[X] Close

MI vs PBKS : டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு - தோல்வியை தவிர்க்க போவது யார்?

ஐபிஎல் திருவிழா

PBKS-versus-MI-plays-at-League-Match-Number-17-of-the-IPL-2021-at-Chennai-Chepauk-and-Punjab-Kings-won-the-toss-and-elected-to-bowl-first

நடப்பு ஐபிஎல் சீசனின் 17வது லீக் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் மும்பை அணி முதலில் பேட் செய்கிறது.


Advertisement

இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் மும்பை 14 போட்டிகளிலும், பஞ்சாப் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. 

பஞ்சாப் அணி நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது அந்த அணி. ஹாட்ரிக் தோல்விக்கு விடை கொடுக்கும் முனைப்பில் அணியில் பல மாற்றங்களை செய்யவும் வாய்ப்பு உள்ளது. 

பேட்டிங்கில் சறுக்கல்; பந்து வீச்சில் மிரட்டல் - மும்பை அணியின் நிலை என்ன?


Advertisement

பந்து வீச்சாளர்களின் மிரட்டலான பங்களிப்பால் களமிறக்கிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ். பேட்டிங் முன்வரிசையில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவின் ஃபார்ம் ஆறுதல் அளித்தாலும், மற்றொரு தொடக்க வீரர் டிகாக் மோசமான ஃபார்மில் உள்ளது அணிக்கு பின்னடைவே. ஃபார்மில் இருந்த லின்னிற்கு மாற்றாக டிகாக் களமிறக்கப்பட்டது சற்று விமர்சனங்களுக்கு வித்திட்டது. சூர்ய குமார் யாதவின் ஃபார்ம் முன் வரிசைக்கு பக்கபலம். இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடிகளை வெளிப்படுத்த திணறுவது மும்பை அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

மத்திய வரிசையில் பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படும் ஹர்த்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணல் பாண்ட்யா மூவரும் நம்பிக்கையளிக்கும் விதமான ஆட்டங்களை வெளிப்படுத்த தொடர்ந்து திணறி வருகின்றனர். இது அணிக்கு பேட்டிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஃபீல்டிங்கில் ஹர்திக்கும், பந்து வீச்சில் பொல்லார்டும் ஆறுதல் அளித்து வருகின்றனர்.

பேட்டிங்கில் கடும் சிக்கல்களைச் சந்தித்து வரும் மும்பை அணிக்கு போராட்ட குணத்துடன் வலு சேர்த்து வருகிறது அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் படை. பும்ராவும், போல்ட்டும் யார்கர்களால் எதிரணியினரை திணறடிக்க, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ் ஆகியோர் எதிரணியின் ரன் வேகத்தை தங்கள் சுழல் சூத்திரங்களின் மூலம் குறைத்து விக்கெட்டுகளையும் சரிக்கின்றனர். முந்தைய போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கிய மும்பை, பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கூல்டர் நெய்ல் அல்லது ஜேம்ஸ் நீஷமை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ரிக் தோல்வியால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ்:

களமிறங்கிய முதல் போட்டியில் மட்டும் வெற்றி, அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி. இது தான் பெயரை மாற்றி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் நடப்பு சீசன் நிலைமை. சீசனின் தொடக்கத்தில் பேட்டிங்கில் அதிரடிகளைக் காட்டிய பஞ்சாப் அணி அதன் பின்னர் பெரிதளவில் சோபிக்கவில்லை. முன்வரிசை பேட்டிங்கில் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் சொல்லும்படியான அளவிற்கு ஃபார்மில் இல்லை. பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட யுனிவர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கும் நடப்பு சீசன் மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லை. கடந்த சீசனில் அணிக்கு பெரும் வலிமையாக பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரனுக்கு நடப்பு சீசனில் அதிர்ஷ்டம் ஒரு போட்டியில் கூட கை கூடவில்லை. முன்வரிசையில் உள்ள இந்த 4 வீரர்களும் மோசமான ஃபார்மில் இருப்பது அணிக்கு சோதனையே.

மத்திய வரிசையில் தீபக் ஹூடா ஓரளவு ஆறுதல் அளிக்கிறார். அதிரடி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஷாரூக்கான் பஞ்சாப் அணியை சரிவிலிருந்து மீட்கும் அஸ்திரமாக பலம் சேர்த்து வருகிறார். ஒரே ஒரு போட்டியில் களமிறங்கியுள்ள ஃபேபியன் ஆலன் மற்றும் ஹென்ரிக்கஸ் ஆறுதலான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் முகமது ஷமி பெரிதளவில் சோபிக்காதது பெரும் பின்னடைவே. இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் சராசரியான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவது ஆறுதல். சுழற்பந்து வீச்சில் ஃபேபியன் ஆலன், முருகன் அஸ்வின், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் நம்பிக்கை. மற்றொரு ஆல்ரவுண்டர் ஹென்ரிக்கஸ் பந்து வீச்சிற்கு கூடுதல் பலம்.

உலகின் நம்பர் ஒன் இருபது ஓபர் பேட்ஸ்மேனான டேவிட் மலனை பஞ்சாப் அணி ஒரு போட்டியில் கூட களமிறக்காமல் இருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் பேட்டிங் முன் வரிசையில் பூரன் அல்லது கிறிஸ் கெய்லுக்கு மாற்றாக டேவிட் மலான் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close