Published : 30,Apr 2021 09:40 PM
கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்து தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் ஆங்காங்கே தொடர்ந்து தீ விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோன சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்தி அதன் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மருத்துவமனையின் தீ பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சென்னையில் கொரோனா சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுக்கு எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இச்சிறப்பு கருத்தரங்கை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு துவக்கி வைத்து கருத்தரங்கின் முக்கியதுவம் குறித்து சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் தீ தடுப்பு சாதனங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பற்றி கூடுதல் இயக்குனர் விஜயசேகரும், மருத்துவமனையில் தீ பாதுகாப்பு குறித்து ஓய்வு பெற்ற மாவட்ட அலுவலர் நமச்சிவாயமும், மின்சாரங்களினால் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்து நிபுணர் கோபகுமார் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் பாதுகாப்பு குறித்து நிபுணர் ரவிசங்கர் ஆகியோர் விரிவுரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள 119 கொரோனா சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் இருந்து மருத்துவமனையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.