மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம்

மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம்
மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மன்சூர் அலிகானுக்கு 2 லட்சம் அபராதம் விதித்ததுடன் அந்தத் தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்திருந்தார்.

அவரின் பேச்சு அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் புகார் அளித்தார். அதில் வடபழனி காவல் நிலையத்தில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

இந்த மனு முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் E.ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து மன்சூரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்காக வந்த நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறான நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com