளை முன்வைத்தோம்,


Advertisement

இவ்வளவு வாக்குகளை எதிர்பார்த்தீர்களா? எப்படி உணர்கிறீர்கள்?

சமூக வலைதளங்களில் பலர் ’100 ஓட்டு வாங்கிடுப் பார்ப்போம்… 5 ஆயிரம் ஓட்டு வாங்கிக்காட்டுப் பார்ப்போம்’ என்றெல்லாம் என் பதிவுகளில் வந்து கருத்திட்டார்கள். அப்படி, விமர்சித்தவர்களெல்லாம் வாயடைத்துப் போயிருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதேசமயம், 50 ஆயிரம் வாக்குகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், 33 ஆயிரம் வாக்குகள் என்பது கொஞ்சம் குறைவுதான். ’மக்கள் நீதி மய்யம்’ ஒரு புதியக்கட்சி. நான் புதிய வேட்பாளர். எனக்கு  3 வது இடம் என்பது மக்கள் புதுமையை விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது. இதற்குமுன் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதை விட, புதிதாக வருபவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தும்,  கமல்ஹாசன் சாருக்காகவும்தான் வாக்களித்தார்கள். மற்றபடி, தோல்வி குறித்து எந்த வருத்தமும் கிடையாது. அதுக்குறித்து யோசிக்கவுமில்லை. எங்கள் கட்சியையும் சின்னத்தையும் மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும் என்றே கடுமையாக உழைத்தேன்.


Advertisement

மதுரவாயல் பெரியத் தொகுதி. 6 ஆயிரம் தெருக்கள் செல்லவேண்டும். கொளுத்தும் வெயிலிலும் என்னால் முடிந்தவரை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினேன். மற்றக் கட்சி வேட்பாளர்கள் பணம் கொடுத்து சத்தியம் எல்லாம் வாங்கினார்கள். ஆனால், நாங்கள் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் வாங்கிய ஒவ்வொரு ஓட்டும் சிறப்பு மிகுந்தது. பெருமையாக உள்ளது. எனக்கு வாக்களித்த 33 ஆயிரத்திற்கும் மேலான மக்களுக்காக இனிவரும் காலங்களில் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் தொகுதி பிரச்சனைக்காக பேசுவதோடு தொடர்ச்சியாக கேள்வியும் கேட்பேன்.

image

மதுரவாயல் தொகுதியில் எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரித்ததாக நினைக்கிறீர்கள்?


Advertisement

அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் வாக்குகளைத்தான் நானும் நாம் தமிழர் வேட்பாளரும் பிரித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதிக்கென்று ஏதாவது நல்ல விஷயம் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார். அவரை நாங்கள் தோற்கடிக்கவில்லை. அவரே அவரை தோற்கடித்துக்கொண்டார்.

’சமூக வலைதள ஆதரவு வாக்குகளாக மாறாது’ என்ற கருத்து இருக்கிறதே?  கள அரசியலுக்கும், சமூக வலைதள ஆதரவுக்கும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்களா?

சமூக வலைதளங்களில் இருக்கும் ஆதரவை வைத்து தேர்தலில் வாக்கு வாங்க முடியும் என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், அதோட தாக்கம் சுத்தமா இருக்காதான்னு கேட்டா கண்டிப்பா கொஞ்சமாவது இருக்குன்னுதான் சொல்வேன். என்னோட முகம் அதிகம் தெரிஞ்சதாலயும் பலர் நம்பி வாக்களித்துள்ளார்கள். எனக்கு விழுந்த ஓட்டுகளில் குறிப்பிட சதவீதம் சமூக வலைதளவாசிகளின் ஓட்டுதான்.

image

உங்கள் கட்சியின் தலைவரான கமல்ஹாசனின் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழகத்துக்கு எவ்வளவோ நல்லது செய்த காமராஜர் அய்யாவையே தோறக்டித்ததுதான் தமிழ்நாடு. பல தலைவர்கள் அரசியலுக்கு வந்தவுடனேயே வெற்றியை பெறவில்லை. வெற்றி வந்தால் மட்டும்தான் அரசியலில் இருப்பேன் என்பது நல்ல மனநிலை அல்ல. கமல் சாரும் அப்படிப்பட்டவர் அல்ல. தோல்வியை ஒரு அனுபவமாகத்தான் பார்க்கிறார். இன்னும்தான் அவர் மக்கள் பிரச்சனைக்காக பேசுவார்.

தொகுதியில் மூன்றாவது இடம்…கட்சி வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வாங்கியவர்களில் மூன்றாவது இடம்.. கமல்ஹாசன் என்ன சொன்னார்?

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் அனைவரிடமும் பேசினார். நான் அதிக வாக்குகள் வாங்கியதற்கு பலரும் பாராட்டினார்கள். அந்தக் கூட்டத்தில், கமல் சார் குறிப்பிட்டு வெற்றி, தோல்வி குறித்து நான் உட்பட யாரிடமும் பேசவில்லை. ’இந்தத் தேர்தல் நல்ல அனுபவம். இதிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம்’ என்றார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலைவிட இம்முறை ’மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறதே?

நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியதோடு, முன்கூட்டியே வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார்கள். அதனை நாங்கள் செய்யாமல் மிஸ் பண்ணிட்டோம். அவர்கள் போலவே, முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்திருந்தால், நான் கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருப்பேன். நாட்கள் கிடைத்திருந்தால் இன்னும்  மக்களை சந்தித்திருப்பேன். மேலும், கூட்டணி கட்சிகள் சேர்ந்ததாலும் எங்கள் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என்று சர்வேக்கள் சொல்கின்றன.  

image

திமுக வெற்றி - அதிமுக தோல்வி எப்படி பார்க்கிறீர்கள்?

