Published : 23,Apr 2021 07:15 AM
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவும் நிலையில், அதிக பாதிப்பு நிலவும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை படுவேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காலை பத்து மணிக்கு உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார்.
முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பின் மதியம் 12.30 மணிக்கு நாட்டின் முன்னணி ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆய்வு மேற்கொள்கிறார். இன்றைய மேற்கு வங்க தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்துவிட்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது குறிப்பிடத்தக்கது.