Published : 25,Apr 2021 09:21 PM
கேரளா: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணமகனை பாதுகாப்பு கவச உடையுடன் கரம் பிடித்த மணமகள்!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் வேகமெடுத்துள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை பாதுகாப்பு கவச உடை (PPE Kit) அணிந்து கொண்டு மணமகள் ஒருவர் கரம் பிடித்துள்ளார். மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இருவரும் இல் வாழ்க்கையில் இணைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இந்த திருமணம் நடந்துள்ளது.
அந்த மாவட்டத்தில் உள்ள குட்டநாடு தாலுக்காவின் கைனாகரி கிராமத்தை சேர்ந்த சரத் மோன் என்பவர்தான் மணமகன். அவருக்கு பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் திருமண தேதி நெருங்கிய நிலையில் அவருக்கும், அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்துவதில் சிக்கல் இருந்தது. இருப்பினும் குறித்த தேதியில் திருமணத்தை முடிக்க இரு வீட்டாரும் விருப்பம் தெரிவித்தனர்.
அதனால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மணமகள் கவச உடை அணிந்து அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் திருமணம் இனிதே நடந்துள்ளது. கேரள சம்பிரதாயப்படி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மணம் முடித்தனர்.