[X] Close

"மிரட்டல்களுக்கு பயந்து லண்டனிலேயே இருக்கிறேன்" - சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் செயலதிகாரி

வணிகம்,கொரோனா வைரஸ்

I-Left-India-because-of-menacing-threats--says-Serum-Institute-CEO

இந்தியாவிலுள்ள பெரும்புள்ளிகள் பலரும் தனக்கு மிரட்டல் விடுத்ததாக, சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி இங்கிலாந்து ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.


Advertisement

தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி, அடார் பூனாவாலா இங்கிலாந்து ஊடகத்துக்கு கொடுத்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் இவரது பேட்டியை ஒப்பிட்டு பார்க்க வேண்டி இருக்கிறது. அவர் அளித்த பேட்டியின் விவரம் இங்கே...

தன் பேட்டியில், "இந்தியாவின் அதிகார வர்க்க மனிதர்களிடம் இருந்து எனக்கு தொடர் அழைப்பு வருகிறது. முதலமைச்சர் முதல் கார்ப்பரேட் தலைவர்கள் என பல அழைப்புகள் வருகின்றன. இந்த அழைப்புகளை, மிரட்டல் என குறிப்பிட்டால் அவை குறைத்து மதிப்பிடும் வார்த்தையாகும். இந்தியாவில், ஒவ்வொருவரும் தடுப்பூசி வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு தடுப்பூசி தரவில்லை, மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என அழைப்புகள் வருகின்றன" என தெரிவித்திருக்கிறார்.


Advertisement

image

மேலும் பேசியவர், "தற்போது நான் லண்டனில் இருக்கிறேன். எனக்கு வந்த மிரட்டல்களின் காரணமாகத்தான், வெகுநாட்களாக இங்கேயே இருக்கிறேன். இந்த சூழலில் இந்தியாவுக்கு இப்போது திரும்பும் எண்ணம் இல்லை. என்னால் தனியொரு ஆளாக அங்கே ஒன்றும் செய்ய முடியாது. தவிர இந்தியாவில் இருந்துகொண்டு மற்றவர்களின் தேவைக்கான வேலை செய்ய முடியாது. அதே சமயத்தில் வெளிநாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறோம். இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என தெரிவித்திருக்கிறார்.

'இந்தியாவில் இரண்டாம் அலை வேகம் எடுக்க யார் காரணம்' என்னும் கேள்விக்கு நேரடி பதிலளிக்க மறுத்தவர், "இந்த கேள்விக்கு சரியான பதிலோ அல்லது வேறு எந்த பதிலோ கொடுத்தால் என்னுடைய தலை இருக்காது. இந்தியாவில் நடந்த தேர்தல் குறித்தோ அல்லது கும்பமேளா குறித்தோ எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. எங்களுடைய பணியை நாங்கள் சிறப்பாக செய்தோம். 2020-ம் ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு தடுப்பூசியை கொண்டுவந்தோம்.


Advertisement

நாங்கள் தடுப்பூசி தயாரிப்பதால் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கவனம் செலுத்த வேண்டும். இது மிகவும் கடினமாக காலம். வேறு வழியில் இதனை விவரிக்க முடியாது. முடிந்தவரை மக்களை காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறோம். ரோலர்கோஸ்டரில் செல்வதுபோல இருக்கிறது. இந்த காலத்தில் என்னுடைய முடியையும் இழந்திருக்கிறேன்.

லாபம் குறித்த கேள்விக்கு, முடிந்தவரையில் செலவுகளை குறைத்திருக்கிறோம். தவறான எந்த லாபத்தையும் நாங்கள் ஈட்டவில்லை. உலகத்திலே குறைந்த விலையில் உள்ள கோவிட் தடுப்பூசி எங்களுடையதுதான். எங்களுடைய செயலை வரலாறு தீர்மானிக்கட்டும்" என தெரிவித்திருக்கிறார்.

இவருடைய இந்த பேட்டி, மே 1-ம் தேதி இங்கிலாந்து டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. ஆனால் மே 2-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரைவில் இந்தியா திரும்புவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய அந்த ட்வீட்டில், "இங்கிலாந்தில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக பல தரப்பினரிடமும் விவாத்திருக்கிறேன். பூனேவில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு செயல்பாடுகளை ஆய்வு செய்வேன்" என தெரிவித்திருக்கிறார்.

image

அதார் பூனாவாலாவின் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா அமைச்சர் சம்புராஜ் தேசாய் பேட்டியொன்றின் வழியாக, "பூனாவாலா, தன்னை யார் மிரட்டியது என்பது குறித்து விவரமாக முறைப்படி புகார் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி இங்கிலாந்து உள்ளிட்ட 68 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் 10 கோடி தடுப்பூசி (மாதத்துக்கு) தயாரிக்க இலக்கினை நிர்ணயம் செய்திருக்கிறது. அடுத்த ஆறுமாதங்களில் 250 கோடி டோஸ் தயாரிக்கவும் இலக்கினை சீரம் நிர்ணயம் செய்திருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close