[X] Close

வீரர்களின் உயிர் மேல் அக்கறை வேண்டாமா! - ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு தாமதமான முடிவா?

சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்,ஐபிஎல் திருவிழா

Is-it-too-late-for-the-BCCI-to-announce-the-postponement-of-the-current-IPL-2021-series-and-a-Deep-analysis-about-the-decision

கிரிக்கெட் உலகின் பிரம்மாண்ட டி20 லீக் தொடர்களில் ஒன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்). நடப்பு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


Advertisement

கொரோனா என்ற கருமேகம் ஐபிஎல் தொடரை சூழ்ந்திருந்த வேளையில் ஆரம்பமான தொடர் 

இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 ஆயிரம் பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். 


Advertisement

அந்த நிலையில் தான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா என ஆறு மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு என விளக்கம் கூட கொடுத்திருந்தது. 

அதில் சென்னை மற்றும் மும்பையில் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்தி முடித்தது ஐபிஎல் நிர்வாகம். சிக்கலே வீரர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களுக்கு சென்ற பிறகு தான் எழுந்தது. 

என்ன தான் வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருந்தாலும் எப்படியோ கொரோனா தொற்று அவர்களை அண்டிவிட்டது. கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் அணியின் வீரர்களும், சென்னை அணியின் நிர்வாகிகளும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்தே பிசிசிஐ நடப்பு தொடரை ஒத்திவைக்க முடிவு செய்தது. 


Advertisement

கொரோனாவுக்கு மத்தியில் தொடரை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஐபிஎல் அவசியமா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தொடர் முழுவதும் ரசிகர்கள் அனுமதியின்றி, பயோ பபுளில் நடைபெறுவதால் எந்த சிக்கலும் இருக்காது என பிசிசிஐ சொல்லி இருந்தது. ‘திட்டமிட்டபடி தொடர் நடக்கும்’ என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.  

பிசிசிஐ அப்படி திடமாக சொல்ல காரணம் கடந்த 2020 ஐபிஎல் சீசனை அமீரகத்தில் முழுவதுமாக பயோ பபுளில் நடத்தியது தான். அதில் கிடைத்த வெற்றியை மூலதனமாக வைத்து இந்த தொடரை நடத்த முடிவு செய்தது. அனைத்தும் திட்டமிட்டபடி போய் கொண்டிருக்க “நாடு இப்போது இருக்கின்ற நிலையில் ஐபிஎல் அவசியமா?” என்ற விமரசனங்களும் எழுந்தன. அதற்கு பதில் சொல்லும் வகையில் ஐபிஎல் மூலமாக கொரோனா விழிப்புணர்வை கொடுத்தனர் வீரர்களும், வர்ணனையாளர்களும்.

image

தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், நடுவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என சிலர் தொடக்கத்திலேயே ஓட்டம் பிடித்திருந்தனர். அவர்களது அச்சத்திற்கு காரணம் கொரோனா.  

வணிகம் ஒரு காரணமா?

பிசிசிஐ அமைப்பிற்கு ஐபிஎல் தொடர் கற்பக விருட்சம் என சொல்லலாம். அள்ள அள்ள பணம் தான். பல கோடி ரூபாய் புழங்கும் இடம். அதற்கு காரணம் பார்வையாளர்கள் மத்தியில் இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு. தொலைக்காட்சி வியூவர்ஸ்ஷிப் ஐபிஎல் தொடருக்கு கை கொடுத்துள்ளது. 

வீரர்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமா?

எட்டு அணிகளின் வீரர்கள், நடுவர்கள் குழு, ஒளிபரப்பு குழு, அணியின் நிர்வாக ஊழியர்கள், மைதான ஊழியர்கள் என ஐபிஎல் தொடரோடு இணைப்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் இந்த சிக்கலை கடந்திருக்கலாம் என்ற கருத்துகளும் எழுகின்றன. கொரோனாவை வெல்லும் ஆயுதம் தடுப்பூசி என சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த நிலையில் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தி இருந்தால் கூட இந்த சிக்கலை தடுத்திருக்க கூடும். அது குறித்து பிசிசிஐயும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக சொல்லப்பட்டது. அதை செய்திருந்தால் கூட இதை சமாளித்திருக்கலாம். 

image

இதையெல்லாம் விட இப்போதைக்கு வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பும் பணியை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதை வெற்றிகரமாக செய்து வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க வேண்டி உள்ளது. 

பிசிசிஐயின் இந்த முடிவு வீரர்களின் நலன் கருதி தாமதமாக இருந்தாலும், தக்க சமயத்தில் எடுக்கபட்டுள்ளதாகவே தெரிகிறது. 

- எல்லுச்சாமி கார்த்திக் 


Advertisement

Advertisement
[X] Close