மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை

மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், 'தென்னாபிரிக்க உருமாற்றம் பெற்ற கொரோனா' மற்றும் 'இரண்டு முக்கிய உருமாற்றங்கள் உள்ள கொரோனா' என பல வகைகள் குறித்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதன் இன்னொரு பரிமாணமாக தற்போது மூன்று முக்கிய உருமாற்றங்கள் கொண்ட 'பெங்கால் கொரோனா' குறித்த அச்சம் பரவி வருகிறது.

இந்த உருமாறிய 'பெங்கால் கொரோனா' குறித்து விஞ்ஞானி டாக்டர் டி.வி வெங்கடேஸ்வரன் கூறும்போது, அதன் மூன்று அம்சங்களை அடுக்கினார். அவை:

1. மனித செல்களை அதிக வலுவுடன் பற்றிக்கொள்வது
2. மனித செல்களில் அதிக தீவிரத்துடன் பெருகுவது
3. மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியிடம் சிக்காமல் தப்புவது.

இந்த காரணங்களினால் 'மும்முறை உருமாற்றம் அடைந்த கொரோனா' தொற்றின் பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது. இதுகுறித்து அவர் மேலும் விவரிக்கும்போது, " 'பிரேசில் கொரோனா' மற்றும் 'பிரிட்டன் கொரோனா' என்று அழைக்கப்படும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கிருமிகளில் பல உருமாற்றங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானவை எவை என கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் ஒருமுறை உருமாறிய கொரோனா அல்லது இருமுறை உருமாறிய கொரோனா என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வகையில் 27 உருமாற்றங்கள் கண்டறியப்பட்டது. ஆனால் அதில் ஒன்று மட்டுமே முக்கியமானதாக இருந்ததால் 'ஒருமுறை உருமாறிய கொரோனா' என பொதுவாக அழைக்கப்படுகிறது.

'B.1.618' என்று பெயரிடப்பட்டு, 'பெங்கால் கொரோனா' என இந்த வகை வழங்கப்படுகிறது. மரபணு வரிசைகளை கண்டறியும் பணியில் நாம் தீவிரமாக ஈடுபட்டால், மேலும் பல கொரோனா வைரஸ் வகைகளை அடையாளம் கண்டு பதிவு செய்ய இயலும். இதற்கு தேவையான உள்கட்டமைப்பு, மற்றும் ஆராய்ச்சி வசதிகள் நம் நாட்டில் உள்ளது. போதிய ரசாயனங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, மரபணு வரிசைகளை கண்டறிந்து பதிவு செய்ய முடியும். இந்த 'ஜீனோம் சீக்வென்சிங்' பதிவுகளால் வைரஸின் தீவிரத்தை கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுத்து பரவலை கட்டுப்படுத்தலாம்" என்கிறார்.

'பெங்கால் கொரோனா வைரஸ்' என்று அழைக்கப்பட்டாலும் மும்முறை உருமாற்றம் கண்ட இந்த உருமாறிய கொரோனா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளதாக மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். போதிய ஆராய்ச்சி மூலமே இந்த தகவல் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது என அவர்கள் கருதுகிறார்கள்.

எல்லா உருமாற்றங்களும் வைரஸ் கிருமிகளை கூடுதல் தீவிரம் கொண்டவையாக மாற்றுவதில்லை. சில உருமாற்றங்களால் வைரஸ் கிருமிகள் பலவீனம் அடைவதும் உண்டு. மேலும், உருமாற்றம் என்பது சாதாரணமாக நடைபெறும் நிகழ்வே என மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கருதுகின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com