[X] Close

பீகாரில் சாமானியர் ஆரம்பித்த ஆக்சிஜன் வங்கி - 900 உயிர்களைக் காப்பாற்றிய கவுரவ்!

சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

Patna-man-gaurav-roy-saves-900-lives-by-giving-oxygen-cylinders

தான் அனுபவித்த கஷ்டம் இனி யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்துடன், கொரோனா பேரிடரில் இதுவரை 900 பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய்.

சமீபத்தில் இரண்டு பேரின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வந்தன. ஒருவர் மும்பையைச் சேர்ந்த ஷாஹனாவாஸ் என்ற இளைஞர். இவர் கொரோனா காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தனது காரை விற்று மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்து வருகிறார். மக்களுக்கு உதவுவதற்காக ஷாஹனாவாஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ரூ.22 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி காரை விற்றுள்ளார். காரை விற்று கிடைத்த பணத்தில் ஷாஹனாவாஸ் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கினார். இதை தனது இடத்தில் வைத்திருப்பவர், ஆக்சிஜன் சிலிண்டர் உதவி என்று கேட்டு அவரை தொடர்புகொண்டால், உடனே சிலிண்டரை கொண்டு டெலிவரி செய்து வருகிறார். (விரிவாக வாசிக்க > காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!)

இதேபோல் இன்னொருவர் பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய். பக்கவாதம் காரணமாக, கடந்த 2019-ல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார், கவுரவ். ஆனால் எதோ ஓர் எண்ணம் தடுக்க, மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். அது தற்போது எவ்வளவு நன்மை பயக்கிறது என்பது அவரால் தற்போது உதவி பெற்று உயிர் பிழைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் கவுரவும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Advertisement

மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதியும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் வசதியும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனை படிக்கட்டுகளுக்கு கீழேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தவர் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்துள்ளார். இதன்பின் அவரின் மனைவி நீண்ட மணி நேரங்களுக்கு பிறகு ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்து கொண்டுவர அதன்பிறகே உயிர் தப்பியுள்ளார்.

தான் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக தற்போது தனது சொந்த பணத்தில் தன் வீட்டிலேயே, சிறிய ஆக்சிஜன் வங்கி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். 10 ஆக்சிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்ட இந்த வங்கி தற்போது 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளவுக்கு மாறியுள்ளது.

இதைக்கொண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக தனது காரில் கொண்டுபோய் வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலன் தேறிய பின்னரே தனது ஆக்சிஜன் சிலிண்டரை மீண்டும் எடுத்துக்கொள்கிறார். பாட்னா மட்டுமல்லாமல் பீகாரின் 18 மாவட்ட மக்களும் இவரை தொடர்புகொண்டு தற்போது சேவையை பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ``நான் நடமாடும் வரை இந்தப் பணியை செய்வேன்" எனக் கூறியிருக்கும் கவுரவ், இதுவரை காப்பாற்றியிருப்பவர்களின் எண்ணிக்கை 900 என பீகார் உள்ளூர் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு இவர்களே உதாரணம்!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close