
தடுப்பூசி தட்டுப்பாடு, விலையேற்றம், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து பற்றாக்குறை மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், நம்பிக்கையளிக்கும் வகையில் உதவிக்கரம் நீட்டுவதே ஆட்சியாளர்களின் கடமை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் நாசிக் முதல் வேலூர் வரை பலர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது நெஞ்சை பிளப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். வரும் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், ஆனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், அதன் விலையை மருந்து நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது மாநிலங்களுக்கு பெரும் சுமை எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பு விதிகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனவும், மே 2-க்கு பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.