Published : 03,May 2021 07:43 PM

பெருங்கூட்டத்தை வீழ்த்திய தீதி... - மம்தாவின் மகத்தான வெற்றிக்கு 5 காரணங்கள்!

Reasons-why-Mamata-Banerjee-won-in-West-Bengal

மம்தா Vs பாஜக, மம்தா Vs கம்யூனிஸ்ட் + காங்கிரஸ் கூட்டணி... இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது மேற்கு வங்கத் தேர்தல் களம். மம்தா என்ற ஒருவரை வீழ்த்த பெருங்கூட்டமே கங்கணம் கட்டி வேலை பார்த்தது. ஆனால், இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி வெற்றியை வசமாக்கி இருக்கிறார் மம்தா. அதுவும் 2016-ல் பெற்ற வெற்றியை விட இந்த முறை இரண்டு தொகுதிகள் அதிகம் வேறு. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் மம்தா இதை எப்படி சாதித்தார் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மக்கள் நலத் திட்டங்கள்:

முதலில் மம்தா செய்த மக்கள் நலத் திட்டங்களை இங்கே சொல்லி ஆகவேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மம்தா, தனது ஆட்சியில் பெண்கள் நலனுக்கென பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். குறிப்பாக பெண் குழந்தைக்கென செயல்படுத்தப்பட்டு வரும் 'கன்யாஸ்ரீ' மற்றும் 'ரூபஸ்ரீ' திட்டங்கள் மேற்குவங்க பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை 8-ஆம் வகுப்பு வரை வந்துவிட்டால், அந்தப் பெண் குழந்தைக்கு அரசு சார்பில் 25,000 ரூபாய் வழங்கப்படும். இதேபோல் ரூபஸ்ரீ என்கிற திட்டம் ஒரு பெண் குழந்தை 18 வயது அடைந்தவுடன் அரசு சார்பில் அவர்களின் குடும்பத்துக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இவை அங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மம்தா செயல்படுத்திய இலவச அரிசி மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் ஆகிய சமூக நலத் திட்டங்களும் அவருக்கு கை கொடுத்திருக்கிறது.

மேற்கூறியதை காட்டிலும் மம்தாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வெற்றிபெற வைத்தது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழகத்தின் 'அம்மா உணவகம்' போல் 5 ரூபாய்க்கு உணவளிக்கும் மா கிச்சன், 'ஸ்வஸ்திய சதி' சுகாதாரத் திட்டம், இலவச மாத்திரைகள் வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்குதல் போன்ற பல திட்டங்கள் தான்.

image

'பெங்காலி பெருமை'!

பிரசாரங்களின் போது பாஜக, 'குஜராத் அஸ்மிதா' (Gujarati asmita) என்ற பிரசாரத்தை முன்னெடுக்க, மம்தாவோ 'பெங்காலி பெருமை' என்ற பிரசாரத்தை கையிலெடுத்தார். மேற்கு வங்கத்தில் 86% மக்கள் சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 சதவீதம் பேர் மட்டும்தான் வெளியூர்வாசிகள். மதம், சாதியைக்கொண்டு மக்களை ஒருங்கிணைத்து வாக்குகளை அறுவடை செய்ய பாஜக நினைக்க, சாதி / மதம் ரீதியான ஒருங்கிணைப்பத்தை தாண்டி மண்ணின் மைந்தர்கள் என்ற ஒருங்கிணைப்பை மேம்படுத்த 'பெங்காலி பெருமை' என்ற பிரசாரத்தைக் கையிலெடுத்திருந்தார் மம்தா. இதன் வாயிலாக மாநில மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

மண்ணின் மைந்தர்களை முன்னிறுத்தியது போல், அந்நியர்கள் கோஷத்தையும் பகிரங்கப்படுத்தினார் மம்தா. அதாவது, மேற்கு வங்க தேர்தலை எதிர்கொள்ள, மோடியும் அமித் ஷா பல மாநிலங்களை சேர்ந்த பாஜக தலைவர்களை களமிறக்கினர். இவர்களை 'அந்நியர்கள்' என்றும், இவர்களால் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மக்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றும் மம்தா முழங்கியது மக்களிடையே நன்றாக எடுபட்டது.

முதல்வர் வேட்பாளர்!

மேற்கு வங்கத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வெளிப்படுத்தாமலேயே தேர்தலை சந்தித்தன. இதைவிட மம்தாவை எதிர்க்கும் அளவுக்கு அந்தக் கட்சிகளில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதே நிதர்சனம். மம்தாவின் முதல்வர் வேட்பாளர் முகம், மக்களுடனான நெருக்கம் ஆகியவை மக்கள் மனதில் மம்தாவுக்கான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் இடதுசாரிகளுக்கு மம்தாவைப்போல மாநிலம் தழுவிய கவர்ச்சிகரமான தலைவர் இல்லை என்பது முக்கியமான பிரச்னை. அதிலும் முதல்வர் வேட்பாளர் முகம் இல்லாதது பாஜக பெரும் பின்னடைவாக அமைந்தது. பிரசாரத்தில் கூட பாஜக முதல்வர் வேட்பாளர் முகம் இல்லாமல், மோடி மற்றும் அமித் ஷாவை முன்னிறுத்தியே பிரசாரத்தை மேற்கொண்டது.

மாநிலத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் முதல்வர் வேட்பாளரின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு கூறுகிறது. அப்படிப் பார்க்கும்போது அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளர் அல்லது வெளிப்படையான முதல்வர் தேர்வு இல்லாதது மம்தாவுக்கு கூடுதல் நன்மைகளை பெற்றுக்கொடுத்தது.

கை கொடுத்த கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை வாக்குகள்!

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று, 40 சதவீத வாக்குகளைப் பெற்றதற்கு முக்கிய காரணம், கம்யூனிஸ்ட் காங்கிரஸ் வாக்கு வங்கியைச் சேர்ந்த பெரும்பாலான வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்ததே. ஆனால், இந்த முறை இந்தக் கட்சியின் பூர்விக வாக்குகள் பெரும்பாலானவை மம்தாவுக்கே கிடைத்தன என்று கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. நேற்றைய நிலவரப்படி பாஜகவின் வாக்கு சதவீதம் 37 ஆக சரிந்தது.

இதேபோல் இஸ்லாமிய வாக்குகள். மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மூன்றாவது மாநிலம் மேற்கு வங்கம் (2.47 கோடி). முஸ்லிம் வாக்குகள் 125 தொகுதிகளில் (சட்டமன்ற பலத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகம்) வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வகையில் உள்ளது. இந்த 125 தொகுதிகளில் பலவற்றை மம்தாவின் கட்சியே கைப்பற்றி இருக்கிறது. இது கூடுதல் பலத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது.

பாஜகவின் இந்துத்துவா முன்னெடுப்பு!

நிலைமை இப்படி இருக்க, பாஜக தேர்தலில் இந்துத்துவா கோஷத்தை வலுவாக முன்னிறுத்தியது. இது இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜகவுக்கு கைக்கொடுத்ததாலும், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பாஜகவுக்கு இது கைகொடுக்கவில்லை. இதன்காரணமாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விழுந்தது. இது போன்ற காரணங்களால் மம்தா முன்னெப்போதும் இல்லாத அளவு பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறார்.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்