திமுக 10 வருடம் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். இத்தனை வருடங்கள் ஆட்சியில் இல்லாத வருத்தம் இப்போது மக்களுக்கான சேவையாக மாறினால் சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக மக்களுக்கான சேவையாக மாறும் என்பதில் நம்பிக்கை இருக்கு. அதிமுகவின் தோல்வி குறித்து பெரிதாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

மற்றக் கட்சிகளில் இருந்து அழைப்புகள் வருகிறதா?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்வதற்கு முன்பு எல்லா கட்சிகளிலிருந்தும் அழைப்புகள் வந்தது. கமல் சார் மீதான நம்பிக்கையால் நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தேன். இப்போதும் அழைப்புகள் நண்பர்கள் மூலம் வந்துகொண்டேதான் இருக்கிறது.

அதேபோல, தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து வீடியோக்கள் வெளியிடுகிறீர்களே? சினிமா வாய்ப்புகள் வருகிறதா?

சினிமா வாய்ப்புகள் இப்போவும் வருது.  அரசியலுக்கு வரும் முன்பும் வந்துகொண்டுதான் இருந்தது. பெண்ணியம் சார்ந்த திரைக்கதையில் நான் முன்பு நடிக்கவேண்டி இருந்தது. ஒருவேளை அரசியலுக்கு வரவில்லை என்றால் அந்த படம் ஆரம்பித்திருக்கும். அரசியல் வாய்ப்பு வந்ததால் அரசியலைத் தேர்வு செய்தேன். இனி முழு நேர அரசியல்தான்.

image

அடுத்து எந்தப் பிரச்சனை குறித்து வீடியோ வெளியிடவிருக்கிறீர்கள்?

இப்போதைக்கு முக்கியமான பிரச்சனை கொரோனாதான். கொரோனா தடுப்பூசி போட்டால் ரத்ததானம் செய்யமுடியாது. அதனால், தடுப்பூசி போடுவதற்கு முன்பு ரத்ததானம் செய்யுங்கள் என்றும், தடுப்பூசிகளின் அவசியம் குறித்தும் பேசி வீடியோ வெளியிடவிருக்கிறேன்.

அரசியலில் பிடித்த பெண் தலைவர்?

எடுத்தவுடனேயே இந்திரா காந்தி,மேரி கியூரி என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. நான் வாழும் காலத்தில் வாழ்ந்த ஜெயலலிதா அம்மாதான் எப்போதும் என் இன்ஸ்பிரேஷன். பெண்ணால் அரசியலில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தது ஜெயலலிதா அம்மா.

தேர்தலில் கற்றுக்கொண்ட மறக்க முடியாத அனுபவம்?

மதுரவாயல் தொகுதியில்  85 வயது பாட்டி ”அந்த காலத்தில் எங்களை விடாடததால நாங்க அரசியலுக்கு வரலை. இவ்ளோ சின்னப்பொண்ணூ ஓட்டு கேட்டு வர்றதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு”ன்னு அந்தப் பாட்டி அப்படி சொல்லியது நெகிழ்ச்சியாவும் கஷ்டமாவும் இருந்துச்சி.  பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான, வாய்ப்புகள் இப்போ அதிகமா இருக்கு. என்னைப்போல பெண்களை அரசியலுக்கு கொண்டுவரவும் தீவிரமாக விழிப்புணர்வு செய்வேன்.

image

மருத்துவ ஆக்சிஜனுக்காக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவுள்ளதே?

இதில், கமல் சாரின் கருத்துதான் எனது கருத்தும். நம்மிடம் ஆக்சிஜன் உற்பத்தி பண்ணவும் சப்ளை செய்யவும் எல்லா வசதியும் இருக்கும்போது ஸ்டெர்லைட் ஓபன் பண்ணாதான் ஆக்சிஜன் உற்பத்தி பண்ணனும்னு நினைப்பது தேவையில்லாத ஒன்று. மனிதனுக்கு மூச்சுக்காற்று கிடைக்காமல் இறப்பது என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை. அதேபோல, ஒரு பிரபலம் இறந்துபோனால் மட்டும் மரம் நடுவது என்று இல்லாமல் மூச்சுக் காற்று எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து மரம் நடவேண்டும்.

எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து பேசிக்கொண்டு போராளி மோடிலேயே இருக்கிறீர்களே? சினிமாவெல்லாம் பார்ப்பீர்களா? பிடித்த நடிகர்?

நான் சினிமாவெல்லாம் அதிகம் பார்க்க மாட்டேன். எப்பவாவதுதான் பார்ப்பேன். எப்பவும் கமல் சார்தான் பிடித்த நடிகர். அவர், எங்கள் கட்சியின் தலைவராக இருப்பதால் சொல்லவில்லை. நான் அரசியலுக்கு வரும் முன்பே கேட்டிருந்தாலும் கமல் சார்தான் என்று சொல்லியிருப்பேன். அவருக்கு அடுத்தப்படியாக அஜித்,விக்ரம் சார் பிடிக்கும். நல்ல மனிதர்கள்.

- வினி சர்பனா

 

 

 

 

 

 

 

 

 


Advertisement

Advertisement
[X] Close