[X] Close

தல தோனியின் வெற்றி சூட்சுமம் தொடருமா ? - சென்னை அணி முதலில் பவுலிங்

ஐபிஎல் திருவிழா

Does-CSK-Skipper-Dhoni-s-success-continue-in-the-match-against-SRH-and-Chennai-first-bowling

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனால் சென்னை அணி முதலில் பந்துவீசுகிறது.


Advertisement

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளையும், வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோல்வியையும் சந்தித்துள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் சென்னை அணி 10 முறையும், ஐதராபாத் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ந்து 5 ஆவது வெற்றிக்கான முனைப்பில் சென்னை அணியும், தொடர் தோல்விகளில் இருந்து மீளும் முனைப்பில் ஐதராபாத் அணியும் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சம பலத்துடன் உள்ள சிஎஸ்கே:


Advertisement

image

சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் தோல்வி அடைந்து கடந்த சீசனின் மோசமான ஃபார்மை தொடர்வதாக பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான சிஎஸ்கே, அடுத்தடுத்த 4 வெற்றிகள் மூலம் விமர்சனங்களை விளாசியடித்தது. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சரி சம பலத்துடன் வலம் வருகிறது தோனியின் படை. பேட்டிங்கில் இளம் வீரர் ருத்துராஜ் மற்றும் அனுபவ வீரர் டூபிளசி இருவரும் வலுவான தொடக்கத்தை அணிக்கு ஏற்படுத்தி கொடுப்பது அணிக்கு பெரும் பலமாக உள்ளது. ரெய்னா, ராயுடு, தோனி என அணியின் முன் வரிசை பேட்டிங் அனுபவ நட்சத்திரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மத்திய வரிசை பேட்டிங்கைப் பொறுத்தவரை அதிரடி அஸ்திரமாக வலு சேர்க்கிறார். சாம் கரண், பிராவோ, சர்தூல் தாகூர் ஆகியோரும் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம். ஃபார்மில் இருந்த மொயில் அலி முந்தைய போட்டியில் களமிறங்காத நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது கேள்விக்குறியாக உள்ளது.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் தீபக் சாஹர் நிலையான ஃபார்மை வெளிப்படுத்த தவறுவது பின்னடைவே. சாம்கரண் முக்கிய தருணங்களில் விக்கெட்டைச் சரிக்க பக்கபலமாக உள்ளார். சர்தூல் தாக்கூர் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது நல்ல செய்தி. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, தாஹிர் அசுரபலமாக உள்ளனர். ராயுடு கடந்த போட்டியில் காயமடைந்த நிலையில் அவருக்கு மாற்றாக கிருஷ்ணப்பா கவுதம் அல்லது ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப இங்கிடி அல்லது தாஹிர் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது.


Advertisement

தொடர் தோல்விகளால் துவண்டுள்ள ஐதராபாத் அணி:

களமிறங்கிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத். சவால்கள் மிகுந்த சென்னை மைதானத்தில் சிறப்பான தொடக்கங்களைப் பெற்ற போதிலும், நூலிழையில் சில போட்டிகளில் கோட்டை விட்டது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் வார்னர் நிலையான ஃபார்மை வெளிப்படுத்த தவறி வருகிறார். பேர்ஸ்ட்டோவ் அதிரடிகளால் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பது பலமாக பார்கக்ப்படுகிறது. கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பி நேர்த்தியாக ரன்களைச் சேர்த்துக் கொடுப்பது புதிய உத்வேகத்தை அணிக்கு கொடுத்துள்ளது. இவர்கள் மூவரும் முன்வரிசையை தங்கள் அனுபவங்களால் அலங்கரிப்பது ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கத்திற்கான வித்தாக உள்ளது.

அணியின் மத்திய வரிசை அனுபவமில்லாத வீரர்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது பெரும் பின்னடைவு. முதிர்ச்சியுடன் ஆட்டத்தை நகர்த்தும் அளவிற்கு வீரர்கள் இல்லை என்பது நிதர்சனம். இருப்பினும் விஜய்சங்கரின் சராசரியான பங்களிப்பு ஆறுதல். அபிஷேக் சர்மா வழக்கமான அதிரடியை வெளிக்கொணரும் பட்சத்தில் அணி மத்திய வரிசையில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷீத் கான் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கில் சோபிப்பாரா என்பது கேள்விக் குறியே. ஆல்ரவுண்டர் சுச்சித்தின் பங்களிப்பு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் புவ்னேஷ்குமார் மீண்டும் அணிக்கு திரும்பி பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலீல் அகமது ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுப்பது பின்னடைவாக உள்ளது. சித்தார்த் கவுலின் பந்து வீச்சு அணிக்கு ஆறுதலாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் ரஷீத் கான் தனது வழக்கமான சுழல்களால் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். விஜய்சங்கரின் வேகம் பந்து வீச்சுக்கு கூடுதல் பலம்.

ஐதராபாத் அணி இது வரை விளையாடிய அனைத்து போட்டிகளும் சென்னையில் நடைபெற்ற நிலையில் முதல் முறையாக டெல்லியில் களம் காண்கிறது. புதிய மைதானத்தில் புத்துணர்வுடன் விளையாடி வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Advertisement

Advertisement
[X] Close