Published : 27,Apr 2021 06:01 PM

அரசு தரவுகளைவிட எரியூட்டப்படும் சடலங்கள் அதிகம்: டெல்லி கொரோனா பலி எண்ணிக்கையில் குழப்பம்

Over-1-000-Covid-Deaths-Missing-In-Delhi-Data--Reveal-Civic-Records

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில், பிற மாநிலங்களைவிடவும் டெல்லி மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருகின்றது. மிக முக்கியமாக, டெல்லியில் கொரோனவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் மிக வேகமாக அதிகரித்து, கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றது. அதன் எதிரொலியாக, மயானங்களில் மரண ஓலம் காதுகளைப் பதம் பார்க்கிறது. இம்மரண வலிக்கு பின்னால், நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், டெல்லி அரசு சொல்லும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும், மயானங்களில் எரிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது.

இவையாவும் தரவுகளின் வழியாக தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கொரோனா மரணங்கள் தொடர்பான வெளிப்படையான எண்ணிக்கையை மத்திய, மாநில அரசுகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து டெல்லியில், களத்தில் நின்று பணியாற்றும் பத்திரிகையாளர்கள், புகைப்படப் பத்திரிகையாளர்கள், செய்தி சேனல் ஒளிப்பதிவாளர்கள் சில தகவல்களை அளித்துள்ளனர்.

"டெல்லியில் உள்ள ஒவ்வொரு மயானத்திலும் நூற்றுக்கணக்கான சடலங்களை எரிக்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால், அரசு கொடுக்கும் புள்ளிவிவரமும் இதற்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது" என்று அவர்கள் உறுதிபட சொல்கின்றனர்.

 இதற்கான சிறந்த உதாரணம், டெல்லியில் உள்ள மாநகராட்சிகளுக்கு கீழ் வரக்கூடிய 26 மயானங்களில், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை, உரிய மருத்துவச் சான்றிதழ்களுடன் கொரோனாவால் உயிரிழந்த 3,096 பேரின் உடல்கள் எரிக்கப்பட்டதாக தரவுகள் சொல்கின்றன. ஆனால், இதே தேதி இடைவெளியில், டெல்லி அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தினசரி கொரோனா மரணங்கள் தொடர்பான விவரங்களை பார்க்கும்போது, அதில் 1,938 மரணங்கள் மட்டும்தான் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், அரசு குறிப்பிடாத மீதமுள்ள 1,158 உடல்கள் என்ன கணக்கில் வரும்? அவை எரிக்கப்பட்டதை அரசாங்கம் ஏன் கணக்கில் கொண்டு வரவில்லை? இந்தக் கேள்விக்கு, அரசு மட்டுமே விடை சொல்ல வேண்டும். ஆனால் அரசோ இக்கேள்விகளுக்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

எனில் எங்கே தவறு நடைபெறுகிறது என அறிய மயான ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "மருத்துவமனைகளில் இருந்து உரிய சான்றிதழுடன் வரக்கூடிய உடல்களை மட்டுமன்றி, வீட்டிலிருந்து கொரோனாவால் உயிரிழந்து மயானத்துக்கு வரும் உடல்களையும் நாங்கள் எரிக்கின்றோம். கொரோனா சான்றிதழ் இல்லாமல், தனிப்பட்ட முறையில் இப்படி வரும் அனைத்து சடலங்களையும், சாதாரண மரணம் என பதிவு செய்து கொண்டு எரிக்கின்றோம்.

இதில், சாதாரண மரணம் போல, எந்தவொரு சான்றிதழும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல், மயானத்துக்கு வந்துவிட்டு, இங்கே வந்தபின், இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் தாங்களே முன்வந்து, அவர்கள் கொண்டுவந்த சடலம், உறுதிபட கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்தான் என கூறுகின்றனர். அப்படி அவர்கள் சொல்லும்போது, அம்மரணத்தை சந்தேகத்திற்குரிய மரணம் என பதிவு செய்துவிட்டு, அந்த உடல்களை கொரோனா நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உடல்களை எரிப்போம்" என கூறியுள்ளனர்.

 image

இப்படி உறவினர்கள் சொன்னதற்காக, சந்தேக மரணம் என பதிவுசெய்யப்பட்ட சடலங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தினால், அரசின் எண்ணிக்கையில் மாற்றம் வரக்கூடும் என்றும், அந்த மாற்றம், எண்ணிக்கை ஒத்துப்போக வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், இதற்கெல்லாம் டெல்லி அரசுக்கு நேரம் இல்லை என்பது, முகத்தில் அறையும் உண்மை. அந்த உண்மையின் விளைவு, பரிசோதித்து உறுதிசெய்யப்படாத கொரோனாவால் இறக்கும் பலரது சடலங்களை ஏந்திக்கொண்டு, அவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருக்கும் காட்சிகள். இக்காட்சிகள், காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கிறது.

 மொத்தத்தில், டெல்லியிலுள்ள ஒவ்வொரு மயானங்களும் சடலங்களால் நிரம்பி வழிகிறது. ஒரு நாளைக்கு 10 முதல் 15 சடலங்கள் வந்து கொண்டிருந்த இடத்தில், தற்பொழுது ஒரேநாளில் 70-க்கும் மேற்பட்ட சடலங்கள் வருவதால் கூடுதலாக சடலங்களை எரிக்கும் மேடைகளை புதிதாக கட்டி வருவதாக, மயானங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வருத்தத்துடன் நம்மிடம் பதிவுசெய்கின்றனர்.

 இப்படி சந்தேக மரணம் அதிகரிப்பு, கொரோனா உறுதிசெய்யப்படாத - ஆனால் உறவினர்களால் கொரோனா என சொல்லப்படும் மரணங்கள் என மரணிப்போர் சார்ந்து பல குழப்பங்கள் டெல்லியில் நிகழ்ந்து வருகின்றது. சோகம் என்னவெனில், டெல்லியில் நிலவிவரும் இந்தத் தொடர் குழப்பம் குறித்து, டெல்லி அரசாங்கத்தின் சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

- நிரஞ்சன் குமார்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்